search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஹுதைபிய்யா ஒப்பந்தமும் முஸ்லிம்களின் அதிருப்தியும்
    X

    ஹுதைபிய்யா ஒப்பந்தமும் முஸ்லிம்களின் அதிருப்தியும்

    ஹுதைபிய்யா ஒப்பந்தத்தில் மக்களுக்கு அதிருப்தி தந்த நிபந்தனை, 'மக்காவிலிருந்து ஒருவர் மதீனாவிற்கு வந்தால், அவர் இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்தாலும், அவரை மீண்டும் மக்காவிற்கே திருப்பியனுப்பி விட வேண்டும்' என்பது.
    ஹுதைபிய்யா ஒப்பந்தத்தில் மக்களுக்கு அதிருப்தி தந்த நிபந்தனை, 'மக்காவிலிருந்து ஒருவர் மதீனாவிற்கு  வந்தால், அவர் இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்தாலும், அவரை மீண்டும் மக்காவிற்கே திருப்பியனுப்பி விட வேண்டும்' என்பது.

    குறைஷிகளின் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த சுஹைல் இப்னு அம்ருடைய மகன் அபூ ஜந்தல் தம் கால்கள் பிணைக்கப்பட்டிருக்க விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்து வந்தார்கள். அவர்கள் மக்காவின் கீழ் பகுதியிலிருந்து தப்பி வந்து முஸ்லிம்களிடையே தஞ்சம் புகுந்தவர். உடனே அவரின் தந்தையான சுஹைல், 'முஹம்மதே! ஒப்பந்தப்படி முதலாவதாக, இவரை எங்களிடம் ஒப்படைக்கும்படி உங்களிடம் கோருகிறேன்' என்றார்.

    அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நாம் இன்னும் இந்த நிபந்தனையை எழுதி முடிக்கவில்லையே' என்று பதிலளித்தார்கள். அதற்கு சுஹைல், 'அப்படியென்றால், உங்களிடம் நான் எந்த அடிப்படையிலும் ஒருபோதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டேன்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'இவரை மட்டுமாவது நான் திருப்பியனுப்பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள்' என்று கூறினார்கள்.

    அதற்கு சுஹைல், 'நான் உங்களுக்கு அனுமதி தர மாட்டேன்' என்று கூறினார். மிக்ரஸ் என்பவர், 'நாம் அதற்கு உங்களுக்கு அனுமதியளித்து விட்டோம்' என்று கூறினார். அபூ ஜந்தல்(ரலி), 'முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக உங்களிடம் வந்திருக்க, என்னை இணைவைப்பவர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்' என்று வருந்தினார். அவர் இறைவழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார்.

    உடனே உமர்(ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “நீங்கள் சத்தியமாக இறைத்தூதர் தானே? நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் தானே இருக்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “ஆம், அதில் என்ன சந்தேகம்?” என்று பதிலளித்தார்கள்.

    அதற்கு உமர்(ரலி), 'அப்படியானால் இந்த நிபந்தனைகளை ஏற்று நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்? விரைவில் நாம் இறையில்லம் கஅபாவை வலம் வருவோம்' என்று தாங்கள் எங்களுக்குச் சொல்லி வந்திருக்கவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நபிகளார், “ஆம். ஆனால், நாம் இந்த ஆண்டே கஅபாவுக்குச் செல்வோம் என்று நான் உங்களுக்குச் சொன்னேனா?' எனக் கேட்டார்கள். உமர்(ரலி), 'இல்லை' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் நிச்சயம் கஅபாவுக்குச் சென்று அதை வலம்வருவீர்கள்' என்று கூறினார்கள்.

    பிறகு, நபி(ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி, 'எழுந்து சென்று குர்பானி கொடுத்துவிட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள்' என்று உத்தரவிட்டார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள்.

    இருந்தும், அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தால் தம் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் சென்று மக்களின் அதிருப்தியையும், அதனால் அவர்கள் தமக்குக் கீழ்ப்படியாமலிருப்பதையும் சொன்னார்கள். உடனே உம்மு ஸலமா(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தியாகப் பிராணிகளை அறுத்து முடியை களையப் புறப்படுங்கள். உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்' என்று ஆலோசனை கூறினார்கள்.

    உடனே, நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்துவிட்டு, தலைமுடியைக் களைந்தார்கள். அதுவரை அவர்கள் எவரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று தியாகப் பிராணிகளை அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியைக் களையத் தொடங்கினார்கள்.

    ஸஹீஹ் புகாரி 3:53:2731

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×