search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குறைஷிகளுடன் பெருமானார் உருவாக்கிய ஒப்பந்தம்
    X

    குறைஷிகளுடன் பெருமானார் உருவாக்கிய ஒப்பந்தம்

    குறைஷிகள் உஸ்மான்(ரலி) அவர்களை உடனேயே விடுவித்ததுடன் சமாதான ஒப்பந்தம் செய்யவும் ஒப்புக் கொண்டனர்.
    குறைஷிகளிடம் செய்தி சொல்லச் சென்ற உஸ்மான்(ரலி) கொலை செய்யப்பட்டுவிட்டார் என்று செய்தி பரவியது. அதனால் முஸ்லிம்கள் குறைஷிகள் மீது போர் தொடுக்க ஆயத்தமாகிவிட்டனர் என்ற செய்தி குறைஷிகளை எட்டியது. குறைஷிகள் உஸ்மான்(ரலி) அவர்களை உடனேயே விடுவித்ததுடன் சமாதான ஒப்பந்தம் செய்யவும் ஒப்புக் கொண்டனர்.

    குறைஷிகளின் சார்பாக சுஹைல் என்பவரை நபிகளாரிடம் குறைஷிகள் அனுப்பி வைத்தனர். சுஹைல் என்றால் இலகுவானது என்று பொருள். ஆகையால் அவர் சமாதானத்திற்காக வருகிறார் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

    இரு தரப்பினரும் சமாதானத்திற்கான அம்சங்களை ஒப்பந்தப் பத்திரமாக எழுத முன் வந்தனர். இந்த ஒப்பந்தம் ஹுதைபிய்யா எனுமிடத்தில் நடைபெற்றதால் இதற்கு ஹுதைபிய்யா ஒப்பந்தமென்று பெயர்.

    நபி(ஸல்) ஒப்பந்தப் பத்திரத்தை அலீ இப்னு அபுதாலிப்(ரலி) அவர்களை எழுதச் சொன்னார்கள். அலீ(ரலி) ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ அதாவது அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயரால் என்று எழுதும் போது அதனைத் தடுத்து சுஹைல், " ‘அல்லாஹ்வே உனது பெயரால்’ என்று மட்டும் எழுதுங்கள்‌. எங்களுக்கு ரஹ்மான் என்றால் யாரென்று தெரியாது"என்றார். அதனை ஏற்று நபி(ஸல்) அவர்களும் அலீ(ரலி) அவர்களை அவ்வாறே எழுதச் சொன்னார்கள்.

    அடுத்ததாக ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்’ என்று அலீ(ரலி) எழுத, இணைவைப்பவர்கள் இடைமறித்து, ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மது’ என்று எழுதாதீர்கள், என்று சொல்லிவிட்டு முஹம்மத்(ஸல்) அவர்களை நோக்கி, 'நீர் அல்லாஹ்வின் தூதராக இருந்திருந்தால் நாங்கள் உம்முடன் போரிட்டிருக்க மாட்டோம்' என்று கூறி அதனை மாற்றி முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் அதாவது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று எழுதச் சொன்னார்.

    அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் நான் பொய் சொல்வதாகக் கருதினாலும் நிச்சயம் நான் இறைத்தூதர்தான். இருந்தாலும் உங்கள் விருப்பப்படி மாற்றிவிடுகிறோம்’ என்று கூறி நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம், 'அதை அழித்து விடுங்கள்' என்று கூறினார்கள். அலீ(ரலி), 'நான் அதை ஒருபோதும் அழிக்கப் போவதில்லை' என்று கூறி மறுத்தார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் திருக்கரத்தால் அதை அழித்தார்கள்.

    பிறகு சுஹைலுக்கு நபி(ஸல்) அவர்கள், 'எங்களை இந்த ஆண்டு இறையில்லத்திற்குச் செல்ல விடாமலும் அதை நாங்கள் வலம்வர விடாமலும் தடுக்கக் கூடாது' என்று எழுதச் சொன்னார்கள். உடனே சுஹைல், 'இதை ஏற்க முடியாது. இந்த ஆண்டே உம்ரா செய்ய நாங்கள் உங்களுக்கு அனுமதியளித்தால், நாங்கள் உங்கள் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விட்டோம்' என்று அரபுகள் பேசிக் கொள்வார்கள். ஆயினும், வருகிற ஆண்டில் நீங்கள் உம்ரா செய்து கொள்ளலாம். ஆனால் சாதாரணமாக ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களை மட்டும் எடுத்து வரலாம். ஆனால், அவற்றை உறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்' என்று கூறினார்; அவ்வாறே எழுதப்பட்டது.

    அடுத்த நிபந்தனை, இணைவைப்பவர்களிடையேயிருந்து அதாவது மக்காவாசிகளிலிருந்து மதீனாவுக்குத் தப்பித்து வருபவரை, அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட மக்காவாசிகளிடமே திருப்பியனுப்பி விட வேண்டும். மக்காவிற்கு வரும் முஸ்லிம்களை இணைவைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் திருப்பியனுப்ப மாட்டார்கள். இந்த நிபந்தனையைக் கேட்ட முஸ்லிம்கள் எரிச்சலடைந்தார்கள். ஆனால், இந்த நிபந்தனையை ஏற்றாலன்றிச் சமாதான ஒப்பந்தத்தை எழுத முடியாது என்று சுஹைல் தீர்மானமாக மறுத்துவிட்டார்.

    குறைஷிகளுடன் தகராறு செய்யாமல்விட்டுக் கொடுத்து ஒத்துப் போனதற்கான காரணம், 'அல்லாஹ்வினால் புனிதமானவையாக அறிவிக்கப்பட்ட மக்கா நகரத்தை கண்ணியப்படுத்துகிற எந்த ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டாலும் அதை அவர்களுக்கு நான் வகுத்துக் கொடுப்பேன்' என்று முன்பே நபி(ஸல்) சொல்லியிருந்ததை நிறைவேற்றுவதற்காக.

    ஸஹீஹ் புகாரி 3:53:2698,2731,2732

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×