search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குறைஷிகளின் கோபமும் உடன்படிக்கை ஒப்பந்தமும்
    X

    குறைஷிகளின் கோபமும் உடன்படிக்கை ஒப்பந்தமும்

    ‘போர் நிறுத்த உடன்படிக்கை செய்ய நபிகளார் விரும்புகிறார், அவர்களது நோக்கம் உம்ரா செய்வது மட்டுமே’ என்று குறைஷிகளின் தலைவர்களில் ஒருவரான உர்வா இப்னு மஸ்வூத் தமது கூட்டத்தினரிடம் எடுத்துரைத்தார்.
    உம்ரா செய்வதற்காக நபி முஹம்மது (ஸல்) தமது தோழர்களுடன் மக்கா நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். தங்களுடைய வழியில் காலித் இப்னு வலீத் படையுடன் நிற்பதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் தன்யீம் வழியாக மக்கா செல்லும் பாதையை விட்டுவிட்டு வேறு வழியைத் தேர்ந்தெடுத்தார்கள்.

    மலைகளுக்கிடையில் கரடு முரடான கற்களும், பாறைகளும் நிறைந்த பாதை வழியே, ஹுதைபிய்யா செல்லும் வழியில் பயணத்தைத் தொடங்கினார்கள். இவ்வழி கீழ்ப்புறமாக மக்கா செல்லும் வழியாக இருந்தது. இஸ்லாமியப் படை வேறு வழியில் செல்கிறார்கள் என்று தெரிந்தவுடன், தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த காலித், குறைஷிகளை எச்சரிப்பதற்காக மக்காவிற்கு விரைந்தார்.

    ‘போர் நிறுத்த உடன்படிக்கை செய்ய நபிகளார் விரும்புகிறார், அவர்களது நோக்கம் உம்ரா செய்வது மட்டுமே’ என்று குறைஷிகளின் தலைவர்களில் ஒருவரான உர்வா இப்னு மஸ்வூத் தமது கூட்டத்தினரிடம் எடுத்துரைத்தார்.

    போர் வெறிபிடித்த குறைஷி வாலிபர்கள் தங்களின் தலைவர்கள் சமாதான உடன்படிக்கையில் ஆர்வமாக இருப்பதை விரும்பவில்லை. உடனே, அதைத் தடுக்க வேண்டுமென ஆலோசித்து, அந்த இரவே முஸ்லிம்களின் கூடாரத்திற்குள் புகுந்து போரைத் தூண்டும் சதி செயல்களைச் செய்வதற்காகக் கிட்டத்தட்ட எழுபது நபர்கள் முஸ்லிம்களின் கூடாரத்தை நோக்கிப் பாய்ந்தனர். ஆனால், பாதுகாப்புக்காக நபிகளாரால் நியமிக்கப்பட்ட படை வீரர்கள் எதிரிகளைச் சுற்றிவளைத்துக் கைது செய்தனர். நபி (ஸல்) அவர்கள் உம்ராவை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்ததால் சமாதானமாகி அனைவரையும் மன்னித்து விடுதலை செய்து விட்டார்கள்.

    அப்போது இறைவசனம் அருளப்பட்டது, அதில் “மக்காவின் சமீபமாக அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் பின்னர், அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்களுடைய கைகளையும் அவர்களை விட்டும் அவனே தடுத்தான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்” என்ற இறைவசனம்  நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நடவடிக்கையைப் பற்றியதாக இருந்தது.

    குறைஷிகள் புரிந்து கொள்ளாமல் சதி செய்வதால் நபி(ஸல்) தமது தோழர் உஸ்மான் இப்னு அஃபானை அனுப்பி “நாம் போருக்காக வரவில்லை உம்ராவிற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று குறைஷிகளிடம் எடுத்துச் சொல்லுங்கள்! பிறகு அவர்களை இஸ்லாமின் பக்கம் அழையுங்கள். மக்காவிலிருக்கும் முஸ்லிம்களிடம், ‘அல்லாஹ் அவனது மார்க்கத்தை மக்காவில் ஓங்கச் செய்வான். ஆகவே, யாரும் இறை நம்பிக்கையை மறைத்து வாழ வேண்டிய அவசியமேற்படாது’ என்ற நற்செய்தியைக் கூறுங்கள்” என்று உஸ்மானை அனுப்பி வைத்தார்கள்.

    உஸ்மான்(ரலி) அவர்கள் குறைஷிகளிடம் தகவல் தந்தார்கள். செய்தியைக் கேட்ட குறைஷிகள் உஸ்மானை மக்காவில் தடுத்து வைத்துக் கொண்டனர். ஆனால், உஸ்மான் (ரலி) கொலை செய்யப்பட்டு விட்டார் என்று செய்தி பரவியது. ஆகையால் முஸ்லிம்கள் கொதித்தனர். நபி தோழர்களில் ஒரு கூட்டம் “மரணம் வரை போர் புரிவோம்” என்று நபியவர்களிடம் ஒப்பந்தம் செய்தனர்.

    முஸ்லிம்கள் தங்கள் மீது பயங்கரமான முறையில் போர் தொடுக்க ஆயத்தமாகி விட்டனர் என்ற செய்தி குறைஷிகளுக்குத் தெரிய வரவே, இனியும் உஸ்மானை தடுத்து வைத்திருப்பது உசிதமல்ல என்று உடனடியாக உஸ்மான்(ரலி) அவர்களை அனுப்பி விட்டனர்.

    உடன்படிக்கைக்குக் குறைஷிகள் ஒப்புக்கொண்டனர்.

    ஆதாரம்: அர்ரஹீக் அல்மக்தூம், திருக்குர்ஆன் 48:24

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×