search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உம்ரா செய்ய தோழர்களுடம் புறப்பட்ட நபிகளார்
    X

    உம்ரா செய்ய தோழர்களுடம் புறப்பட்ட நபிகளார்

    நபிகளாரின் வாக்குக்கிணங்க முஸ்லிம்கள் தயாராகினர். சிலர் தயங்கினர். நபிகளாருடன் அவர்களது மனைவி உம்மு சல்மாவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபித் தோழர்களும் மக்காவிற்குப் புறப்பட்டனர்.
    மதீனாவிலிருந்து பரவத் தொடங்கிய இஸ்லாம், அரபு தீபகற்பகத்தில் சுடர்விட்டு முஸ்லிம்களுக்குச் சாதகமாக மாறியது. இருப்பினும் மக்காவில் உள்ள புனித பள்ளியான மஸ்ஜிதுல் ஹரமில் முஸ்லிம்களை இணைவைப்பவர்கள் அனுமதிக்கவில்லை.

    நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் அப்பள்ளியில் நுழைவது போலவும், கஅபாவின் திறவுகோலை பெறுவது போலவும், அனைவரும் சேர்ந்து கஅபாவை வலம் வந்து உம்ரா நிறைவேற்றுவதையும் தம் கனவில் கண்டார்கள். அந்தக் கனவை தோழர்களுடன் மகிழ்ச்சியாக நபி(ஸல்) பகிர்ந்தபோது தோழர்களும் அகம் மகிழ்ந்தனர். கனவை நிறைவேற்ற தயாராகும்படி தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    நபிகளாரின் வாக்குக்கிணங்க முஸ்லிம்கள் தயாராகினர். சிலர் தயங்கினர். நபிகளாருடன் அவர்களது மனைவி உம்மு சல்மாவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபித் தோழர்களும் மக்காவிற்குப் புறப்பட்டனர். நபிகளார் போகும் வழியில் ‘துல் ஹுலைஃபா’வில் உம்ராவிற்கான ஆடையை மாற்றினார்கள். நபி முஹம்மது(ஸல்), பலி பிராணிகளுக்கு மாலையிட்டு, மக்களிடம் ‘நாம் போர் செய்யப் புறப்படவில்லை’ என்பதை உறுதியாக அறிவித்து, அவர்களைப் பீதியிலிருந்து வெளியாக்கினார்கள்.

    நபி (ஸல்) அவர்களின் வருகையைக் கேள்விப்பட்ட குறைஷிகள் எப்படியாவது முஸ்லிம்களைக் கஅபத்துல்லாஹ்விற்குள் வரவிடாமல் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். காலித் இப்னு வலீத் 200 குதிரை வீரர்களுடன் ‘குராவு கமீம்’ என்ற இடத்தில் மக்காவை நோக்கி செல்லும் முக்கிய வழியில் போர் புரிவதற்காகத் தயாராக இருக்கிறார்” என்று ஒருவர் நபிகளாரிடம் அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

    காலித் பின் வாலித் தனது குதிரைப் படையை முஸ்லிம்கள் பார்க்கும் தூரத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். அப்போது முஸ்லிம்கள் லுஹர் தொழுகையைத் தொழுதார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த காலித், ’தொழுகையில் ருகூவு ஸுஜூதில் (குனிந்து மண்டியிட்டு) இருக்கும்போது நம்மை இவர்கள் கவனிக்கவில்லை அந்த நேரத்தில் நாம் தாக்கியிருந்தால் இவர்களுக்குப் பெரும் சேதத்தை விளைவித்திருக்கலாம். எனவே, இவர்களின் அடுத்தத் தொழுகையின் போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தலாம்’ என்றெண்ணி காத்திருந்தார். ஆனால், அஸர் தொழுகைக்கு முன் ‘ஸலாத்துல் கவ்ஃப்’ அச்சமுள்ள நேரத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்ற சட்டத்தை அல்லாஹ் இறக்கி விட்டான்.

    அந்த இறைவசனத்தில், ”நபியே! போர் முனையில் அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர் (இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து தொழுகையை முடித்ததும் அவர்கள் விலகிச் சென்று உங்கள் பின்புறம் உங்களைக் காத்து நிற்கட்டும்; அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும்.

    ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப் பற்றி கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து தாக்கி விடலாமென்று இணைவைப்பவர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் கையில் பிடிக்க இயலாது கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது; எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இணைவைப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்” என்ற இருந்தது.

    முஸ்லிம்கள் இந்த இறைவசனத்தின் அடிப்படையில் தொழுது கொள்ளவே காலிதின் நோக்கம் நிறைவேறாமல் போனது.

    குறைஷிகளுக்குப் போரின் காரணமாகக் கடுமையான சேதமும் நஷ்டமும் ஏற்பட்டிருந்தது. நபிகளார் ஒரு குறிப்பிட்ட காலம் வரை போர் நிறுத்த உடன்படிக்கை, இஸ்லாமை எடுத்துக் கூறுவதற்கு அவர்கள் தடையாக இருக்கக் கூடாது என்ற உடன்படிக்கை செய்து தருவதாகச் சில நிபந்தனைகளை முன் வைத்தார்கள்.

    உம்ரா செய்வது மட்டுமே நபிகளாரின் குறிக்கோளாக இருந்த்து.

    ஆதாரம்: அர்ரஹீக் அல்மக்தூம், திருக்குர்ஆன் 4:102

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×