search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்திரவதைகளைத் தவிர்த்து தர்மம் செய்யுங்கள்.....
    X

    சித்திரவதைகளைத் தவிர்த்து தர்மம் செய்யுங்கள்.....

    மக்களின் கோபத்தை உணர்ந்த பிறகு நபி(ஸல்) அவர்கள், எவரையும் சித்திரவதை செய்யவேண்டாமெனத் தடுத்துக் கொண்டும், மாறாகத் தர்மம் செய்யுமாறும் தூண்டிக் கொண்டு இருந்தார்கள்.
    ’உக்ல்' மற்றும் 'உரைனா' குலத்தாரில் சிலர் மதீனாவிற்கு வந்து நபி(ஸல்) அவர்களிடம், தாங்கள் இஸ்லாத்தை ஏற்பதாகப் பேசினர். அப்போது அவர்கள், “இறைத்தூதர் அவர்களே! எங்களிடம் விளைநிலங்கள் இல்லை. நாங்கள் பால்தரும் கால்நடைகளைக் காடுகளில் மேய்த்து அதன் பாலை அருந்துபவர்கள்” என்று கூறினர். தங்களை முஸ்லிம்கள் என்று வெளிப்படுத்தியவர்களை நபிகளாரும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் மதீனாவில் தங்கினர்.

    ஆனால் அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பம் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பத்துக்குட்பட்ட ஒட்டகங்களையும் ஒரு மேய்ப்பரையும் அவர்களுடைய உபயோகத்துக்காக வழங்கும் படி உத்தரவிட்டார்கள். “ஒட்டகங்கள் மேயும் இடத்திற்குச் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் மூத்திரத்தையும் பருகிக் கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நிவாரணம் கிடைக்கும்” என்று உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்கள் சென்றனர். அவற்றின் பாலை அருந்தி நிவாரணமும் பெற்றுக் கொண்டனர். அவர்கள் கருங்கற்கள் நிறைந்த 'ஹர்ரா' பகுதியில் இருந்தபோது இஸ்லாத்திலிருந்து விலகி இறை மறுப்பாளர்களாக மதம் மாறிவிட்டனர்.

    மேலும், நபி(ஸல்) அவர்களின் கால்நடை மேய்ப்பாளர் யஸார் (ரலி) அவர்களைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களைத் தங்களுடன் ஓட்டிச் சென்றுவிட்டனர். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவர்களைத் தேடிப் பிடித்து வர நபி (ஸல்) இருபது தோழர்களை, குர்ஸ் இப்னு ஜாபிர் ஃபஹ் (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் அனுப்பினார்கள்.

    அவர்கள் பிடிபட்டு மதீனாவுக்குக் கொண்டு வரப்பட்ட போது அவர்களுக்குத் தண்டனை கொடுக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவர்கள் எவ்வாறு ஒட்டக இடையர்களைச் சித்திரவதைச் செய்துக் கொலை செய்தார்களோ அவ்வாறே இவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டுமென்று அவர்களின் கண்களில் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் சூடு வைத்தும,  அவர்களின் கை கால்கள் வெட்டியும் மதீனாவின் புறநகரான 'ஹர்ரா' பகுதியில் அவர்களை விட்டனர். அவர்கள் அந்த நிலையிலேயே மாண்டும் போயினர்.

    மக்களின் கோபத்தை உணர்ந்த  பிறகு நபி(ஸல்) அவர்கள், எவரையும் சித்திரவதை செய்யவேண்டாமெனத் தடுத்துக் கொண்டும், மாறாகத் தர்மம் செய்யுமாறும் தூண்டிக் கொண்டு இருந்தார்கள்.

    அகழ் போருக்குப் பின்பு முஸ்லிம்களின் நிலைமை முன்னேற்றமடைந்திருந்ததால் இறைமறுப்பாளர்களின் ஆற்றல்கள் சரியத் தொடங்கி, இஸ்லாமிய அழைப்புப் பணியை அழிக்க வேண்டுமென்ற எண்ணத்தைக் கைவிட்டனர். இஸ்லாமின் ஆற்றலை ஏற்று அதற்குப் பணிந்து, அரபு தீபகற்பத்தில் இஸ்லாம் நிலைபெறுவதை ஏற்றுக் கொள்வது தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது.

    இஸ்லாமின் முன்னேற்றத்தை ‘ஹுதைபிய்யா உடன்படிக்கை’ மூலம் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

    ஸஹீஹ் புகாரி 4:64:4192.

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×