search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தொலைந்து போன மாலையும் எதிரிகளின் அவதூறும்
    X

    தொலைந்து போன மாலையும் எதிரிகளின் அவதூறும்

    ஸஃப்வானுடன் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) வந்தடைந்த காட்சியைப் பார்த்த மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பண்பிற்கேற்பப் பேசினார்கள்.
    'பனூ முஸ்தலிக்' என்ற ஒரு புனிதப் போரின்போது முஹம்மது நபி(ஸல்) பயணத்தில் தன்னுடன் எந்த மனைவியை அழைத்துச் செல்வது எனத் தீர்மானிக்கச் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். ஆயிஷா(ரலி) அவர்களின் பெயர் வரவே, அவர்களை அழைத்துச் சென்றார்கள்.

    போர் முடிந்து திரும்பும்போது படைகளுடன் மதீனாவிற்கு அருகில் ஓர் இடத்தில் தங்கினர். அங்கு ஆயிஷா(ரலி) அவர்களுடைய சுய தேவைக்காக அவர்கள் அமர்ந்து வந்த ஒட்டகச் சிவிகையை விட்டு வெளியே சென்றார்கள். பயணத்தில் வரும்போது தனது சகோதரியிடமிருந்து ஒரு கழுத்து முத்துமாலை இரவல் வாங்கி அணிந்திருந்தார்கள்.

    அவர்கள் சென்ற மறைவான இடத்தில் அது விழுந்துவிட்டது. தனது கூடாரத்திற்குத் திரும்பி வந்ததும் அதனைக் கவனித்தவர்கள், அதைத் தேடிச் சென்றார்கள். அவர்கள் கூடாரத்தைவிட்டு மறுபடியும் வெளியேறியதை யாரும் கவனிக்கவில்லை. இது தெரியாமல் நபிகளார் பயணத்தைத் தொடர கட்டளையிட்டபோது, ஆயிஷா(ரலி) உட்கார்ந்து வந்த சிவிகையை ஒட்டகத்தின் மீது ஏற்றிவிட்டார்கள். இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் தூக்கியதால் தொட்டியின் எடை குறைந்திருந்ததை அவர்கள் உணரவில்லை, ஆயிஷா(ரலி) சிவிகைக்குள் இருப்பதாகவே நினைத்தனர். அங்கிருந்து அனைவரும் புறப்பட்டுவிட்டனர்.

    தொலைந்து போன மாலையை ஆயிஷா(ரலி) கண்டெடுத்துத் தாம் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பியபோது அங்கு யாரும் இருக்கவில்லை. தன்னைக் காணவில்லையென்று கண்டிப்பாகத் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த இடத்தைவிட்டு நகராமல் அங்கேயே உட்கார்ந்தபடி கண்ணயர்ந்து தூங்கிவிட்டார்கள்.

    அப்போது முஹம்மது நபி(ஸல்) அவர்களின் போர்ப்படையின் பிற்பகுதியில் வந்து கொண்டிருந்த ஸஃப்வான் இப்னு முஅத்தல் (ரலி) என்பவர் மறுநாள் காலையில் ஆயிஷா(ரலி) அவர்களைப் பார்த்து, “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ்வின் தூதரின் மனைவியாயிற்றே!” என்று உரக்கக் கூறினார். இதைக் கேட்ட ஆயிஷா (ரலி) விழித்தெழுந்தார்கள்.

    ஸஃப்வான தனது ஒட்டகத்தை மண்டியிடச் செய்தபோது அதன்மீது ஆயிஷா(ரலி) ஏறிக் கொண்டார்கள். அவர் ஆயிஷா(ரலி) அவர்களின் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடக்கலானார். இதற்கிடையில் அவர் ஒரு வார்த்தையும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் பேசவில்லை. நபிகளாரின் படையினர் மதிய ஓய்வுக்காக நடுப்பகல் நேரத்தில் ஓரிடத்தில் தங்கிவிட்டிருந்ததால் நபிகளாரின் படையினரை அவர்களால் வந்தடைய முடிந்தது.

    ஸஃப்வானுடன் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) வந்தடைந்த காட்சியைப் பார்த்த மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பண்பிற்கேற்பப் பேசினார்கள். அப்போது எதிரியான தீயவன் அப்துல்லாஹ் இப்னு உபை தனது நயவஞ்சகத்தையும், வெறுப்பையும் இதுதான் சந்தர்ப்பமென்று வெளிப்படுத்தினான். ஓர் அவதூறான கதையைப் புனைந்து, அதை மக்களுக்கு மத்தியில் இரகசியமாகவும், பகிரங்கமாகவும் பரப்பினான். அவனது நண்பர்களும் அவனுடன் இக்காரியத்தில் ஈடுபட்டனர். (தொடரும்)

    ஸஹீஹ் புகாரி 3:52:2661, 4:64:4141

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×