search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கண்ணியம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உரித்தானது
    X

    கண்ணியம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உரித்தானது

    கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் அதை அறிந்து கொள்ளமாட்டார்கள்” என்ற வசனத்தின் மூலம் ஸைது இப்னு அர்கம் சொன்னதை உண்மை என்று இறைவன் தெளிவுபடுத்தினான்.
    அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் என்பவனுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது விரோதம் இருந்தது. காரணம் மதீனாவின் மக்கள் அவனைத் தங்களின் தலைவராக ஏற்க இருந்த நிலையில்தான் நபிகள் நாயகம்(ஸல்) மதீனாவிற்குக் குடிபெயர்ந்தார்கள். சூழல் மாறியது. மக்கள் அவனைத் தலைவராக ஏற்கவில்லை.

    இதனை மனதில் வைத்திருந்த அப்துல்லாஹ் இப்னு உபை சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்திக் கொண்டிருந்தான். மதீனாவாசிகளிடம், “நமது ஊருக்கு வந்த வந்தேறிகள் நம்மையே மிகைத்து விட்டார்கள். நாயை நல்ல கொழுக்க வளர்த்தால், அது இறுதியில் நம்மையே தின்றுவிடும். இழிவானவர்களை மதீனாவிலிருந்து வெளியேற்ற வேண்டும். நீங்கள் அவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்திக் கொண்டால் அவர்கள் உங்களை விட்டுவிட்டு வேறு ஊருக்குச் சென்று விடுவார்கள்” என்று நபிகளாரைப் பற்றி அவதூறு கூறினான் அப்துல்லாஹ் இப்னு உபை.

    அக்கூட்டத்தில் இருந்த ஜைது இப்னு அர்கம் இதைக் கேட்டு நபிகள் நாயகத்திடம் அதைச் சொல்லிவிட்டார். உஸைது(ரலி) என்பவர், அப்துல்லாஹ் இப்னு உபை ஏன் நபிகளார் மீது வெறுப்புக் கொண்டார் என்று விளக்கி நபிகளாரைச் சாந்தப்படுத்தினார். இருப்பினும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபைக்கு ஆளனுப்பினார்கள்.

    அவனிடம் அது குறித்துக் கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு உபை நபியவர்களைச் சந்தித்து, தான் அப்படி எதுவும் பேசவில்லை என்று சத்தியம் செய்து கூறினான். “ஜைது இப்னு அர்கம் பொய்யர், சரியாக விளங்கி இருக்கமாட்டார் அல்லது சரியாக நினைவில் வைக்கத் தெரியாதவர்” என்றெல்லாம் அப்துல்லாஹ் இப்னு உபைக்குச் சாதகமாகச் சிலரும் பேசினர்.

    நபிகளாரும் அப்துல்லாஹ் இப்னு உபையை நம்பினார்கள், ஜைது இப்னு அர்கம் பொய் சொல்வதாக எண்ணினார்கள். அப்போது அல்லாஹ் இறை வசனங்களை அனுப்பினான். அதில், “நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்' என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் அதை அறிந்து கொள்ளமாட்டார்கள்” என்ற வசனத்தின் மூலம் ஸைது இப்னு அர்கம் சொன்னதை உண்மை என்று இறைவன் தெளிவுபடுத்தினான். அதனை நபி முஹம்மது(ஸல்) ஸைது இப்னு அர்கத்தை அழைத்து ஓதிக் காட்டினார்கள்.

    வஞ்சகத்தை மனதில் வைத்துப் பகைமை வளர்த்த அப்துல்லாஹ் இப்னு உபை நபிகளாரின் குடும்பத்திலேயே குழப்பத்தை ஏற்படுத்தினான்.

    ஸஹீஹ் புகாரி 5:65:4900, 4901, 4903, 4904, திருக்குர்ஆன் 63:1-8.

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×