search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாழ்வியல் சார்ந்த சிறந்த பண்பு
    X

    வாழ்வியல் சார்ந்த சிறந்த பண்பு

    மனிதனின் வாழ்வியல் சார்ந்த சிறந்த பண்பு ஹலால். இதை நாம் அனைவரும் உணர்ந்துகொண்டு இறைவன் வகுத்த ஹலாலான வழியில் நமது வாழ்வை நடத்தி இறையருளைப்பெறுவோம்.
    இன்றைய கால சூழ்நிலையில் மக்களிடையே குறிப்பாக முஸ்லிம்களிடையே ‘ஹலால்’, ‘ஹராம்’ என்ற இரண்டு குறிப்பிட்ட வார்த்தைகள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ‘ஹலால்’-அனுமதிக்கப்பட்ட உணவு, ‘ஹராம்’-அனுமதிக்கப்படாத உணவு என்ற அளவில் உணவில் மட்டுமே வேறுபாடுகள் கண்டறிவதில் ஆர்வம் காட்டி வருகிறார் கள்.

    ஆனால் ஹலால், ஹராம் என்ற இரு சொற்கள் சிலர் நினைப்பது போன்று உணவை மட்டும் சுற்றி வரும் குறுகிய எல்லை கொண்டதல்ல. அதையும் தாண்டி மிக விரிவானது. ஒட்டு மொத்த வாழ்வியலையே கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை கொண்டது இந்த இரண்டு வார்த்தைகளும்.

    ஒருவரது உணவு, உடை, உறைவிடம், வருமானம், வாழ்வியல், செயல்பாடுகள், குணநலன்கள் இவை எல்லாம் ‘ஹலால்’ ஆக உள்ளதா? (அதாவது, இவை அனைத்தும் இறைவன் வகுத்த வழியில் உள்ளதா?) என்பதில் மனிதன் கவனம் செலுத்த வேண்டும் என்று இஸ்லாமிய தத்துவங்கள் சொல்லுகின்றன.

    இறைவனால் ருசிக்க கூடாது என்ற பழத்தை சைத்தானின் கூட்டு சதியால் மீறி உண்டதன் காரணமான ஆதிபிதா அவர்கள் சுவர்க்கத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டார்கள். இதில் இருந்து இறைவனால் தடுக்கப்பட்ட (ஹராமான) உணவு எந்த அளவிற்கு நம்மை உயர்ந்த அந்தஸ்திலிருந்து படு பாதாளத்தில் கொண்டு சேர்த்து விடும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

    உணவைத் தாண்டி வாழ்வியல் தத்துவத்தில் ஹலால் என்பதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு பல வரலாற்று நிகழ்வுகள் அத்தாட்சியாய் அமைந்திருக்கின்றன.

    ஒருமுறை இறைபக்தி கொண்ட ஒருவர் இன்னொருவரிடம் இருந்து நிலம் ஒன்றை வாங்கினார். பலகாலங்கள் பயன்பாட்டில் இல்லாத அந்த நிலத்தில் பயிர்செய்ய உழுது சமன் செய்த போது, நிலத்தின் அடியில் இருந்து புதையல் ஒன்றை கண்டெடுத்தார். அதிலுள்ள தங்க நாணயங்கள் அதிக மதிப்புள்ளதாக கண்ட அவர் நிலம் விற்றவரிடம் சென்று தங்கப் புதையலை ஒப்படைத்து, ‘நான் உங்களிடம் நிலத்தை மட்டும் தான் விலை கொடுத்து வாங்கினேன். ஆனால் இந்த புதையலை நிலத்தின் அடியில் கண்டெடுத்தேன். எனவே இது எனக்கு (ஹலால்) ஆகுமானது அல்ல. உங்களுக்கு உரிமையுள்ள பொருள். எனவே இதனைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார்.

    ஆனால் அவரோ ‘நான் தங்களுக்கு எப்போது நிலத்தை விற்றேனோ அன்றிலிருந்தே நிலம் அதில் அடங்கிய பொருட்கள் அனைத்தும் உங்களை சார்ந்ததே. எனவே இந்தப் புதையல் எனக்கு ஹலால் அல்ல’ என்று மறுத்து விட்டார்.

    இது இறையச்சத்தின் உச்சம். மதிப்பு மிகுந்த புதையலைக் கூட மறுக்க கூடிய மனப்பக்குவம் தான் ஹலாலைப் பற்றிய விளக்கத்தை அழகாக எடுத்தியம்ப கூடியது.

    ஒருமுறை இறைநேசர் ஒருவர் பேரீத்தம் பழம் வாங்கிச் சென்றார். அதை சாப்பிடும் போது அந்த பழத்தோடு ஒட்டிக் கொண்டு வந்த ஓர் அரிசியையும் சேர்த்து உட்கொண்டு விட்டார். உண்ணும் போது தான் அரிசியையும் சேர்த்து உண்கிறோம் என்று உணர்ந்து கொண்டார். ‘நாம் வாங்கியது பேரீத்தம் பழத்தை தான். ஆனால் அதனோடு ஒட்டி வந்த அரிசி நாம் விலைகொடுத்து வாங்கவும் இல்லை. அதனால் அது நமக்கு ஹலாலும் அல்ல’ என்று எண்ணியவராக கடைக்காரரிடம் சென்று இதுபற்றி எடுத்துச் சொன்னார்.

    கடைக்காரரோ, ‘நான் உங்களுக்கு பேரீத்தம் பழத்தை தான் விற்றேன். அதோடு ஒட்டிக் கொண்டு அரிசியும் வந்தால் அது என் பொருள் அல்ல. எனக்கு விற்றவரின் பொருள். எனக்கு உரிமையில்லாத ஒரு பொருளை உங்களுக்கு நான் எப்படி ஹலால் சொல்ல முடியும்? என்று பதிலளித்தார்கள். அந்த இருவரின் இறையச்சத்தை எண்ணிப் பார்க்கும் போது அவர்கள் எந்த அளவிற்கு ஹலாலைப் பேணுவதில் அச்சம் கொண்டிருந்தார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    ஒருமுறை இறையச்சம் கொண்ட வியாபாரி ஒருவர், ஜவுளி தொகுப்பில் நூல்கள் பிரிந்த குறையோடிருந்த ஒரு பகுதியை தனியே எடுத்து வைத்திருந்தார். அதனை வாங்க யாராவது விரும்பினால் அதன் குறையை எடுத்துச் சொல்லி குறைந்த விலைக்கே விற்க வேண்டும் என்று தங்கள் பணியாளர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். ஆனால் அவர் கடையில் இல்லாத சமயம் பணியாளர் கவனக்குறைவாய் அதனை அதிக விலைக்கே விற்று விட்டார். திரும்பி வந்த வணிகர் தன் பணியாளர் செயல் குறித்து கடிந்து கொண்டார். குறையுள்ள பொருளை வாங்கிச் சென்றவரை எங்கு தேடியும் காணக்கிடைக்கவில்லை. அவர் மனம் பதைபதைத்தது. ஹலால் இல்லாத பொருளின் பகுதி தன் வியாபாரத்தில் ஊடுருவி விட்டதை எண்ணி மிக அதிகமாக வருத்தப்பட்டார். முடிவாக அன்று வியாபாரம் ஆன அத்தனை தொகையையும் உடனே தான, தர்மம் செய்து விட்டார். அதன் பிறகுதான் அவர் மனம் நிம்மதியுற்றது.

    வெறும் உணவகங்களில் ‘ஹலால் உணவு இருக்கின்றதா?’ என்று கேட்டு உண்பது மட்டுமல்ல ஹலால். அதையும் தாண்டி வாழ்வு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான பண்புதான் ஹலால். மனிதனின் வாழ்வியல் சார்ந்த சிறந்த பண்பு ஹலால். இதை நாம் அனைவரும் உணர்ந்துகொண்டு இறைவன் வகுத்த ஹலாலான வழியில் நமது வாழ்வை நடத்தி இறையருளைப்பெறுவோம்.

    எம்.முஹம்மது யூசுப், உடன்குடி.
    Next Story
    ×