search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம் காட்டும் அறவழியில் செயல்படுவோம்
    X

    இஸ்லாம் காட்டும் அறவழியில் செயல்படுவோம்

    மனோ இச்சையின்படி நடக்காமல் இஸ்லாம் காட்டும் அறவழியில் செயல்பட்டு, நிறைவான வாழ்வை நாம் அனைவரும் பெற இறைவன் அருள்புரிவானாக, ஆமீன்.
    ஒரு செயலை எந்த எண்ணத்துடன் எந்த வழிமுறையை பின்பற்றி செய்ய வேண்டும் என்றும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அதன்படி நடக்கும்போது தான் அது அவனிடம் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும்.

    தன் மனம் போன போக்கில் செயல்பட்டுக்கொண்டு இறைவனிடம் பிரதிபலனை எதிர்பார்ப்பது என்பது முட்டாள்தனமானது என்பதை அண்ணலார் இவ்வாறு கூறுகிறார்கள்:

    'எவர் தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மரணத்திற்கு பின்னால் வரவிருக்கும் வாழ்க்கையை அழகுபடுத்துவதில் (தன்னை) ஈடுபடுத்துவாரோ, அவரே அறிவாளி ஆவார். தன்னை தன்னுடைய மனதின் மனோ இச்சைகளின் பின்னால் அலைய விட்டு விட்டு அல்லாஹ்வின் மீது தவறான நம்பிக்கைகளை வைத்துக் கொண்டிருப்பவன் முட்டாள் ஆவான்' (நூல்: திர்மிதீ).

    'நப்ஸ்' என்று அழைக்கப்படும் மனோஇச்சையின் ஆசைகளை கட்டுப்படுத்தி, இஸ்லாமிய ஒழுக்க நெறிகளுக்கு இணக்கமாக நடக்க வேண்டும். அப்படி செய்யாமல், மனதை அதன் போக்கில் செயல்படவிட்டால், அது பாவச்செயல்களை ருசிக்கப்பழகி அதன் இன்பத்தில் மூழ்கிவிடும். பிறகு பாவம் செய்வது அதற்கு சர்வ சாதாரணமாகிவிடும்.

    சுவையான உணவு, பணம், புகழ், கேளிக்கை மற்றும் வீண் விளையாட்டு, அடுத்தவரின் உடைமைகளை அபகரித்து அனுபவிப்பது, மனதில் தோன்றுவதை எல்லாம் பேசுவது, காண்பதை எல்லாம் அடைய துடிப்பது போன்றவற்றில் சிலரது மனம் விருப்பம் கொள்கிறது. அதனை நிறைவேற்றிட முயற்சிக்கும்போது, அது அல்லாஹ்வுக்கு மாறாக நடக்க வைத்து விடுகின்றது.

    உலக ஆசையின் வேட்கையால் தயக்கமின்றி பாவங்கள் செய்யப்படுவதால்தான் துன்ப துயரங்களை மனிதன் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்.

    'மனம்' என்பது அல்லாஹ்வுக்கும், அவனது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கும் எப்போது கட்டுப்படாமல் போகின்றதோ, அப்போது பெற்றோர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். பொதுச்சொத்துக்கள் கையாடல் செய்யப்பட்டு சூறையாடப்படுகிறது. பெரியோர்கள் இழிவு படுத்தப்படுகிறார்கள். வேத வசனங்களில் குறை காணப்படுகின்றது. விபசாரமும், மது அருந்துவதும் அதிகமாகி விடுகின்றது.

    இப்படி பாவங்களை எல்லாம் பயமின்றி செய்து விட்டு, உண்மைகளை எல்லாம் இருட்டறையில் பூட்டி வைக்க முயற்சிப்பது தவறல்லவா?
    உலகில் துணிந்து பாவம் செய்கின்றோம், அதனைக் கண்டு பயப்படுவதுமில்லை. இறைவன் தண்டிப்பானே என்று அஞ்சுவதுமில்லை, தவறுக்காக வருந்தி பாவமன்னிப்பு தேடுவதுமில்லை.

    இறைவனின் ஒரு கட்டளையை நிறைவேற்றிட அவனது பல கட்டளைகளை காற்றிலே பறக்க விட்டு விடுகின்றோம்.

    மறுமையில் விசாரணை இலகுவாக இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு நாளும் நமக்கு நாமே சுய விசாரணை செய்து, நடுநிலையோடு நமது தவறை உணர்ந்து, நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இறைவனின் விசாரணை மிகக் கடுமையாக இருக்கும்.

    அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித்தந்த சன்மார்க்க நெறியில் தான் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். பொது அமைதிக்கும், நலனுக்கும் கேடு விளைவிக்கும் செயல்கள் யாவையும் கைவிடுவதுதான் சிறந்ததாகும்.

    சுனாமியின் சீற்றம், மழை வெள்ளத்தின் கோர தாண்டவம், நிலநடுக்கம், புயல், காட்டுத்தீ, நிலச்சரிவு... போன்ற மறுமை நாளின் அடையாளங்கள் நம் கண்முன்னால் நடைபெறுகின்றன. ஆனால் அதிலிருந்து நாம் பாடம் படித்து திருந்தியதாக தெரியவில்லை.

    இறைவனின் கருணை எப்படி விசாலமானதோ, அதுபோல அவனது தண்டனையும் மிகக்கடுமையானது என்பதை உணர்ந்தால்தான் மனம் திருந்த முடியும். தேவையற்ற இச்சைகளில் இருந்து விலகி இருப்பவர் களுக்கு 'சொர்க்கம்' தான் கூலி என்பதை அருள்மறை திருக்குர்ஆன் (79:40-41) இவ்வாறு கூறுகிறது:

    'எவர் தம்முடைய ரப்பின் (இறைவனின்) சந்நிதானத்தை பயந்து, மனோ இச்சையை விட்டும் தன் ஆன்மாவை தடுத்துக்கொண்டாரோ, (அவருக்கு) நிச்சயமாக 'சொர்க்கம்' அது தான் (அவருடைய) தங்குமிடமாகும்'.

    எனவே, மனோ இச்சையின்படி நடக்காமல் இஸ்லாம் காட்டும் அறவழியில் செயல்பட்டு, நிறைவான வாழ்வை நாம் அனைவரும் பெற இறைவன் அருள்புரிவானாக, ஆமீன்.

    உலகப் பற்றின்மை

    ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்  களிடம் சென்று, "இறைத்தூதரே! இறைவன் என்னை நேசிக்கிற வகையிலும், மக்களும் என்னை நேசிக்கிற வகையிலும் (நான்செய்வதற்கேற்ற) நல்லறம் ஒன்றை சொல்லுங்கள்'' என்று கேட்டார். அதற்கு நபிகளார், "உலகத்தின் மீது பற்று வைக்காதீர். இறைவன் உம்மை நேசிக்கத் தொடங்கி விடுவான். மக்களிடம் இருக்கின்ற செல்வம், செழிப்பு, வளங்கள் ஆகியவற்றின் மீதும் எந்தப் பற்றும் வைக்காதீர். (அவற்றில் இருந்து உம் முகத்தைத் திருப்பிக் கொள்வீராக) மக்கள் உம்மை நேசிக்கத் தொடங்கி விடுவார்கள்'' என்று பதில் அளித்தார்கள்.

    உலகின் மீது பற்று வைக்காமல் அதில் இருந்து முகத்தைத் திருப்பிக் கொள்கின்றவர் இறைவனிடம் முழுமையாகத் தம்மை ஒப்படைத்துக் கொள்கின்றார். இறைவனுக்காகத் தம்முடைய நேரம், ஆற்றல், திறமை அனைத்தையும் அர்ப்பணிக்கத் தொடங்கி விடுகின்றார். இறைவனை மையமாகக் கொண்டே அவரது வாழ்வு நகர்கிறது. இறைவன் மீதான அன்பும், மறுமை இன்பங்கள் மீதான ஆசையும் கொண்ட அடியானை இறைவன் நேசிப்பான் என்பது வெளிப்படை.

    மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, திருநெல்வேலி மாவட்டம்.
    Next Story
    ×