search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாத்தில் துறவறம் இல்லை
    X

    இஸ்லாத்தில் துறவறம் இல்லை

    சமூகம் நம்மைப் போற்ற வேண்டும் என்றால் அதற்குத் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
    தனது பாலுணர்வையும், இச்சைகளையும் தீர்த்துக் கொள்வதற்காக இயற்கையோடு இயைந்த வழி முறையே திருமணம் ஆகும். இது தனிப்பட்ட ஒரு மனிதனைப் பொறுத்தவரை கெட்ட செயலில் ஈடுபடுவதில் இருந்து தடுக்கிறது; பாவமான மனோபாவங்களில் இருந்து உள்ளங்களைத் திசை திருப்புகிறது.

    குழந்தைகளைப் பெறுவதாலும், வம்சாவளி பெருகுவதாலும் குடும்ப பரம்பரை முறை பாதுகாப்புப் பெறுகிறது. இது சமுதாயம் பெறுகின்ற பெறுதற்கரிய பெரும் பேறாகும்.

    அன்பு, கருணை, இரக்கம், பாசம், நேசம் ஆகியவை தாய்-தந்தை மூலமே கிடைக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இவற்றுக்கான மூலமே தாய்-தந்தையரே. இத்தகைய குணங்களே மானிட வர்க்கத்தைத் தாங்கிப் பிடிக்கும் கேடயங்களாகத் திகழ்கின்றன.

    ஒருவர் திருமணம் செய்வதால் அவருக்குத் தனிப்பட்ட முறையிலும், சமுதாயத்தைப் பொறுத்தவரை மொத்தமாகவும், மானிட வர்க்கத்திற்குப் பொதுவாகவும் பலவிதப் பலன்கள் ஏற்படுவதால்தான் திருமணம் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது; வற்புறுத்துகிறது.

    அதே நேரத்தில் துறவறக் கோட்பாட்டை இஸ்லாம் தடை செய்துள்ளது.

    ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்வணக் கங்களைக் குறித்து கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக மூன்று தோழர்கள் அவர்களது வீட்டிற்கு வருகை தந்தனர். அவர்களிடம் நபிகளார், தான் மேற்கொண்டு வரும் வணக்க வழிபாடுகள் பற்றி எடுத்துரைத்தார்கள். தாங்கள் செய்து வரும் நல்வணக்கங்கள் நபிகளாருடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவானது என அவர்கள் கருதினர். இதனால் ஒரு தோழர் இரவெல்லாம் கண் விழித்து இறைவனை வணங்கப் போவதாகவும், மற்றொருவர் தாம் பகலெல்லாம் நோன்பு நோற்கப் போவதாகவும், இன்னொரு தோழர் தாம் இனிமேல் மனைவியை நெருங்குவதில்லை என்ற உறுதிமொழியை மொழிந்தனர்.

    அப்போது அவர்களிடம் நபிகளார், “நீங்கள்தானா இவ்வாறு கூறியது? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் உங்களில் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவும் பயப்படுபவனாகவும் இருக்கின்றேன். ஆயினும் நான் (சில தினங்கள்) நோன்பு நோற்கிறேன். (சில தினங்கள்) நோன்பு நோற்காமல் இருக்கிறேன். (இரவில்) நான் தொழுகிறேன். உறங்கவும் செய்கிறேன். பெண்களை மணமுடித்து இல்லற வாழ்வையும் மேற்கொண்டுள்ளேன். யார் என் வழி முறையை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.

    எல்லாச் செயல்களிலும் நடுநிலையைப் பேணுகின்ற மார்க்கம், இஸ்லாம். காட்டாற்று வெள்ளம் போல கட்டுப்பாடில்லாமல் மனம் போன போக்கில் செல்லும் வாழ்க்கை முறையை இஸ்லாம் வெறுக்கிறது. அதே நேரத்தில் உலக இச்சைகளை முற்றாகத் துறந்து, துறவு மேற்கொள்வதையும் இஸ்லாம் தடுக்கிறது. இரண்டுக்கும் இடையில், முறையான திருமண உறவை ஏற்படுத்திக் கொண்டு நெறி தவறாமல் வாழ்வதையே இஸ்லாம் வரவேற்கிறது.

    எந்த வகையில் மற்ற மதங்களில் இருந்து இஸ்லாம் முற்றாக வேறுபடுகிறது என்றால், இவ்வுலக வாழ்க்கையை முற்றும் துறக்காமல், உலக இன்பங்களை முறை தவறாமல் நுகர்ந்தபடி இறைவனை அடையலாம் என்கிறது இஸ்லாம்.

    இஸ்லாம், மறுமையைப் பற்றி விரிவாகப் பேசுகிறது; ஆனால் அது இம்மை வாழ்க்கையை இம்மி அளவுகூட நிராகரிக்கவில்லை.

    இந்த உலக வாழ்க்கையை உதறி விடுங்கள்; மறு உலக வாழ்க்கையே மகிழ்ச்சிக்குரிய வழி என்று இஸ்லாம் எந்த இடத்திலும் கூறவில்லை.

    “எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையை அளிப்பாயாக!” (திருக்குர்ஆன்-2:201) என்ற பிரார்த்தனையே முஸ்லிம்களின் வாழ்க்கையில் பிரதானமாக இருக் கிறது.

    இஸ்லாம் ஓர் இயற்கையான மார்க்கம். பசி மற்றும் தாகத்தை எப்படி மனிதனால் கட்டுப்படுத்த முடியாதோ அதை போலவே உடல் இச்சையும் கட்டுப்படுத்த முடியாத இயற்கையின் தேட்டமாக இருக்கிறது. இதனால் இயற்கைக்கு எதிரான எந்தச் செயலையும் செய்ய இஸ்லாம் அனுமதிப்பதில்லை. மேலும் தன்னைத் தானே வருத்திக் கொள்வதை இஸ்லாம் வரவேற்பதில்லை.

    ரத்த பந்த உறவுகள், குடும்பங்களுக்கிடையே இணக்கங்கள், சமூகத் தொடர்புகள் வலுப்பெறுவதற்கு திருமணம் முக்கியக் காரணமாக மட்டுமல்ல; முழு முதற்காரணமாகவும் இருக்கின்றது. துறவறம் மேற்கொள்வதால் மனித உறவுகளில் பிரிவு ஏற்படுகிறது. சொந்தங்கள் துண்டாடப்படுகின்றன. பந்தங்கள் பந்தாடப்படுகின்றன. இது இறைவனும் இயற்கையும் வகுத்துத் தந்த கட்டமைப்புக்கு எதிரானது.

    மேலும் மனிதர்களாய் பிறந்தவர்களை கடவுளுக்கு நிகராகவோ அல்லது கடவுளுக்கு இணையாகவோ போற்றிப்புகழ்வதை இஸ்லாம் வன்மையாக எதிர்க்கிறது. ‘இவர் நடமாடும் தெய்வம்’ ‘வணக்கத்திற்கு மாமனிதர்’ ‘அவருக்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும்’ என்பன போன்ற வார்த்தைகளுக்கே ‘தடை’ போட்ட மார்க்கம், இஸ்லாம். இப்படிப்பட்ட எண்ண ஓட்டங்களுக்கு தூபம் போடுகிற துறவறத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை.

    இஸ்லாம் மார்க்கம் உலக வாழ்க்கையை ‘இழிபிறப்பு’ என்று என்றைக்கும் கூறியதில்லை. உலக வாழ்க்கையை ‘நல்வாய்ப்பு’ என்றும், வாழ்வாங்கு வாழ்ந்து விதிக்கப்பட்ட சமூகக் கடமைகளை ஆற்ற வேண்டும் என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. சமூகக் கடமையில் இருந்து நழுவிச் செல்லும் மார்க்கமல்ல, இஸ்லாம். கடமை உணர்வு மிக்க வாழ்க்கை முறையே இஸ்லாம்.

    தன்னலம் இல்லாமல் மக்கள் பணி ஆற்ற வேண்டும்; சமூகம் நம்மைப் போற்ற வேண்டும் என்றால் அதற்குத் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. முறையான திருமண உறவில் ஈடுபட்டும் மக்களுக்கு நன்மை செய்யலாம்.

    இறைத்தூதர்கள் அனைவருமே இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்கள்தாம்.
    Next Story
    ×