search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இன்ஷா அல்லாஹ் என்ற சொல்லின் பொருள்
    X

    இன்ஷா அல்லாஹ் என்ற சொல்லின் பொருள்

    ‘இன்ஷா அல்லாஹ்’- இறைவன் நாடினால் என்ற வார்த்தை இறைவன் மீது பெரும் நம்பிக்கை வைத்துச் சொல்லப்படுகிற பொருள் பொதிந்த வார்த்தையாகும்.
    அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் கட்டளைகளை ஏற்றுச் செயல்படுவதே இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படை கொள்கையாகும். இவை இன்றி ஈமானும் இல்லை; இஸ்லாமும் இல்லை.

    இதையே இறைவன் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் வலியுறுத்திக் கூறுகின்றான்.

    ‘‘அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அஞ்சுவீர்களாயின் உங்களுக்கு மகத்தான (நற்)கூலியுண்டு’’. (திருக்குர்ஆன்-3:179)

    ‘‘நிச்சயமாக அல்லாஹ் இறையச்சம் உள்ளவர்களோடு இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்’’ (திருக்குர்ஆன்-9:123) -இப்படி எண்ணற்ற வசனங்கள் உள்ளன.

    இறைவன் திருக்குர்ஆனில் மனிதர்களை, ‘இறை நம்பிக்கையாளர்களே’ என்றுதான் அழைக்கிறான். மனிதர்கள் இறை நம்பிக்கையோடும், இறையச்சத்தோடும் வாழ வேண்டும் என்பதே அவனுடைய ஆசையும், விருப்பமும்.

    இஸ்லாம் மார்க்கத்தில் இறை நம்பிக்கையும், இறையச்சமும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல பிரிக்க முடியாதவை; ரெயில் தண்டவாளங்களைப் போல இணை பிரியாதவை.

    ‘வாழ்வையும், மரணத்தையும் அளிப்பவன் இறைவனே’ என்பதை முஸ்லிம்கள் மனதார ஒப்புக் கொள்ள வேண்டும். ‘அவனின்றி அணுவும் அசையாது’ என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.

    ‘‘உண்மையில் உயிரைக் கொடுப்பவனும், உயிரைப் பறிப்பவனும் அல்லாஹ்வே ஆவான்’’ (திருக்குர்ஆன்-3:156)

    ‘‘அவனே வாழ்வை அளிக்கின்றான். இன்னும் (அவனே) மரணிக்கச் செய்கின்றான். பின்னர் அவனிடமே நீங்கள் (மறுமையில்) திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்’’. (திருக்குர்ஆன்-10:56)

    ‘‘அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த உயிரினமும் மரணிக்க முடியாது’’. (திருக்குர்ஆன்-3:145)



    ‘‘வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது. (அவனே) உயிர் கொடுக்கின்றான். (அவனே) மரணிக்கும்படியும் செய்கின்றான். அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை. உதவியாளரும் இல்லை’’ (திருக்குர்ஆன்-9:116) என்பன போன்ற கருத்துகளைத் திருமறையில் திருப்புகின்ற பக்கங்களில் எல்லாம் காணலாம்.

    ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும், வீரனாக இருந்தாலும் கோழையாக இருந்தாலும், மாளிகையில் வாழ்ந்தாலும், மண் குடிசையில் இருந்தாலும் மரணத்தைச் சந்தித்தே தீர வேண்டும்.

    ‘‘நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்தபோதிலும் சரியே!’’ (திருக்குர்ஆன்-4:78) என்கிறது, திருமறை.

    ‘இன்று இருப்போர் நாளை இல்லை’- இதனால்தான் முஸ்லிம்கள், ‘நாளை நான் உன்னைக் கண்டிப்பாகச் சந்திக்கிறேன்’ என்று சொல்ல மாட்டார்கள். இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நாளை சந்திக்கிறேன்’ என்பார்கள்.

    ‘இன்ஷா அல்லாஹ்’- சொல்ல மறந்ததால் ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்னலைச் சந்திக்க நேர்ந்தது.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கடினமான கேள்வி களைக் கேட்டு அவர்கள் பதில் சொல்ல முடியாத நிலையில் இஸ்லாம் மார்க்கத்தை போலி மார்க்கம் என்று முத்திரை குத்த மக்கா மாநகர் குரைஷிகள் திட்டம் தீட்டினர். இதற்காக அவர்கள் இருவரைத் தேர்ந்தெடுத்து மதீனா நகருக்கு அனுப்பினார்கள். அவர்கள் அங்கு சென்று யூத வேத குருக்களைச் சந்தித்து, ஆலோசனை செய்தனர்.

    அதற்கு அவர், ‘‘1. கடந்த காலத்தில் வாழ்ந்த வாலிபர்களின் அதிசய வரலாற்றைப் பற்றிக் கேளுங்கள். 2. பூமி முழுவதும் கிழக்கில் இருந்து மேற்கு வரை சுற்றி வந்த அந்த அரசரைப் பற்றிக் கேளுங்கள். 3. உயிரை (ரூஹ்) பற்றிக் கேளுங்கள்’’ என்று சொல்லி அனுப்பினார். இந்தக் கேள்விகளை குரைஷிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர் களிடம் கேட்டனர்.

    அப்போது நபிகளார், ‘‘நாளை வாருங்கள்; பதில் சொல்கிறேன்’’ என்று அவர்களிடம் சொல்லி அனுப்பினார்கள்.

    அப்போது, ‘இன்ஷா அல்லாஹ்’ என்பதைக் கூற மறந்து விட்டார்கள். இதனால் இறைச்செய்தி (வஹி) பல நாட் களாக வரவில்லை. இதன் காரணமாக குரைஷிகளுக்கு பதில் சொல்வதும் நாளை, நாளை என்று நாட்கள் பல நகர்ந்தன.

    ‘‘விடை கூறத்தெரியாமல் விழிக்கிறார், முகம்மது. அல்லாஹ் அவரைக் கைவிட்டு விட்டான்’’ என்று குரைஷிகள் எள்ளி நகையாடினர். நபிகளார், ‘‘இறைவா! வஹி வரவில்லையே’’ என்று இறைஞ்சினார்.

    ‘‘(நபியே!) இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் ‘நிச்சயமாக நான் நாளை நான் அதை செய்பவனாக இருக்கிறேன்’ என்று கூறாதீர்கள். ஆயினும் இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால் நாளைக்குச் செய்வேன்) என்று கூறுங்கள். நீங்கள் இதை மறந்து விட்டால் (ஞாபகம் வந்ததும் இவ்வாறு) உங்கள் இறைவனின் பெயரைக் கூறுங்கள்’’ (திருக்குர்ஆன்-18:23) என்ற இறைச்செய்தி இறங்கியது. அதில் குரைஷிகளின் இரு கேள்விகளுக்கான பதில்களும் இருந்தன. (உயிரை (ரூஹ்) பற்றி வேறொரு அத்தியாயத்தில் பதில் சொல்லப்பட்டிருக் கிறது.) இதை அவர்களிடம் கூறி, தான் இறைத்தூதர் என்பதை நிரூபித்தார்கள்.

    ‘இன்ஷா அல்லாஹ்’- இறைவன் நாடினால் என்ற வார்த்தை இறைவன் மீது பெரும் நம்பிக்கை வைத்துச் சொல்லப்படுகிற பொருள் பொதிந்த வார்த்தையாகும். இதை முஸ்லிம்கள் மட்டுமல்ல, இறைவனை நம்புகிற அனைவருமே பயன்படுத்தலாம். பிற மதத்தைச் சேர்ந்த பலர் இந்த வார்த்தையைப் பயன்படுத்தி வருவதைப் பார்க்கிறோம்.
    Next Story
    ×