search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஈகைப் பெருநாளே வருக! இன்பத்திருநாளே வருக!
    X

    ஈகைப் பெருநாளே வருக! இன்பத்திருநாளே வருக!

    எல்லோரும் புத்தாடை அணிந்து, புதுபொலிவோடு அல்லாஹ் மகா பெரியவன் என்ற முழக்கங்களோடு ஈகைப் பெருநாளை இன்ப திருநாளை கொண்டாட வேண்டும்.
    அகன்ற வானில் அள்ளித்தெளித்த நவரத்தின விண்மீன்கள் இடையே நகக்கீற்றாய் ஈகை பெருநாள் பிறை பிறந்தது. மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்தது. ஒரு மாத காலம் பயிற்சி களத்தில் எத்தனையோ மாற்றங்களைப் பெற வழிவகுத்த ரமலான் நம்மிடம் விடைபெற்றுச் செல்கிறது. இந்தப் பயண பாதையில் ஈகைத்திள் நம்மை ஆரத்தழு விக் கொண்டது.

    அல்லாஹ்வின் அச்சத்தில் அன்பை பரிமாறிக்கொண்ட நெஞ்சங்கள் அதில் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும். அல்லாஹ்வின் முன் அணி அணியாய் தோளோடு தோள் உரசி நின்று வேற்றுமை தவிர்த்த சமத்துவம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்.

    ஏழைகள் வாழ்வில் ஜகாத்தின் மூலம் கைதூக்கி விட்டு பொருளாதார மேடு பள்ளங்கள் சமன் செய்த நிலை என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும். தினந்தோறும் இறை இல்லத்தில் இரவில் சந்தித்து வளர்த்த உறவு பாலங்களில் நம் வாரிசுகள் சந்தோஷமாய் பயணிக்கும் நிலை என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்.



    மாற்று மத சகோதரர்களிடம் மனமாச்சரியங்கள் தவிர்த்து, மனித நேயம் பேணிய நிலை என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும். வட்டி வாங்கி பிறர் உழைப்பை உறிஞ்சும் நிலை மாறி உண்மையான உழைப்பால் உயர வேண்டும் என்று உறுதிகொண்ட நிலை என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்.

    ‘பக்கத்து வீட்டில் பசித்திருக்க தான் உண்ண உரிமையில்லை’ என்ற நபி மொழி செயல்பாட்டில் நிலைத்திருக்கவேண்டும். தொழுகைக்காக ரமலானில் நிறைந்திருந்த இறை இல்லங்கள் என்றென்றும் நிறைந்திருக்க வேண்டும். வணிகம், தொழில்களில் கடைப்பிடிக்கப்பட்ட கண்ணியம்- உண்மை வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்க வேண்டும்.

    வியர்வைகள் உலரும் முன் விளைந்த பயன்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஈந்து சிவந்த கரங்கள் வளர்ந்து பலரது வாழ்வில் வளம் சேர்க்க வேண்டும். வைகறை விடியும் முன்னே ‘பித்ரா’ (ஏழை வரி) வழங்கப்பட்டு ஏழைகளும் இந்த இனிய பெருநாளை இன்பமாய் கொண்டாட வேண்டும்.

    எல்லோரும் புத்தாடை அணிந்து, புதுபொலிவோடு அல்லாஹ் மகா பெரியவன் என்ற முழக்கங்களோடு ஈகைப் பெருநாளை இன்ப திருநாளை கொண்டாட வேண்டும். அல்லாஹ் நம் அனைவர் வாழ்விலும் வளங்கள் கொழித்து, வாழ்வாதாரங்கள் செழித்து, வாழ்வாங்கு வாழ அருள் கிருபை செய்யவேண்டும். ஆமீன்.

    ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

    எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
    Next Story
    ×