search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள்: அழியாத செல்வம்
    X

    நோன்பின் மாண்புகள்: அழியாத செல்வம்

    அழியாத செல்வமான கல்வி ஞானத்தை நமக்கும், நம் குடும்பத்தாருக்கும், உலக மக்களுக்கும் அதிகப்படுத்தும்படி எல்லாம் வல்ல இறைவனை நாம் பிரார்த்தனை செய்வோம், ஆமீன்.
    இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் அரபி மொழியில் அருளப்பட்டுள்ளது. இறைவனின் இந்த வேதம் ’வஹி‘ மூலம் நபிகள் (ஸல்) நாயகத்திற்கு அருளப்பட்டது. திருக்குர்ஆன் மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்ட வந்த வேதம். இதை அதன் மூல மொழியான அரபி மொழியில் கற்றுக்கொள்வதே சிறந்தது. அதனால் தான் மார்க்க கல்வியை இஸ்லாம் முக்கியமாக வலியுறுத்துகறது.

    இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    ’அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமா(கிய அல்லாஹ்வா)ல் இது இறக்கப்பட்டுள்ளது‘. (41:2)

    ’இது (குர்ஆன் என்னும்) வேதமாகும். அறிவுள்ள மக்களுக்காக இதன் வசனங்கள் அரபி மொழியில் விவரிக்கப்பட்டுள்ளன‘. (41:3)

    ’(நல்லோருக்கு இது) நற்செய்தி கூறுகின்றதாகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றதாகவும் இருக்கின்றது‘. (41:4)

    இத்தகைய சிறப்பு மிக்க திருக்குர்ஆன் இந்த புனித ரமலான் மாதத்தில் தான் இறக்கியருப்பட்டது. இதுகுறித்து திருக்குர் ஆனில் (2:185), ’ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர் ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது‘ என்று குறிப்பிடுகிறது.

    ’எவருக்கு அல்லாஹ் நன்மையை அளிக்க நாடுகின்றானோ அவருக்கு தன் மார்க்கத்தைப்பற்றிய ஞானத்தை வழங்குகிறான்‘ என்பது நபிமொழியாகும். அறிவிப்பாளர்: முஆவியா (ரலி), புகாரி (முஸ்லிம்).



    கல்வியின் சிறப்பு குறித்து திருக்குர் ஆனில் (20:114) இறைவன் கூறும்போது, ’இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக‘ என்று நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகின்றான்.

    அதுபோல, ’கல்வியை தேடிப்பயணம் செய்பவர் இறைவனின் பாதையில் இருக்கிறார்‘ என்பதும் நபி மொழியாகும்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ’நான் கல்வியின் பட்டணம், ஹசரத் அலி (ரலி) அதன் தலைவாசல்‘. இதையடுத்து நபித்தோழர்கள் சிலர் தனித்தனியாக அலி (ரலி) அவர்களை சந்தித்து, ’கல்வி சிறந்ததா? செல்வம் சிறந்ததா?‘ என்று கேட்டனர். இதற்கு அலி (ரலி) அவர்கள் தனித்தனியாக இவ்வாறு பதில் கூறினார்கள்.

    ’கல்வி உன்னை காப்பாற்றும், செல்வத்தை நீ காப்பாற்ற வேண்டும்‘. ’கல்வி செலவழிக்க செலவழிக்க வளரும். செல்வம் செலவழிக்க செலவழிக்க குறையும்‘. ’கல்வி தயாள குணத்தை தரும். செல்வம் கருமித்தனத்தை ஏற்படுத்தும்‘. ’கல்வியை திருடர்கள் திருடிக்கொண்டு போக முடியாது, செல்வத்தை திருடர்கள் கொள்ளையடிக்க முடியும்‘.

    மேலும் அவர்கள் கூறும்போது, இறுதி தீர்ப்பு நாள் வரை கேட்டாலும், நான் இந்தப்பதிலைத்தான் கூறுவேன்‘ என்றார்கள். இதில் இருந்தே கல்வியின் சிறப்பை நாம் அறிந்துகொள்ள முடியும்.

    எனவே அழியாத செல்வமான கல்வியை நாம் பெறுவதன் மூலம் இறையச்சத்தையும், இறைஞானத்தையும் அதிகமாக பெறமுடியும். அந்த கல்வி ஞானத்தை நமக்கும், நம் குடும்பத்தாருக்கும், உலக மக்களுக்கும் அதிகப்படுத்தும்படி எல்லாம் வல்ல இறைவனை நாம் பிரார்த்தனை செய்வோம், ஆமீன்.

    மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.
    Next Story
    ×