search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முஸ்லிம்களின் இறை நம்பிக்கைக்கு இறைவன்‌ வழங்கிய பரிசு
    X

    முஸ்லிம்களின் இறை நம்பிக்கைக்கு இறைவன்‌ வழங்கிய பரிசு

    முஹம்மது நபியவர்கள் எழுந்து “அல்லாஹ் மிகப் பெரியவன். முஸ்லிம்களே! அல்லாஹ்வுடைய வெற்றியும் உதவியும் உங்களுக்குண்டென நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்கள்.
    மதினாவைத் தாக்க வந்த பெரிய படையைப் பற்றி அறிந்து, எதிரிகள் வந்து சேரும் முன் பாரசீக நாட்டில் அகழ் தோண்டிக் கொள்வதுபோல் அரேபியர்களுக்குத் தெரியாத புதிய திட்டத்தைச் செயல்படுத்தினர். நபிகளாரின் கட்டளைக்கிணங்க விரைவாக மதீனாவாசிகள் அகழ் தோண்டினர். எதிரிகளை அகழின் பக்கம் நெருங்கவிடாமல் முஸ்லிம்கள் அம்பு மழை பொழிந்து எதிரிகளைத் தாக்கினர். அகழ் போர் பல நாட்களாக நீடித்தது ஆனால் இரு படைகளுக்கும் இடையில் அகழ் இருந்ததால் நேரடியான பலத்த சண்டை எதுவும் இருக்கவில்லை.

    முஸ்லிம் வீரர்களைக் குறுக்கு வழியில் எதிர்க்க அவர்களின் குடும்பத்தைத் தாக்க யூதர் ஒருவரை அனுப்பி வைத்தனர். அவனை நபிகளாரின் தந்தையின் சகோதரி ஸஃபிய்யா (ரலி) எதிர்த்து போராடி கொன்றார். திரும்பி வராத யூதரின் நிலையைக் கண்ட இணைவைப்பாளர்கள், வீரர்களின் குடும்பத்தினரும் பாதுகாப்பு நிலையிலுள்ளதை அறிந்து மற்றொரு முறை அதுபோலத் துணிய அஞ்சினர். முஸ்லிம்களுக்கு எவ்விதத் தடையும் எதிர்ப்பும் தங்கள் தரப்பிலிருந்து இருக்காது என்று முன்னர் யூதர்கள் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் மறைமுகமாகப் பல தீங்குகள் செய்துவந்தனர். போரில் ஈடுபட்டுள்ள இணை வைப்பாளர்களுக்கு உணவுகள் அனுப்பி உற்சாகப்படுத்தினர். மறைமுகமாக யூதர்கள் வஞ்சகம் செய்வதை முஸ்லிம்கள் அறிந்து கொண்டனர்.

    அது முஸ்லிம்களுக்குப் பெரும் இக்கட்டை தந்தது. யூதர்கள் பின்புறத்திலிருந்து தாக்குதல் நடத்தினால் அதைத் தடுக்க முடியாது, ஏனெனில் எதிர்ப்புறத்தில் மிகப் பெரிய படை. அதை விட்டு எங்கும் செல்ல முடியாத நிலை. துரோகம் இழைத்த யூதர்களுக்கு அருகில்தான் முஸ்லிம் வீரர்களின் பெண்களும் குழந்தைகளும் எவ்வித பாதுகாப்புமின்றி இருந்தனர். இவர்களது நிலையை அல்லாஹ் குர்ஆனில் கூறினான்:

    “உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் படையெடுத்து வந்த போது, உங்களுடைய இருதயங்கள் தொண்டைக் குழி முடிச்சுகளை அடைந்து, நீங்கள் திணறி அல்லாஹ்வைப் பற்றிப் பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருள்கொடையை நினைவு கூறுங்கள்.

    அவ்விடத்தில் முஸ்லிம்கள் பெருஞ்சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டார்கள். மேலும் அச்சமயம் நயவஞ்சகர்கள், எவர்களின் இருதயங்களில் நோயிருந்ததோ அவர்களும், “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு ஏமாற்றத்தைத் தவிர வேறு எதையும் வாக்களிக்கவில்லை” என்று கூறிய சமயத்தையும் நினைவு கூறுங்கள்.



    மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தார் மதீனாவாசிகளை நோக்கி “யஸ்ரிப் வாசிகளே! பகைவர்களை எதிர்த்து உங்களால் உறுதியாக நிற்க முடியாது, ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்” என்று கூறியபோது, அவர்களில் மற்றும் ஒரு பிரிவினர்: “நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன” என்று - அவை பாதுகாப்பற்றதாக இல்லாத நிலையிலும் - கூறி, போர்க்களத்திலிருந்து சென்றுவிட நபியிடம் அனுமதி கோரினார்கள் - இவர்கள் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடுவதைத் தவிர வேறெதையும் நாடவில்லை.”

    முஹம்மது நபியவர்கள் எழுந்து “அல்லாஹ் மிகப் பெரியவன். முஸ்லிம்களே! அல்லாஹ்வுடைய வெற்றியும் உதவியும் உங்களுக்குண்டென நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்கள். நிலைமையைச் சமாளிப்பதற்கு முதல் கட்டமாக மதீனாவிலுள்ள பெண்களும் குழந்தைகளும் தாக்கப்படாமல் இருப்பதற்காக அங்கு பாதுகாப்புப் பணிக்கு சில வீரர்களை அனுப்பினார்கள். முஸ்லிம்கள் அல்லாஹ்விடம், “அல்லாஹ்வே! எங்களுடைய பயங்களைப் போக்கி அபயம் அளி” என்று வேண்டினர். நபி (ஸல்) அவர்களும், “வேதத்தை இறக்கியவனே! விரைவாகக் கணக்கு தீர்ப்பவனே! இப்படையினரைத் தோற்கடிப்பாயாக! இவர்களை ஆட்டம் காணச் செய்வாயாக!” என அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.

    முஸ்லிம்களின் இந்த இறைநம்பிக்கையையும், உறுதியையும், நிலை குலையாமையையும், துணிவையும், பொறுமையையும், தியாகத்தையும், முஸ்லிம்களின் இறைஞ்சுதலையும், அல்லாஹ் தனது தூதரின் வேண்டுதலையும் ஏற்றுக் கொண்டான். அல்லாஹ் எதிரிகளை விரட்ட பலத்த காற்றை அனுப்பினான். அக்காற்று எதிரிகளின் கூடாரங்களைக் சுழற்றி வீசியது. அவர்களின் பாத்திரங்களைத் தலைகீழாகப் புரட்டியது. கூடாரத்தின் கயிறுகளை அறுத்தது. எதிரிகள் நிலை தடுமாறினர். அல்லாஹ் வானவர்களின் படையை இறக்கினான். வானவர்கள் எதிரிகளின் உள்ளங்களில் பயத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி நிலை குலைய வைத்தனர்.

    அல்லாஹ்வின் உதவியால் எதிரிகள் மறுநாள் காலை விடிவதற்குள் தங்களின் இடங்களைக் காலி செய்து கொண்டு ஓடி விட்டனர். இப்போரின் மூலம் இணைவைப்பாளர்கள் விரும்பிய எந்த நோக்கத்தையும் அடைய முடியவில்லை. அல்லாஹ் நபியவர்களின் வாக்கை உண்மை படுத்தினான். இஸ்லாமியப் படைக்கு உதவி செய்து கண்ணியத்தையும் வெற்றியையும் வழங்கினான். நபியவர்கள் தங்களது படையுடன் மதீனா திரும்பினார்கள்.

    ஆதாரம்: திருக்குர்ஆன் 33:10-13, ஸஹீஹ் புகாரி 3:56:2933, அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×