search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள்: கல்வியின் மேன்மை
    X

    நோன்பின் மாண்புகள்: கல்வியின் மேன்மை

    கல்விச்செல்வத்தை நாம் அனைவரும் பெற்று சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம், ஆமீன்.
    ‘கல்வி என்பது இறைவனின் பேரொளிகளில் ஒன்று, அதை இறைவன் பாவிகளுக்கு கொடுப்பதில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    ஒரு முறை சுலைமான் நபி அவர்களிடம் இறைவன், ‘சுலைமானே, உமக்கு கல்வி வேண்டுமா? அல்லது அரசாட்சி வேண்டுமா?’ என்று வினவினான். அதற்கு நபி சுலைமான் அவர்கள் ‘கல்வி வேண்டும்’ என்றார்கள். உடனே இறைவன், ‘சுலைமானே, நீர் நல்லதை தேர்ந்தெடுத்தீர்கள்’ என்று கூறி, ‘நாம் உமக்கு கல்வியையும், அரசாட்சியையும் சேர்த்து கொடுத்து உம்மை கண்ணியப்படுத்தினோம்’ என்றான்.

    உலகத்தில் உள்ள நல்லது கெட்டது போன்றவற்றை பிரித்து அறியக்கூடிய பகுத்தறிவு சக்தியைத்தருவது கல்வி. அந்தக்கல்வி ஞானமே ஒருவருக்கு மேன்மையைத்தரும் என்பதை சுலைமான் நபி அவர்களது வாழ்க்கையில் இருந்து நாம் அறியலாம்.

    கல்வியின் சிறப்பு குறித்து ஏராளமான திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க நபிமொழிகள் இவை:
    ‘மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை, 2. பயன்பெறப்படும் கல்வி, 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை’.



    மற்றொரு நபி மொழியில், ‘கல்வி பறிக்கப்படும் வரை, பூகம்பங்கள் அதிகமாகும் வரை, காலம் சுருங்கும் வரை, குழப்பங்கள் தோன்றும் வரை, கொலை செய்தல் அதிகமாகும் வரை, உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை மறுமை நாள் ஏற்படாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அபூ ஹூரைரா (ரலி) அறிவித்தார்.
    இன்னொரு நபி மொழி குறித்து அபூ ஹூரைரா இவ்வாறு அறிவிக்கிறார்:

    ‘யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக் கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங் களில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவு கூருகிறான்’.

    இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘பயனுள்ள கல்வியைத்தருமாறு இறைவனிடம் கேட்டார்கள். மேலும் பயனற்ற கல்வியை விட்டும் இறைவனிடம் பாதுகாப்பு தேடினார்கள்’.

    திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் எந்த அளவுக்கு கல்வியின் அவசியம், சிறப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக மார்க்க கல்வி கற்பதில் நாமும் நம் குடும்பத்தாரும் ஆர்வம் காட்டவேண்டும். அத்தோடு இந்த உலக வாழ்க்கைக்கு தேவையான கல்வியையும் கற்றுக்கொள்ள முன்வரவேண்டும்.

    செல்வங்களில் ஒரு போதும் அழியாத செல்வம், யாராலும் திருடப்பட முடியாத செல்வம் கல்விச்செல்வம். அத்தகைய கல்விச்செல்வத்தை நாம் அனைவரும் பெற்று சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம், ஆமீன்.

    மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.
    Next Story
    ×