search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள்: வல்லமை மிக்கவன் இறைவன்
    X

    நோன்பின் மாண்புகள்: வல்லமை மிக்கவன் இறைவன்

    பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அருள் மழை பொழியும் ரமலானில், இத்தகைய சிறப்பு மிக்க, வல்லமை மிக்க இறைவனை, நாம் அனைவரும் வணங்கி வழிபடுவோம்.
    இந்த உலகின் மீதும், உலகில் உள்ள உயிரினங்கள், அசையும் மற்றும் அசையாப்பொருட்கள் என அனைத்தின் மீதும் சர்வ வல்லமை கொண்டவன் அல்லாஹ் ஒருவனே. அந்த ஏக இறைவன் எதையும் உருவாக்க நினைத்தால் ’ஆகுக‘ என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், அது உண்டாகிவிடும்.
     
    அதுபோல சோதனையை, அழிவை ஏற்படுத்த நினைத்தாலும், அவன் நினைத்த உடனே அது நிறைவேறிவிடும். அந்த அளவுக்கு ஈடு இணை இல்லாத சக்தி படைத்தவன் இறைவன்.

    இதை விளக்கும் திருக்குர்ஆன் வசனங்கள் இவை:

    இறைவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் ’ஆகுக‘ என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸ¨ர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன் (6:73).

    அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்: ’ஆகுக‘ என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது (40:68).



    இப்படி சர்வ வல்லமை மிக்க இறைவன், தான் நாடியவர்களுக்கு நன்மைகளை அளிக்கின்றான். அவன் யாரையாவது சோதிக்க நினைத்தால் அவர்களை சோதனைக்கும் ஆளாக்குகின்றான். இருப்பினும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை முழுமையாக சரண் அடைந்து அவனை வணங்கி, அவன் காட்டிய வழியில்

    வாழ்ந்தால் நிச்சயம் நாம் இறைவனின் திருப்பொருத்தத்தை அடையலாம். இதையே கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு கூறுகிறது:

    ’இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக்கருணை உள்ளவனாகவும் இருக்கின்றான்‘ (16:18).

    ’உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக் கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும். அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்‘ (57:21).

    பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அருள் மழை பொழியும் ரமலானில், இத்தகைய சிறப்பு மிக்க, வல்லமை மிக்க இறைவனை, நாம் அனைவரும் வணங்கி வழிபடுவோம். அசைக்க முடியாத இறையச்சத்துடன் நடந்து கொண்டு இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே அனைத்துக்காரியங்களையும் செய்து அல்லாஹ்வின் அருளைப்பெறுவோம், ஆமீன்.

    மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.
    Next Story
    ×