search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த ஆண்டின் இஸ்லாமிய ஆளுமை
    X

    இந்த ஆண்டின் இஸ்லாமிய ஆளுமை

    துபாயில் நடைபெற்று வரும் 21ஆம் சர்வதேச திருக்குர்ஆன் விருதுக்கான (DIHQA) நிகழ்ச்சியில், இவ்வருடத்தின் சிறந்த இஸ்லாமிய ஆளுமையாக இரு புனித மசூதிகளின் காப்பாளராக விளங்கும் சவூதி அரேபியாவின் மாமன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவூத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
    துபாயில் நடைபெற்று வரும் 21ஆம் சர்வதேச திருக்குர்ஆன் விருதுக்கான (DIHQA) நிகழ்ச்சியில், இவ்வருடத்தின் சிறந்த இஸ்லாமிய ஆளுமையாக இரு புனித மசூதிகளின் காப்பாளராக விளங்கும் சவூதி அரேபியாவின் மாமன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவூத் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    துபாய் தொழில் வர்த்தக சபையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், துபாய் கலாச்சார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துபாய் ஆட்சியாளரின் ஆலோசகரும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது விழாவின் தலைவருமான மாண்புமிகு இப்ராஹிம் முஹம்மது பூமெல்ஹா இத்தகவலைத் தெரிவித்தார்.

    “இந்த விருதுக் குழு உலக அளவில் இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும், புனித குர்ஆனுக்கும், புகழ்மிக்கச் சேவைகளைச் செய்துவரும் சிறந்த இஸ்லாமியப் பிரமுகர்களையும், நிறுவனங்களையும் கடந்த 21 ஆண்டுகளாகச் சிறப்பித்து வருகிறது” என்று பூமெல்ஹா குறிப்பிட்டார்.



    மதீனாவில் அரபு மொழிச் செல்வங்களையும் இஸ்லாமிய பாரம்பரிய அம்சங்களையும் கட்டிக் காக்கும் வகையில், வக்ஃப் நூலகங்களுக்காக மாமன்னர் அப்துல் அஜீஸ் பெயரில் ஒரு மையத்தை அமைத்தது மாமன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவூத் அவர்களின் சிறந்த சாதனைகளில் குறிப்பிடத்தக்கது என்றும், அரேபியர்களையும் முஸ்லிம்களையும் இணைப்பதற்காக அவர் இடைவிடாது மேற்கொண்ட முயற்சிகள் அளப்பரியவை என்றும் பூமெல்ஹா சிலாகித்தார்.

    நடைபெற்று வரும் 21 ஆவது ஆண்டு துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருதுக்கான (DIHQA) போட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கின. அதில் புனித குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்து ஓதும் போட்டியின் முதல் நாளில் கேமரூனைச் சேர்ந்த ஹாரூன் அஹ்மத், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த வஸீம் அப்த், மலேசியாவைச் சேர்ந்த முஹம்மத் அப்துல்லாஹ், ஓமானைச் சேர்ந்த ராஷித் யூசுப், பெல்ஜியத்தைச் சேர்ந்த உபேதா தாகிர், எத்தியோப்பியாவைச் சேர்ந்த அப்தல்ஹாதீ ஹுஸைன் மற்றும் கானாவைச் சேர்ந்த இஸ்மாயில் இப்ராஹிம் என்று 7 பேர் போட்டியில் பங்கேற்றனர்.

    இரண்டாம் நாள் போட்டி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அதில் அல்ஜீரியா, கஸகிஸ்தான், தன்ஸீனியா, ஜோர்டான், நேபாள், காம்பிய மற்றும் பல்கேரியாவைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர்.



    மூன்றாம் நாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அதில் ஈரான், இத்தாலி, லெப்னான், சாட், கென்யா, டென்மார்க், போஸ்னியா மற்றும் புருன்டி நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    நான்காம் நாள் போட்டி திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. அதில் ஈராக், பெனின், நெதர்லாந்து, தாய்லாந்து, உகாண்டா, சீபூத்தீ மற்றும் மியன்மார் நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    முதல் போட்டியாளரான கேமரூன் தேசத்தைச் சேர்ந்த ஹாரூன் அஹ்மத்திடம் இவ்விருது நிகழ்ச்சி குறித்துக் கேட்டபோது, “இந்தத் தனித்துவமான போட்டியில் பங்கேற்பது என்பது எனக்குக் கனவாக திகழ்ந்தது. இப்போது அந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.



    அல்ஜீரியா நாட்டிலிருந்து வந்த போட்டியாளர் யூசுப் ஹமாம் திருக்குர்ஆனை துல்லியமாக மனப்பாடம் செய்து அழகாக ஓதினார். அது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அவர் பேசுகையில், “அல்ஜீரிய நாட்டின் சார்பில் இங்கு வந்து பங்கேற்பதைக் கௌரவமாகக் கருதுகிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அருளியபடி புனித குர்ஆனை மற்றவர்களுக்குப் போதிப்பது மட்டுமின்றி, சிறந்த அறிஞராகவும், சர்வதேச அளவில் சிறந்த அறுவைச் சிகிச்சை நிபுணராகவும் இருக்க விரும்புகிறேன்” என்றார்.

    மேலும் மக்களை ஈர்ப்பதற்காக விருதுப் போட்டிக்கான அமைப்புக் குழு ஷேக்கா ஃபாத்திமா சர்வதேச திருக்குர்ஆன் விருதுப் போட்டியைப் பெண்களுக்காகத் தொடங்கியுள்ளது. இதையொட்டி 14 வகையான போட்டிகள் தினந்தோறும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை துபாய் தொழில் வர்த்தக சபை செய்து வருகிறது.

    பல்வேறு நாடுகளிலிருந்து துபாய் தொழில் வர்த்தக சபையின் அரங்கிற்கு வந்திருந்த பார்வையாளர்கள் இப்போட்டிகளில் திருக்குர்ஆனைத் துல்லியமாக நினைவுகூர்ந்து, சரியான வகையில் ஓதிய போட்டியாளர்களின் திறமையால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். இப்போட்டிகள் ரமதான் மாதத்தின் 20ஆம் நாள் வரையில் தினந்தோறும் இரவு 10 மணிக்கு நடைபெறுகின்றன.

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×