search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அகழைக் கண்டு அலறிய எதிரிப்படையினர்
    X

    அகழைக் கண்டு அலறிய எதிரிப்படையினர்

    அகழை நெருங்கவும் முடியாமல், அதில் இறங்கவும் இயலாமல், மண்ணால் மூடி பாதை அமைக்கவும் முடியாமல் நிராகரிப்பாளர்கள் திண்டாடினர்.
    முஸ்லிம்களுக்கு எதிராக குறைஷிகளும், யூதர்களும் மற்ற குலத்தவர்களும் ஒன்று திரண்டு வருவதை அறிந்து, அவர்களிடமிருந்து மதீனாவையும் முஸ்லிம்களையும் தற்காத்துக் கொள்ள, அப்பெரும்படை மதீனாவை வந்தடையாதவாறு மதீனாவின் வடக்குப் பகுதியில் முஸ்லிம்கள் நாற்பது முழம் அகழ் தோண்டினர்.

    இறைநம்பிக்கையாளர்கள் பகலெல்லாம் அகழ் தோண்டி மாலையில் வீடு திரும்புபவர்களாக இருந்தனர். அவர்கள் மும்முரமாகத் தோண்டியதால் அப்பணி எதிரிகள் வந்தடையும் முன்பே முடிவடைந்தது.

    நபி முஹம்மது (ஸல்) அல்லாஹ்விடம் பிரார்த்திக்களானார்கள், “இறைவா, நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம், தர்மமும் செய்திருக்க மாட்டோம், தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக!” என்று நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்தித்த நபிகளார் இணை வைப்பவர்களுக்கு எதிராகவும் பிரார்த்தனை புரிந்தார்கள்.

    “இறைவா! திருக்குர்ஆனை அருள்பவனே, விரைவாகக் கணக்கு வழங்குபவனே. இறைவா! சத்திய மார்க்கத்தை வேரறுக்கப் பல குலங்களிலிருந்தும் ஒன்று திரண்டு படையெடுத்து வந்துள்ள இந்தக் கூட்டத்தார்களைத் தோற்கடிப்பாயாக. இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!” என்று மனமுருகிப் பிரார்த்தித்தார்கள். குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு நபிகளாருடன் முஸ்லிம்கள் எதிரிகளைச் சந்திக்கப் புறப்பட்டனர்.



    பாய்ந்து வந்த எதிரிகள் அகழைக் கண்டவுடன் பதுங்கினர். அகழைப் பார்த்தவர்கள் அதனை மாபெரும் சூழ்ச்சியாகக் கருதினர். அரபியல்லாதவரே இதைச் செய்திருக்க வேண்டுமென்று சரியாகக் கணித்தனர். பாரசீக நபித்தோழரான ஸல்மான் பார்ஸியின் யோசனையின்படி தான் அகழ் தோண்டும் திட்டத்தை நபிகளார் செயல்படுத்தியிருந்தார்கள்.

    முஸ்லிம்களை முற்றுகையிடுவதற்காக நிராகரிப்பாளர்கள் அகழைச் சூழ்ந்து கொண்டனர். அகழைச் சுற்றி வந்தவர்கள் ஏதேனும் ஒரு வழியிருந்தால் உள்நுழைந்துவிடலாமென்று எண்ணி சுற்றி வந்தனர். ஆனால் எதிரிகளை நெருங்கவிடாமல் முஸ்லிம்கள் அம்பால் தாக்கினர். அகழை நெருங்கவும் முடியாமல், அதில் இறங்கவும் இயலாமல், மண்ணால் மூடி பாதை அமைக்கவும் முடியாமல் நிராகரிப்பாளர்கள் திண்டாடினர்.

    “அன்றியும், முஸ்லிம்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, “இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்” என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய இறைநம்பிக்கையையும், இறைவனுக்கு முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தியது” என்ற இறைவசனம் அருளப்பட்டது.

    ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 3:56:2837, 2933, திருக்குர்ஆன் 33:22, அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×