search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள்: எண்ணங்களில் தூய்மை
    X

    நோன்பின் மாண்புகள்: எண்ணங்களில் தூய்மை

    எந்த ஒரு செயலையும் இறைவனுக்காக, தூய்மையான எண்ணத்துடன் செய்தால் மட்டுமே அதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும். இறைவன் நம்மிடம் இருந்து அதை மட்டுமே எதிர்பார்க்கிறான்.
    நமது எண்ணங்களும் செயல்களும் இறைவனின் திருப்பொருத்தத்தை நோக்கியே இருக்கவேண்டும். எந்த ஒரு செயலையும் இறைவனுக்காக, தூய்மையான எண்ணத்துடன் செய்தால் மட்டுமே அதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும். இறைவன் நம்மிடம் இருந்து அதை மட்டுமே எதிர்பார்க்கிறான்.

    இதையே இந்த திருக்குர்ஆன் வசனம் (98:5) இவ்வாறு வலியுறுத்துகிறது:

    ’(எனினும், அவர்களுக்கோ) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறே அன்றி, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. (இது, அவர்
    களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம்‘.

    இஸ்லாத்தில் அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லி இருக்கும் எந்த ஒரு வணக்கமானாலும் அவற்றை எல்லாம் இணையாக் காமலும் (ஷிர்க்), முகஸ்துதியின்றி (ரியா), முழுக்க முழுக்க இறைவனின் திருப்தியை நாடியே செய்ய வேண்டும். அப்போது தான் அந்தக் காரியங்கள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும்.

    இது குறித்த நபிமொழி ஒன்றை அபூ உமாமா அல்பாஹிலி (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கிறார்கள்:



    நபிகளிடம் (ஸல்) ஒரு மனிதர் வந்து, ’அல்லாஹ்வின் பாதையில் நன்மையை நாடியும், தன்னைப்பற்றி பிறர் நினைவு கூரப்படுவதையும் நாடியவராக ஒருவர் போரில் கலந்து கொண்டார் என்றால் இறைவனின் முன்பு அவரது நிலை என்ன?‘ என்று கேட்டார்.

    இதற்கு நபிகளார் பதில் அளிக்கையில் ’அவருக்கு எதுவும் இல்லை‘ என்று மூன்று முறை கூறினார்கள். பின்னர் அவர்கள் கூறும்போது, ’நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய திருப்பொருத்தத்தை நாடி உளத்தூய்மையோடு செய்யப்படும் நற்காரியங்களைத்தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்வதில்லை‘ என்று தெரிவித்தார்கள். (நூல்: நஸயி)

    மற்றொரு நபிமொழியில், ’நிச்சயமாக அல்லாஹ் உங்களின் (புறத்)தோற்றங் களையோ, உங்களின் பொருளாதாரத்தையோ பார்ப்பதில்லை, மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் தான் பார்க்கின்றான்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (அறிவிப்பாளர்: அபூ ஹரைரா (ரலி), நூல்:முஸ்லிம்).

    இந்த புனிதமான ரமலானில் நாம் உள்ளத்தூய்மையுடன், எண்ணங்களிலும் தூய்மையுடன் இறைவனிடம் இவ்வாறு வேண்டுவோம்:

    ’இறைவா, உனக்கு கோபத்தை ஏற்படுத்தும் செயல்களைவிட்டு எங்களை பாதுகாத்து அருள்புரிவாயாக. உன் திருப்பொருத்தத்தை மட்டும் நாடியவர்களாக எங்கள் எண்ணங்களையும், செயல்களையும் ஆக்கி வைப்பாயாக ரஹ்மானே‘, ஆமீன்.

    மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.
    Next Story
    ×