search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகத்துவம் நிறைந்த இரவு
    X

    மகத்துவம் நிறைந்த இரவு

    இரவில் தூங்கும்போது கிடைக்கும் சுகமும், இனிமையும், பகலில் உறங்கும் போது நமக்கு கிடைப்பதில்லை. எவ்வளவு தான் பகல் நேரத்தில் தூங்கினாலும் அந்த தூக்கம் இரவு நேர தூக்கத்திற்கு ஈடாக முடியாது.
    இரவில் தூங்கும்போது கிடைக்கும் சுகமும், இனிமையும், பகலில் உறங்கும் போது நமக்கு கிடைப்பதில்லை. எவ்வளவு தான் பகல் நேரத்தில் தூங்கினாலும் அந்த தூக்கம் இரவு நேர தூக்கத்திற்கு ஈடாக முடியாது.

    ஏனென்றால், இரவை இறைவன் ஓய்வுக்கு உகந்த ஆடையாக ஆக்கியுள்ளான். இதை அருள்மறை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    ‘உங்களுடைய தூக்கத்தை சுகம் தருவதாகவும் நாம் ஆக்கினோம். இன்னும் இரவை (உங்களை பொதிந்து கொள்ளும்) ஆடையாக ஆக்கினோம். பகலை வாழ்க்கைக்குரிய (தேவைகளை தேடிக்கொள்ளும்) நேரமாக்கினோம்’. (78:9-11)

    அமைதியான தூக்கம் மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் அருமருந்து என்பதையும், இரவின் குளுமையும், அமைதியும் நம்மை ஒரு ஆடையாக பொதிந்து கொள்ளும் போது - கிடைக்கின்ற தூக்கத்தின் சுகம் அலாதியானது என்பதையும், பகல் என்பது உழைப்பதற்கான நேரம் என்பதையும் இந்த வசனம் வலியுறுத்தும் கருத்தாகும்.

    இரவு நேரம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், மனிதர்கள் தங்களது பேராசையின் காரணமாக நாள்முழுவதும் ஓயாது உழைத்து உருக்குலைந்து போயிருப்பார்கள். இரவு-பகல் மாறி மாறி வருவதால் தான் பூமியின் ஒரு பகுதி பகலில் வெப்பமாக இருக்கும்போது மறு பகுதி இரவினால் குளிர்ச்சியாகி விடுகின்றது. இது இறைவன் அருளால் மாறி மாறி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இது அவனது மிகப்பெரிய அருட்கொடையாகும்.

    இரவு நேரம் என்பது, உறங்கி ஓய்வெடுக்கத்தான் என்றாலும், அதில் சில இரவுகளில் நின்று வணங்குவதன் மூலம் சிறப்பானதாக மாற்ற வேண்டும் என்று இறைவன் நமக்கு கட்டளையிட்டுள்ளான். அதில் மிக முக்கியமான இரவாக ‘லைலத்துல் கத்ர்’ என்ற மகிமை பொருந்திய இரவை இறைவன் அமைத்து தந்துள்ளான். இந்த இரவில் தான் இறுதி மறையான திருக்குர்ஆனை இறைவன் இறக்கி அருளினான்.

    அந்த மேன்மைமிக்க கண்ணியம் பொருந்திய இரவு குறித்து அண்ணலார் இவ்வாறு கூறுகிறார்கள்:

    ‘(நீங்கள்) ரமலானின் கடைசி பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்’. அறிவிப்பவர் ஆயிஷா (ரலி), (நூல்: புகாரி-2017)

    எந்த ஒன்றை சிரமத்துடன், நம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன் பெறுகின்றபோது தான் அதனுடைய பெருமைகளையும் மேன்மை யையும் நம்மால் உணரமுடியும். அதனாலேதான் அண்ணலார் நம்மை கடைசி பத்து இரவு களில் ஒற்றைப்படை இரவில் லைலத்துல் கத்ரை தேடச்சொல்லுகிறார்கள்.

    ரமலான் நோன்பை கடைப்பிடிப்பதாலும், இத்தகை சிறந்த இரவுகளில் இறைவணக்கம் செய்வதாலும் கிடைக்கின்ற வெகுமதி குறித்தும் நபி (ஸல்) அவர்கள் கூறும் நற்செய்தி இது:

    ‘யார் லைலத்துல் கத்ரின் (இரவில்) நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து வணங்குகிறாரோ, அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது. (இன்னும்) யார் ரமலானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து நோன்பு நோற்கிறாரோ - அவர்களது முந்தைய பாவங்கள் (யாவும்) மன்னிக்கப்படுகின்றன’. அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), (நூல்-புகாரி:1901).

    எப்படியாவது தனது அடியார்கள் உயர்வடைய வேண்டும் என்பதற்காக இறைவன் இத்தகைய நல்ல வாய்ப்புகளை நமக்கு ஏற் படுத்தி தந்துள்ளான். அதனை பயன்படுத்த தவறுபவர்கள், தங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளை வீணடித்து நன்மைகளை சீரழித்தவராகி விடுகிறார்கள்.

    ‘முன்காலத்தில் வாழ்ந்த பனூ இஸ்ரவேல் சமூகத்தவரில் ஒருவர் ஆயிரம் வருடங்கள் இறைவனை வணங்குவதிலேயே ஈடுபட்டிருந்தார்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் கூறினார்.

    அப்போது அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! வயது குறைவாக (வாழ வாய்ப்பளிக்கப்பட்டு) உள்ள நாங்கள் ஆயிரம் வருடங்களின் வணக்கத்தின் நன்மையை எவ்வாறு அடையமுடியும்’ என வருந்தி கேட்டார்கள்.

    அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் லைலத்துல் கத்ர் இரவை (நமக்கு) வழங்கியுள்ளான். எவர் அந்த இரவை அடைந்து அதில் வணக்க வழிபாடு செய்வாரோ, அவர் ஆயிரம் மாதங்களுக்கு மேலாக வணங்கிய நன்மையை பெறுவார்’ என்றார்கள்.

    இது குறித்து அருள்மறை குர்ஆனும் இவ்வாறு கூறுகின்றது:

    ‘(நபியே) மகிமை பொருந்திய இரவு என்னவென்று உமக்கு தெரியுமா? கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் (அந்த இரவில்) வானவர்களும், பரிசுத்த ஆவியுமான (ஜிப்ரீலும்) தங்களுடைய ரப்பின் (இறைவனின்) கட்டளை கொண்டு (நடைபெற வேண்டிய) எல்லாக் காரியங்களுடன் இறங்குகின்றனர். (அந்த இரவில்) அமைதி நிலவியிருக்கும், அது அதிகாலை உதயமாகும் வரை (நீடித்து) இருக்கும்’ (திருக்குர்ஆன் 97:2).

    ஒருவரது வாழ்வில் ஒரு முறை லைலத்துல் கத்ர் இரவின் பாக்கியம் கிடைத்தால், அவர் 83 வருடமும், 4 மாதமும் (1000 மாதம்) இறைவனை வணங்கிய சிறப்பை அடையப்பெறுவார். அதுவே பல முறை கிடைக்குமானால் அந்த பாக்கியம் பல்கி பெருகிக் கொண்டே போகும். அதனால் லைலத்துல் கத்ர் என்பது இறைவனின் மாபெரும் கருணையாகவே உள்ளது.

    இறைவனின் அளப்பரிய கருணை குறித்து அண்ணலார் இவ்வாறு பேசினார்கள்:

    ‘அல்லாஹ் தன் வசம் வைத்துள்ள 100 மடங்கு கருணையிலிருந்து ஒரு மடங்கு கருணையை தான் ஜின்கள், மனிதர்கள், மிருகங்கள் என அனைத்து படைப்பினங்கள் மீதும் பரத்தி போட்டுள்ளான் - அதனால் தான் கொடிய (குணமுடைய) மிருகங்கள் கூட தனது குட்டிகளுடன் சாந்தமாக (அன்புடன்) நடந்து கொள்கின்றன. மீதமுள்ள 99 மடங்கு கருணையினை இறைவன் தன் வசமே வைத்துள்ளான். அக்கருணையை கொண்டு மீள உயிர்ப்பிக்கும் மறுமை நாளில் இறைவன் தனது அடியார்கள் மீது பெருங்கருணை புரிவான்’ என்றார்கள்.

    இறைவனின் ஒரு மடங்கு கருணையை கொண்டே இப்பிரபஞ்சம் எங்கும் கருணையின் மாண்பு செயல்படுவதே நமக்கு பிரமிப்பு ஊட்டுகிறது என்றால், மீதமுள்ள 99 மடங்கு கருணையின் அளவை யூகிக்கவே முடியாது. அத்தகைய கருணையுடைய அல்லாஹ் தனது அடியார்கள் மறுமை நாளில் நற்பேறு பெறவேண்டும் என்பதற்காகவும் தனது கருணையை பொழிவதற்காகவும் தயாராக இருக்கின்றான்.

    அதன் முன்னோட்டமாகத்தான் இது போன்ற லைலத்துல் கத்ர் இரவை ரமலானின் கடைசி பத்து இரவுகளில் ஒற்றைப்படை இரவில் பொதிந்து வைத்துள்ளான்.

    அதனை அடையப் பெறும் நற்பாக்கியத்தை இறைவிசுவாசிகளான நம்மனைவருக்கும் இறைவன் வழங்கி பேரருள் புரிவானாக! ஆமீன்.

    மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, திருநெல்வேலி மாவட்டம்.
    Next Story
    ×