search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தடை செய்யப்பட்ட திருமண உறவு
    X

    தடை செய்யப்பட்ட திருமண உறவு

    ஒரு பெண்ணுடன் அவளுடைய சகோதரியையோ, அவளுடைய தாயின் சகோதரியையோ, அவளுடைய தந்தையின் சகோதரியையோ ஒரு சேர மணமுடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
    திருமணத்தை வெளிப்படையாகவும், எளிமையாகவும் நடத்த வேண்டும். திருமணத்தை பகிரங்கப்படுத்தல் என்பது ‘ஷரீயத்’ ரீதியாக வலியுறுத்தப்பட்ட ஒன்று. தடை செய்யப்பட்ட ரகசிய திருமணங்களில் இருந்து வேறுபடுவதற்காகவும், இறைவன் ஆகுமாக்கி இருக்கும் உத்தம செயல்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காகவும் இவ்வாறு செய்யப்படுகிறது.

    நிச்சயமாக, சாதாரண பொதுமக்களும் நெருக்கமானவர்களும், நெருங்கிய உறவினர்களும் தூரத்து உறவினர்களும் அறிந்து கொள்வதற்காக, பகிரங்க அறிவிப்பு செய்வதற்கு அதிக தகுதி உடைய ஒன்றுதான் திருமணம்.

    ‘திருமணத்தை வெளிப்படையாக (பலர் அறியச்) செய்யுங்கள். மேலும் அதை பள்ளிவாசல்களில் நடத்துங்கள்’ என்பது நபிமொழியாகும்.

    ‘குறைந்த செலவில், குறைந்த சிரமங்களுடன் செய்யப்படும் திருமணமே சிறந்ததாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    இதன்படி திருமணத்தின்போது பெண் வீட்டாருக்கு எந்த வகையிலும் சிரமத்தைக் கொடுக்கக்கூடாது. இதற்காக திருமண விருந்தை மணமகனே ஏற்க வேண்டும். இதற்கு ‘வலிமா’ என்று பெயர்.

    ‘எந்த ‘வலிமா’வில் செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு, ஏழை எளியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களோ அந்த வலிமாவின் உணவே மிக மோசமான உணவாகும். எவர் ‘வலிமா’ விருந்திற்கான அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லையோ அவர், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்தவராவார்’ என்று நபிகளார் நவின்றுள்ளார்கள்.

    ஒழுக்கமான–தூய்மையான சமூக அமைப்பு உருவாக, குடும்ப அமைப்பு அதிக வலுவுடையதாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது. கணவன்–மனைவி இருவரும் திருமண வாழ்வின் ஒழுங்கு முறையையும், கடமைகளையும் நன்கு உணர்ந்திருக்க வேண்டும். மணம் புரிந்து கொண்ட ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் அன்பைப் பொழிய வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க வேண்டும்.

    இல்வாழ்க்கை இருசக்கர வாகனம் போன்றது. அந்த வாகனம் சீராகச்செல்ல அதில் உள்ள இரு சக்கரங்களும் சமமாக இருக்க வேண்டும்.

    கணவன்–மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகிய உவமை மூலம் திருக்குர்ஆன் இவ்வாறு எடுத்துக் கூறுகிறது:

    ‘அவர்கள் (பெண்கள்) உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் (ஆண்கள்) அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்.’ (2:187)

    இந்தத் திருவசனத்தில் பல்வேறு பொருள் நிறைந்த கருத்துகள் பொதிந்து கிடக்கின்றன. ஆடை, மனிதனின் மானத்தைப் பாதுகாக்கிறது; மனிதனுக்கு அழகைக்கொடுக்கிறது; மனிதனுக்கு மரியாதையை அளிக்கின்றது. இதனால்தான், ‘அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்’ என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

    ஆண்–பெண் இருவருக்கிடையே உருவாகும் அன்பையும், பாசத்தையும் அதிகரிக்கவும், வலுப்படுத்தவும் ஏற்ற வழி திருமணத்தைத் தவிர வேறெதுவும் இல்லை.

    யாரையெல்லாம் திருமணம் செய்யக் கூடாது என்பதை திருக்குர்ஆன் கண்டிப்புடன் கூறுகிறது.

    ‘‘(பின்வரும் பெண்களை மணம் புரிவது) உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்விகள், உங்கள் சகோதரிகள், மற்றும் உங்கள் தந்தையின் உடன்பிறந்த சகோதரிகள், உங்கள் அன்னையின் உடன்பிறந்த சகோதரிகள் மேலும் சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள் மேலும் உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்மார்கள், உங்கள் பால்குடி சகோதரிகள், உங்கள் மனைவியரின் தாய்மார்கள், நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியர் (தம் முன்னாள் கணவர் மூலம்) பெற்றெடுத்து உங்கள் மடிகளில் வளர்ந்துள்ள புதல்வி கள், ஆனால் (திருமணம் ஆகி) நீங்கள் அம்மனைவியருடன் உடலுறவு கொள்ளவில்லையாயின் (அவர்களை விடுத்து, அவர்களின் புதல்விகளை மணமுடித்துக் கொள்வதில்) உங்கள் மீது எத்தகைய குற்றமும் இல்லை. மேலும் உங்கள் முதுகுத்தண்டுகளில் இருந்து பிறந்த உங்கள் புதல்வர்களின் மனைவியரை மணம் புரிவதும், இரு சகோதரிகளை நீங்கள் ஒருசேர மனைவியராக்குவதும் (தடை செய்யப்பட்டுள்ளன.)’’ (3:23)

    1. தாய் 2. மகள்கள் 3. சகோதரிகள் 4. தந்தையின் சகோதரிகள் 5. தாயின் சகோதரிகள் 6. சகோதரனின் புதல்விகள் 7. சகோதரியின் புதல்விகள்–இவர்கள் ரத்த பந்த உறவின் மூலம் தடை செய்யப்பட்ட 7 பிரிவினர் ஆவர்.

    இதைபோல 1. மனைவியின் தாய் 2. மனைவியின் பிறிதொரு கணவனுக்கு (முன்னாள் கணவனுக்கு) பிறந்த மகள் 3. மகனின் மனைவி (மருமகள்) 4. தந்தையின் மனைவி– இவர்கள் திருமண உறவின் மூலம் தடுக்கப்பட்ட 4 பிரிவினர் ஆவர்.

    மேலும் பாலூட்டிய அன்னியப்பெண்ணும், பெற்றெடுத்த தாயும் ஒரே தரத்தைப் பெறுகின்றனர். ரத்தபந்த உறவின் மூலம் தாயின் வழித்தோன்றலில் யாரெல்லாம் திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவர்களாக ஆவார்களோ அவர்கள் அனைவரும் பால்குடி உறவின் மூலம் தடுக்கப்பட்டவர்களாக மாறுவர். எனவே அந்த 7 தரப்பினர் பால்குடி உறவின் மூலமும் திருமணம் புரிய தடை செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் ஒருவர் ஒரு பெண்ணுடன் அவளுடைய சகோதரியையோ, அவளுடைய தாயின் சகோதரியையோ, அவளுடைய தந்தையின் சகோதரியையோ ஒரு சேர மணமுடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×