search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    போலித்தனத்தை போக்கிடுவோம்
    X

    போலித்தனத்தை போக்கிடுவோம்

    போலித்தனம் போக்கி உண்மையான இறைவிசுவாசியாக நாம் மாறும்போது, அல்லாஹ் மக்கள் மனங்களில் மதி மயக்கமில்லாத அன்பை நம் மனதில் ஏற்படுத்துகின்றான்.
    நாவால் இனிக்க இனிக்க பேசுகின்ற நம்மில் பலர் இதயத்தால் இறைவனின் அச்சத்தைவிட்டு விலகியே நிற்கிறார்கள். இத்தகைய நாவன்மை மிக்க போலிகள் தானும்கெட்டு பிறரையும் கெடுத்திடவே முனைந்து நிற்கின்றார்கள். இவர்களை அடையாளம் கண்டு விலகி இருப்பதே நமக்கு நன்மை பயப்பதாகும்.

    சிறிய மண் துகளைக்கூட நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. ஏனென்றால் இன்று நமது காலில் மிதிபடும் மண்ணில் தான் மரணத்திற்கு பின் நாளை நாம் கிடத்தப்பட இருக்கின்றோம் என்பதை எண்ணும்போது, எதையும் துச்சமாக கருதும் மனநிலை நமக்கு ஏற்படாது.

    வாழ்க்கை என்பது கணப்பொழுதை மையமாக கொண்டே சுழன்று வருகின்றது. எல்லா மாற்றங்களும் கணப்பொழுதில் ஏற்பட்டு விடுகின்றது. அது காதலாக இருந்தாலும் சரி, சாதலாக இருந்தாலும் சரி, ஒரு கணப்பொழுதில் இயல்பாகவே நடந்து முடிந்து விடுகின்றது.

    நம் இதயத்தை கடினமாக்கி, நம்மை கஷ்டத்திற்கும், துன்பத்திற்கும் தள்ளிவிடுகின்றது காமம். எல்லாவற்றையும் நுகர்ந்து விட வேண்டும் என ஆசையை தூண்டி நம்மை துயரத்தில் ஆழ்த்துவதும் அந்த காமமே.

    காமத்தை நம் மார்க்கம் காட்டித்தரும் நெறி முறைகளின் படியே தணித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது பாவ விதைகளை நம் இதயத்தில் ஊன்றிவிடும், அதன் பயனோ மிக கசப்பானதாகவே இருக்கும்.

    காமத்தை வெற்றிகொள்ள வேண்டுமானால், உலக பொருட்களின் மயக்கத்தில் இருந்தும், இச்சையில் இருந்தும் நாம் வெளியே வந்தாக வேண்டும். வாழும் போதே இதயச்சுத்தம் அடைந்து இறைவனின் பக்கம் நம்மை திருப்பியாக வேண்டும். இல்லை என்றால் மனோஇச்சை நம்மை ஆட்டிப்படைத்துவிடும்.

    அந்த மனோஇச்சைக்கு அடிமையானவர்களிடம், சைத்தான் நட்புறவு கொண்டு விடுகின்றான். அதன் விளைவாக துன்பங்களும், தொடர் கவலைகளும் நம்மைத்தேடி வரும். இதுபோன்றவர்களின் நிலை குறித்தும், செயல்பாடுகள் குறித்தும், திருக்குர்ஆன் (107:1-7) கூறுவதை பார்ப்போம்:

    ‘நியாயத்தீர்ப்பை பொய்யாக்குகின்ற ஒருவனை (நபியே) நீர் பார்த்தீரா? அவன் அனாதைகளை விரட்டுகின்றான். இன்னும் ஏழைகளுக்கு உணவளிக்க (அவன்) தூண்டுவதில்லை. அத்தகைய (குணம் கொண்டு) தொழுபவர்களுக்கு கேடுதான். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் தங்களது தொழுகையின் (மீது கவனம் வைப்பதை) விட்டும் பாராமுகமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் பிறருக்கு காண்பிக்(கத்தான் தொழு)கிறார்கள் இவர்கள் அற்பமான பொருட்களை (பிறருக்கு கொடுத்து வாங்குவதை கூட) தடுப்பவர்களாக இருப்பார்கள்’.

    இத்தகையோர், தானும் நன்மை செய்வது இல்லை, பிறரை நன்மை செய்ய தூண்டுவதுமில்லை. நன்மைகள் பிறருக்கு சென்றடைவதை தடுப்பவர்களாக இருப்பார்கள். என்பதை இந்த அத்தியாயம் தெளிவுபடுத்துகிறது.



    இவர்கள் தான் மறுமையை மறுப்பவர்கள். அதன் அடையாளம் தான் ஏழைகளை புறம் தள்ளுவதும், அனாதைகளை விரட்டுவதும் ஆகும். இவர்களின் தொழுகை என்பது மேலோட்டமானதாகவும், பிறர் மெச்சவேண்டும் என்பதற்காகவுமே இருக்கும் என்பதையும் இந்த அத்தியாயம் வலியுறுத்திக் காட்டுகின்றது.

    எவ்வளவு வேண்டுமானாலும் இறைவனை வணங்குகின்றேன். இஸ்லாம் மார்க்கம் குறித்தும் பேசுகின்றேன். ஆனால் மனதாலும், செயலாலும், பொருளாலும் பிறருக்கு உதவி செய்வதில் எனக்கு கடினத்தன்மை உண்டாக்குகின்றது எனக்கருதுபவர்கள் இந்த அத்தியாயத்தை மீண்டும் மீண்டும் படித்து பார்த்து அக்கடினத் தன்மையை இலகுவாக்கி கொள்ளவேண்டும். இல்லையென்றால் அவர்களின் வணக்கம் எல்லாம் வீணாகப்போய்விடும்.

    நபிகளாருக்கு உலகின் சகல பொக்கிஷங்களும் இறைவனால் கொடுக்கப்பட்டிருந்தது. செல்வங்களும் ஆட்சி அதிகாரமும், தன்னிடமிருந்த போதிலும் நபிகளார் அதில் லயித்து இரண்டறக்கலந்து விடவில்லை. உலக சுகபோகங்களால் அவர்களின் இறைப்பணியையோ, இறை நேசத்தையோ தடுக்க முடியவில்லை. தனக்கு கிடைத்த செல்வத்தையும், செல்வாக்கையும் இறைவழியிலேயே முழுமையாக அர்ப்பணம் செய்து வாழ்ந்து காட்டினார்கள்.

    அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஆயிஷாவே, மறுமையின் பேரின்பத்திற்காக, இவ்வுலகின் கஷ்டங்களின் மீது பொறுமை கொள்வாயாக’.

    சுகத்தையும், சந்தோஷத்தையும் வரவேற்பதை போலவே, துன்பத்தையும் ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்தி தருவதாகவே இது அமைந்துள்ளது.

    ஏழையாக, பணக்காரனாக, ஆசை உள்ளவராக, ஆசையை துறந்தவராக... என எந்த நிலையில் ஒருவர் வாழ்ந்தாலும் சரி, உலகில் நமக்கு கிடைக்கவேண்டிய பங்கு எதுவோ அது நம்மை வந்து அடைந்தே தீரும். அதனை இறைவழியில் மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் மார்க்கம் நமக்கு கற்றுத்தருகிறது.

    பிறரின் கவனத்தை தன்பக்கம் ஈர்ப்பதற்காகவே செய்யப்படும் வணக்கங்கள் யாவும் போலித்தனமானது என்பதை புரிந்து கொண்டு, இறைவனின் பொருத்தத்திற்காகவே வணக்க வழிபாடுகளில் ஈடுபடும்போது, போலித்தனம் என்பது இடம் தெரியாமல் போய்விடும்.

    போலித்தனம் போக்கி உண்மையான இறைவிசுவாசியாக நாம் மாறும்போது, அல்லாஹ் மக்கள் மனங்களில் அழிவில்லாத ஆட்சியை நமக்கு ஏற்படுத்தி தருகின்றான், மதி மயக்கமில்லாத அன்பை நம் மனதில் ஏற்படுத்துகின்றான். கசப்பில்லாத இனிப்பை உணரச் செய்து தன் அருட்கொடைகளை என்றும் பூரணமாக தருகின்றான். அத்தகைய பாக்கியம் பெற்றவர் களாக நம் அனைவரையும் ஆக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக, ஆமீன்.

    மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    Next Story
    ×