search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உஹூத் போர் கற்றுத் தந்த பாடங்கள்
    X

    உஹூத் போர் கற்றுத் தந்த பாடங்கள்

    உஹுத் போரில் ஏற்பட்ட துக்க கரமான நிகழ்வால் முஸ்லிம்களைப் பற்றிப் பிறர் உள்ளத்தில் இருந்த அச்சம் அகன்று விட்டது. உள்நாட்டு வெளிநாட்டுப் பிரச்சனைகள் முஸ்லிம்களுக்கு அதிகரித்தன.
    “பகைக் கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம் குன்றாதீர்கள்; நீங்கள் போரில் துன்பப்படுவீர்களானால், நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே துன்பப்படுகிறார்கள் - அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காத நற்கூலியும் வெற்றியும் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்” என்ற இறைவசனத்திற்கேற்ப உஹுத் போரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வேதனையைப் போலவே எதிரிகளின் நிலைமையும் இருந்தது.

    வெற்றியின்றியே இரு சாராரும் தங்களது நகரங்களுக்குத் திரும்பினர். அம்பெறியும் வீரர்கள் அவ்விடத்திலிருந்து விலகக் கூடாது என்று நபி(ஸல்) கூறியதற்கு மாறு செய்ததால் ஏற்பட்ட விளைவுகளே, முஸ்லிம்களின் இக்கட்டான நிலைமைக்கும், பெரும் நஷ்டம் ஏற்பட்டதற்குமான காரணம். பாவச் செயலினால் உண்டாகும் நஷ்டங்கள், அதுவும் படைக்கப்பட்ட சமுதாயங்களில் இதுவே மிகச் சிறந்த சமுதாயம் என்பதால் மற்ற சமுதாயத்தை விட இந்தச் சமுதாயத்திடம் இருக்க வேண்டிய உயர்ந்த பண்புகள் தகர்ந்து, சில முஸ்லிம்களிடம் இருந்த பலவீனங்களால் சில நஷ்டங்களை முஸ்லிம்களுக்கு இறைவன் ஏற்படுத்தினான்.



    இறைத்தூதர்கள் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதியில் வெற்றி அவர்களுக்குத்தான் கிடைக்கும் என்பதற்கு உஹுத் போர் பெரும் சான்றாக அமைந்தது. அல்லாஹ் உதவியைத் தாமதப்படுத்தி வழங்குவதால் முஸ்லிம்களின் உள்ளத்தின் பெருமை அகற்றப்பட்டு அதில் பணிவு ஏற்படுத்தப்படுகிறது. ஆகவேதான் சோதனையின்போது முஸ்லிம்கள் சகித்துக் கொண்டு உறுதியாக இருந்தனர். நயவஞ்சகர்களோ பயந்து, அஞ்சி, நடுநடுங்கி நிலைகுலைந்து விட்டனர்.

    இருப்பினும் உஹுத் போரில் ஏற்பட்ட துக்க கரமான நிகழ்வால் முஸ்லிம்களைப் பற்றிப் பிறர் உள்ளத்தில் இருந்த அச்சம் அகன்று விட்டது. உள்நாட்டு வெளிநாட்டுப் பிரச்சனைகள் முஸ்லிம்களுக்கு அதிகரித்தன. அனைத்து திசைகளிலிருந்தும் ஆபத்துகள் மதீனாவைச் சூழ்ந்தன. ஆனால் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் ஞானமிக்க நுட்பமான நடவடிக்கைகள் இந்நிலையை மாற்றியது.

    “குஃப்ரில் (மூட நம்பிக்கை சார்ந்த குழப்பங்களில் வீழ்தல்) அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது; அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்; அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு” என்ற இறை வசனம் அருளப்பட்டது.


    திருக்குர்அன் 4:104, 3:176, அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×