search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அறிவோம் இஸ்லாம்: திருக்குர்ஆனில் தேனீ
    X

    அறிவோம் இஸ்லாம்: திருக்குர்ஆனில் தேனீ

    பழங்கால எகிப்தியர்களின் பெரும்பாலான மருந்து வகைகளில் தேன் முக்கிய இடத்தைப் பெற்றது. தற்போது யுனானி மருந்துகள் பெரும்பாலும் தேனை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
    தேனீக்கள் ஆறு கால்கள் கொண்ட சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாகச் சேர்த்து வைக்கின்றன. தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அவை ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாகும். ஒரு சொட்டு தேனைச் சேர்க்க தேனீ சில சமயம் 16 மைல் தூரம் வரை பறந்து செல்லுமாம். ஒரு கிலோ எடை கொண்ட தேன் சேகரிக்க தேனீக்கள் 6 லட்சத்து 68 ஆயிரம் பூக்களைச் சந்திக்கின்றன. ஒரு பவுண்டு தேன் சேகரித்துக் கொண்டு வர ஒரு தேனீ சுமார் 45 ஆயிரம் மைல் தூரம் அலை போல அலைய வேண்டும்.

    தேனீக்களின் வாழ்க்கை முறை சற்று வேறுபாடானது. இவை கூட்டமாய் ஓரினமாய் இணைந்து வாழும். ராணித் தேனீ, வேலைக்காரத் தேனீ, ஆண் தேனீ என்று தேனீக்களின் கூட்டத்தில் 3 வகை உண்டு. ராணித் தேனீயும், வேலைக் காரத் தேனீயும் பெண் இனமாகும். ஒரு பெண் தேனீ தான் அரசியாக இருக்கின்றது. ராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 10 மில்லி மீட்டர் முதல் 20 மில்லி மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒரு கூட்டில் ஒரு ராணி மட்டுமே இருக்கும்.

    அதைச் சுற்றி ஆயிரம் ஆண் தேனீக்கள், இனப்பெருக்கத்திற்காக மட்டுமே உள்ளன. ஆண் தேனீக்கள் தேன் எடுக்கப் போவதில்லை. மேலும் பணி செய்ய பெண் தேனீக்கள் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை இருக்கும். தேனீக்களில் ராணித் தேனீயே எல்லா முட்டை களையும் இடுகின்றது. ஒரு ராணித் தேனீ ஒரு நாளைக்கு 1,500 முதல் 3 ஆயிரம் முட்டைகளையும், ஆண்டுக்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும். தேனீக்களைப் பொறுத்தவரை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்குக் கட்டுப்படுதல் போன்றவற்றுக்கு சான்றாகக் கூறுவார்கள்.

    தேனடை என்னும் ஆயிரக்கணக்கான அறுகோண அறைகள் கொண்ட கூடு கட்டி தேனீக்கள் அதில் தேனைச் சேகரித்து வாழ்கின்றன. தேனீயின் கூடு வேலைக்காரத் தேனீக் களின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியில் இருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றது. இதுவே மனிதர்களின் பல பயன்பாட்டிற்கு உதவும் தேன் மெழுகு ஆகும்.

    அந்த அறைகளில் மூன்று வகைத் தேனீக்களும் தனித்தனி அறைகளில்தான் வாழும். தேனீக்களின் கூடு பொதுவாக மரங்கள், மலைக்குகை, மனிதர்கள் எளிதில் அடைய முடியாத கட்டிடத்தின் முடுக்கு, பொந்துகள் போன்ற வற்றில் கட்டப்பட்டிருக்கும். ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் இவற்றுக்கிடையே எந்தவிதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை.

    தேன் கிடைக்கும் இடத்தை வேலைக்காரத் தேனீக்கள் அறிந்து வந்து அதை மற்ற தேனீக்களுக்கு நடனமாடித் தெரிவிக்கின்றன. இது ‘தேனீ நடனம்’ எனப்படும்.

    தேனீயின் நடவடிக்கை, அவற்றின் தகவல் தொடர்பு வழிமுறை, பாதை போன்றவற்றை முதன்முதலில் ஆராய்ச்சி மேற்கொண்டவர் ஜெர்மன் பேராசிரியர் வான் ப்ரீச். இதற்காக அவருக்கு உலகின் பெரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    “உம் இறைவன் தேனீக்களுக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். ‘நீ மலைகளிலும், மரங்களிலும், (மனிதர்களாகிய) அவர்கள் கட்டுபவைகளிலும் கூடுகளை அமைத்துக் கொள்’ (என்றும்), ‘பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்)களில் இருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித்தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்’ (என்றும் உள்ளுணர்ச்சியை உண்டாக்கினான்); அதன் வயிறுகளில் இருந்து பல நிறங்களுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) நோய் நிவாரணி உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது” (16:68) என்று திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.

    உள்ளுணர்வு என்பது ஓர் உயிரினம் வெளியில் இருந்து கற்றுக் கொள்ளாமலேயே கொண்டிருக்கும் நடத்தையாகும்.

    இந்த வசனத்தில் தேனீக்கள் எங்கெங்கே கூடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்? எப்படித் தேனை உருவாக்க வேண்டும் ஆகியவற்றைத் தேனீக்களுக்கு இறைவன் (அல்லாஹ்) கற்றுத்தருகிறான். மலர்களில் உள்ள குளுக்கோசை தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. அவை வயிற்றுக்குள் சென்று மாற்றம் அடைந்து அதன் வயிற்றில் இருந்து வெளிப்படுகின்ற ஒரு கழிவுதான் தேன் என்பதை அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். தேனீக்கள் மலர்களில் இருந்து புசித்து அதன் மூலம் தேன் உருவாகிறது என்றும், அதன் வாயில் இருந்து தேன் வெளிப்படவில்லை; வயிற்றில் இருந்து வெளிப்படுகிறது என்றும் திருக்குர்ஆன் கூறி இருப்பதன் மூலம் 1,400 வருடங்களுக்கு முன்பு எந்த மனிதராலும் கற்பனையிலோ, கனவிலோகூட காண முடியாத அபூர்வ செய்தியாகும்.

    மேலும் அந்த வசனத்தில் ‘பல நிறங்களுடைய பானம் (தேன்) வெளியாகிறது’ என்று சொல்லப்பட்டுள்ளது. தேனின் நிறம் மஞ்சள், வெளிர் மஞ்சள் மற்றும் கருமையும் மஞ்சளும் கலந்த நிறமாக உள்ளது.

    ‘தேனில் மனிதர்களுக்கு நிவாரணம் உண்டு’ என்ற திருக்குர்ஆனின் கருத்தை இன்றைய மருத்துவ உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.

    தேனை ஆரோக்கியமானவர்களும் பருகலாம்; உடல் நலம் இல்லாதவர்களும் சாப்பிடலாம். எல்லா நேரங்களிலும், எல்லாப் பருவ காலங்களிலும் உண்ணலாம். சிறு குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிடலாம். தேன் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள ‘ஹீமோகுளோபின்’ அளவு அதிகரிக்கிறது. ரத்தம் சுத்தம் அடைகிறது.

    தேன், தேனீக்களுக்கு உணவாக இருப்பதுடன், மனிதனுக்கு முக்கிய உணவாகவும், அருமருந்தாகவும் இருக்கிறது. பழங்கால எகிப்தியர்களின் பெரும்பாலான மருந்து வகைகளில் தேன் முக்கிய இடத்தைப் பெற்றது. தற்போது யுனானி மருந்துகள் பெரும்பாலும் தேனை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சுத்தமான தேன் கெட்டுப்போவதில்லை. எந்தத் தொழிற்சாலைகளிலும் மனிதனால் தேனை உருவாக்க முடியாது.

    பாத்திமா மைந்தன்.
    Next Story
    ×