search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உஹத் போரின் முடிவும் நபிகளாரின் பிரார்த்தனையும்
    X

    உஹத் போரின் முடிவும் நபிகளாரின் பிரார்த்தனையும்

    அல்லாஹ்வே! உனது வளங்கள், உனது கருணை, உனது கிருபை, உனது இரணம் ஆகியவற்றை நீ எங்களுக்கு விசாலமாக வழங்குவாயாக!
    அல்லாஹ்வே! வேதம் கொடுக்கப்பட்டவர்களில் இருக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடு! உண்மையான இறைவனே!” என்று அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனிடம் பிரார்த்தனை புரிந்த பின், நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பினார்கள்.

    உஹுத் போரில் உயிர் தியாகம் செய்தவர்களை அடக்கம் செய்து கொண்டிருந்தபோது, நபிகளாரின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்டது அதனைப் பார்த்து மனம் வருந்தி அழுதார்கள் நபி முஹம்மது (ஸல்). ஹம்ஸா(ரலி) அவர்களின் மகன் ஜாஃபிர்(ரலி) தன் தந்தையின் முகத்திலிருந்த துணியை விலக்கச் சென்றபோது சிலர் அவர்களைத் தடுத்தார்கள். அப்போது ஒப்பாரி வைத்து அழும் பெண் ஒருத்தியின் குரலை நபிகளார் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “ஏன் அழுகிறாய்?” நீ அழுதாலும் அழாவிட்டாலும் வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து உயிர் தியாகிகளுக்கு நிழல் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்” என்று கூறினார்கள்.

    ஹம்ஸா(ரலி) அவர்களின் சிதைந்த உடலைக் காண அவருடைய சகோதரி ஸஃபியா அங்கு வந்தபோது, “நீங்கள் பார்க்க வேண்டாம், உங்களால் தாங்கிக் கொள்ள இயலாது” என்று எல்லோரும் கேட்டுக் கொண்டாலும் ஸஃபியா(ரலி) நான் நிச்சயமாகப் பார்த்தாக வேண்டுமென்று ஹம்ஸா(ரலி) அவர்களின் சிதைந்த உடலைப் பார்த்து “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். நாங்கள் அல்லாஹ்விற்காகவே இருக்கிறவர்கள், மீண்டும் அவனிடமே திரும்பக் கூடியவர்கள்” என்று கூறி ஹம்ஸா(ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள்.

    உயிர் நீத்த தியாகிகளின் உடல்களை மறைப்பதற்குப் போதுமான துணிகள் கிடைக்கவில்லை. ஹம்ஸா(ரலி) அவர்களைப் போர்த்துவதற்கு ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அவரது தலையை மறைத்தால் பாதங்கள் தெரிந்தன. அதனால் கால்கள் சிறு செடியால் மூடப்பட்டன.



    முஸ்லிம்களில் கிட்டத்தட்ட எழுபது பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் வீட்டிற்குச் சொல்லி அனுப்பட்டது. பெரும்பாலானோர் “நபியே! உங்களை நல்ல நிலையில் பார்த்தவுடன் மற்ற அனைத்து சோதனைகளையும் நாங்கள் சிறியதாகவே கருதுகிறோம்” என்பதாகவே அவர்களின் பதில் இருந்தது.

    நபி (ஸல்) அவர்கள் கண்ணீர் மல்கியவர்களாகப் பிரார்த்தித்தார்கள், “அல்லாஹ்வே! புகழெல்லாம் உனக்கே உரியது. நீ விரித்ததை மடக்குபவர் யாரும் இல்லை. நீ மடக்கியதை விரிப்பவர் யாரும் இல்லை. நீ வழிகேட்டில் விட்டவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை. நீ நேர்வழி காட்டியவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாரும் இல்லை. நீ கொடுத்ததைக் தடுப்பவர் யாரும் இல்லை. நீ நெருக்கமாக்கி வைத்ததைத் தூரமாக்கி வைப்பவர் யாருமில்லை. அல்லாஹ்வே! உனது வளங்கள், உனது கருணை, உனது கிருபை, உனது இரணம் ஆகியவற்றை நீ எங்களுக்கு விசாலமாக வழங்குவாயாக!

    அல்லாஹ்வே! நீங்காத, அகன்று போகாத, நிரந்தரமான அருட்கொடையை உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! சிரமமான நேரத்தில் உதவியையும், பயத்தின் நேரத்தில் பாதுகாப்பையும் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! நீ எங்களுக்குக் கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும், நீ எங்களுக்குக் கொடுக்காதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அல்லாஹ்வே! எங்களுக்கு இறைநம்பிக்கையைப் பிரியமாக்கி வை. அதை எங்களது உள்ளங்களில் அலங்கரித்து வை. இறை நிராகரிப்பு, உனது கட்டளைக்கு மாறுசெய்வது, உனக்குக் கட்டுப்படாமல் விலகிப்போவது ஆகியவற்றை எங்களுக்கு வெறுப்பாக்கி விடு. எங்களைப் பகுத்தறிவாளர்களாக ஆக்கிவிடு. அல்லாஹ்வே! எங்களை முஸ்லிம்களாக மரணிக்க வை! முஸ்லிம்களாக எங்களை வாழச் செய்!

    நஷ்டமடையாதவர்களாக, சோதனைக்குள்ளாகாதவர்களாக எங்களை நல்லோர்களுடன் சேர்த்து வை! அல்லாஹ்வே! உனது தூதர்களைப் பொய்யாக்கி, உனது வழியிலிருந்து தடுக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடு! அவர்கள் மீது உனது தண்டனையையும் வேதனையையும் இறக்குவாயாக! அல்லாஹ்வே! வேதம் கொடுக்கப்பட்டவர்களில் இருக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடு! உண்மையான இறைவனே!” என்று அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனிடம் பிரார்த்தனை புரிந்த பின், நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பினார்கள்.

    ஸஹீஹ் புகாரி 3:56:2816, 2:23:1274-75, முஸ்னத் அஹ்மது, அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.

    Next Story
    ×