search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நன்மைகளைப் பெற்றுத்தரும் வெட்கம்
    X

    நன்மைகளைப் பெற்றுத்தரும் வெட்கம்

    வெட்கம் வியாபித்திருக்கிற வரை தான் உலகில் விபரீதங்கள் கட்டுக்குள் இருக்கும். இல்லை என்றால் விளைவுகள் அபாயகரமானது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
    படைக்கப்பட்ட படைப்பினங்களில் எல்லாம் மிகச்சிறந்த படைப்பாக மனிதனை பகுத்தறிவோடு அல்லாஹ் படைத்திருக்கின்றான். மனிதன் அந்த பகுத்தறிவைக் கொண்டு பேசவும், சிரிக்கவும், சிந்திக்கவும் திறன் கொண்டதால் அவன் மிருகங்களை விட்டும் வேறுபட்டு நிற்கின்றான்.

    ஆனால் எந்த உயிரினங்களாலும் உணர்ந்து கொள்ள முடியாத, தன் உயிரோடும், உணர்ச்சிகளோடும் ஒன்றாக கலந்த ஒரு அற்புத குணாதிசயத்தை அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியதால் அவன் மேலும் சிறந்தோங்கி நிற்கின்றான். அதுதான் ‘வெட்கம்’ மனித ரத்த நாளங்களோடு ஒன்றாக கலந்து சங்கமித்துக் கொண்டிருக்கிற உணர்ச்சிப்பெருக்குதான் அது.

    வெட்கம் என்ற உணர்வு இருப்பதால் மட்டுமே, மனித இனம் விபரீதங்களின் வீரியத்தை விட்டு விலகி நிற்கிறது. வெட்கம் விலகும் போது அந்தரங்கங்களும் பாழ்பட்டு போகும்.

    ஆடைகள் அணிகிறோம், அந்தரங்கங் களைப் மறைத்துக் கொள்ள; மானத்தை பாதுகாத்துக் கொள்ள. இதை யாரும் மறுத்துச் சொல்வதில்லை. ஆனால் இன்றைய நாளில் ஆண், பெண் ஆடை அணிவதில் கூட கண்ணியங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன. காரணம் வெட்கம் நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டதால் தானே.

    இன்றைய சூழ்நிலைகளின் தாக்கத்தால் மனங்கள் மாறுபட்டு சில மனித ஜென்மங்கள், வெட்கம் என்ற நல்ல பண்பை உதிர்த்துவிட்டு கலாசாரங்களை உதாசீனப்படுத்துவதால் தான் பண்பாடுகள் அழிவை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கின்றன.

    அல்லாஹ் சொல்கிறான்: ‘நபியே! நம்பிக்கையாளர்களுக்கு, தம் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தன் வெட்கத்தலங்களை பேணிக்கொள்ள வேண்டும் என்று நீர் கூறுவீராக. இது அவர்களுக்கு மிகத்தூய்மையானது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்கின்றவற்றைப் பற்றி நன்கு தெரிந்தவன்’. (திருக்குர்ஆன்-24:30)

    எல்லா பாவங்களின் தொடக்கமும் பார்ப்பதில் இருந்து தான் ஆரம்பம் ஆகிறது. பார்வைகள் தவிர்க்கப்படும் போது அவசியமில்லாத, அனாச்சார, ஆபாச காட்சிகள் காண்பதிலிருந்து விலகி கொள்ள முடியும். அதனால் பாவங்கள் நிகழ்வது தடுக்கப்படலாம்.

    இதற்கு வலு சேர்க்கும் வகையிலே, இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நிச்சயமாக நாணம் கொள்வது ஈமானில் ஒரு பகுதி’ என்று அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அபுஹுரைரா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் சொன்னதாக அறிவிக்கிறார்கள்: ‘ஈமானிற்கு அறுபதிற்கும் மேலான கிளைகள் உண்டு. அவற்றில் மிக முக்கியமானது வெட்கம் என்ற கிளையாகும்’.

    நாம் எந்த அளவிற்கு அந்தரங்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதைவிட அதிகமான அளவில் வெட்கம் என்ற பண்பை பாழ்படாமல் பாதுகாக்க வேண்டும் என்பது இங்கு பட்டவர்த்தமாக பறை சாட்டப்பட்டுள்ளது.

    பெண்கள் பேண வேண்டிய வெட்கம் என்பதை பற்றிச் சொல்லும் போது, ‘அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு’ ஆகிய நான்கும் அவர்களுக்கு அத்தியாவசியமான ஒன்று. அவற்றில் நாணம் அதிக அளவு பேணப்படும் போது தான் அவள் போற்றப்படுகிறாள்.

    அந்த குணாதிசயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், ‘ஒரு பெண் பிற ஆடவர்களை கண்டால் தன் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும். அணியும் ஆடைகளில் கண்ணியம், ஒழுக்கம் பேணப்பட வேண்டும். பிற ஆடவர்களுடன் பேசும் போது பேச்சில் நளினம் காட்டக்கூடாது. எந்த சந்தர்ப்பத்திலும் பிற ஆணுடன் தனித்திருப்பதை தவிர்க்க வேண்டும்’.

    இந்த நான்கு நிலைகளை ஒரு பெண் அடைய வேண்டும் என்றால் அவளிடம் வெட்கம் என்கின்ற பண்பு குடியிருக்க வேண்டும். சூழ்நிலைகள் தவிர்க்கப்படும் போது சூழ்ச்சிக்கான காரணங்களும் களையப்படலாம்.

    வெட்கம் என்ற உயர்ந்த பண்பால் இன்றைய காலச்சூழ்நிலையில் மகளிர் எதிர்கொள்ளும் எத்தனையோ கலாசார சீர்கேடுகளை களைந்து எறிந்து விடமுடியும். ‘நாணம்’ என்ற பண்பை மறந்து விட்டால் உணர்ச்சிகள் மரத்து எல்லாமே சகஜம் தான் என்று சகிப்பு தன்மை மேலோங்கிவிடும்.

    வெட்கம் மனிதனை விட்டு மறைந்து போகும்போது தான் காலங்காலமாய் கட்டிகாத்த சமூக விழுமியங்கள் தகர்ந்து போகின்றன. உடலில் வலு இருந்தும், உழைக்க வழியிருந்தும் ஒருவன் கையேந்துகின்றான் என்றால் அவனிடம் வெட்கம் என்ற உணர்வு இல்லை என்றுதானே அர்த்தம். அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் லஞ்சமும், ஊழலும் பெருகிக்கிடப்பதற்கு வெட்கம் என்ற குணாதிசயத்தை அவர்கள் இழந்துவிட்டது தானே காரணம்.

    கடன் பெற்றவன் கடனைத் திருப்பி செலுத்த வேண்டும் என்ற கடமையுணர்வு, மானத்திற்கு அஞ்சிய வெட்கம் என்ற உணர்வு இருப்பதால் மட்டுமே. அன்னிய பெண்ணை கண்ணோடு கண் நேராக பார்க்க அச்சம் ஏற்படுகிறது என்றால், பாலியல் பாவங்கள் கூட தவிர்க்கப்படுகிறது என்றால் வெட்கம் என்ற உணர்வு இருப்பதால் மட்டுமே.

    எனவே தான் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘வெட்கம் எப்பொருளில் இருந்தாலும் அது அப்பொருளை அழகாக்காமல் இருப்பதில்லை’ என்று கண்மணி நாயகம் நவின்றார்கள். (திர்மிதி : 1897)

    வஞ்சப் புகழ்ச்சியாலோ, அல்லது அளவிற்கு மீறிய புகழ்ச்சியாலோ ஒருவன் தலைகனம் என்னும் அகம்பாவத்தில் வீழ்ந்து அன்னியரை அற்பமாய் எண்ணுகின்ற அகந்தையிலிருந்து காப்பது வெட்கம் என்ற பண்பு அல்லவா?

    ‘வெட்கம் கொள்வது அனைத்திற்கும் நல்லதே’. (ரியாலுஸ் ஸாலிஹீன்-682)

    அண்ணல் நபிகளார் அதிக அளவில் வெட்கம் என்ற பண்பை பெற்றிருந்தார்கள் என்பது அவர்கள் சரிதையைப் படித்தவர் களுக்குத் தெரியும்.

    எனவே வெட்கம் வியாபித்திருக்கிற வரை தான் உலகில் விபரீதங்கள் கட்டுக்குள் இருக்கும். இல்லை என்றால் விளைவுகள் அபாயகரமானது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

    எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
    Next Story
    ×