search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அக அழகை அழகுபடுத்துங்கள்
    X

    அக அழகை அழகுபடுத்துங்கள்

    ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என ஏந்தல் நபி (ஸல்) ஏவுகிறார்கள். இதன்படி அனைத்து முஸ்லிம்கள் வாழ்ந்து காட்டவேண்டும்.
    ‘ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு முகம் காணும் கண்ணாடியைப் போன்று அவன் தன் சகோதரனுக்கு வரும் பாதிப்புகளை தடுத்து விடுகின்றான்; மேலும் அவன் தன் சகோதரனை பின் பகுதியிலிருந்து வரும் தீங்குகளை விட்டும் பாதுகாக்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு பல வகைகளில் உவமையாக, உதாரணமாக திகழ்கின்றான். மேற்கூறப்பட்ட நபி மொழியில் ஒரு முஸ்லிம் முகம் காணும் கண்ணாடியைப் போன்று பிற முஸ்லிம்களிடமும், பிற மக்களிடமும் வாழ்ந்து காட்ட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    கண்ணாடி கூறும் தத்துவம்

    நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டுவிட்டால், முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது அது தெரிகிறது. அந்த அழுக்கையோ, கறையையோ கண்ணாடி கூட்டுவது இல்லை; குறைப்பதும் இல்லை. உள்ளதை உள்ளபடி கண்ணாடி காட்டு கிறது அல்லவா?

    அதேபோல் நாமும் நமது சகோதரனிடம், நண்பனிடம், கணவரிடம், மனைவியிடம், குழந்தையிடம், பொதுமக்களிடம் எந்த அளவுக்கு குறை உள்ளதோ அந்தளவுக்குத் தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர, எதையும் மிகைத்தோ, ஜோடித்தோ சொல்லக்கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக ஆக்கவோ கூடாது. இது கண்ணாடி கூறும் முதல் தத்துவம்.

    கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் அது உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று சென்றுவிட்டால், அது அமைதியாகிவிடும். இதுபோல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. ஒருவரின் குறையை அவர் இல்லாத போது பேசினால், அது புறம். அவரிடமே இல்லாத குறையைப் பற்றி பேசினால், அது அவதூறு ஆகும். இது கண்ணாடி கூறும் இரண்டாம் தத்துவம்.

    ஒருவருடைய முகக்கறையையும், குறையையும் கண்ணாடி காட்டுவதால், அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ அடைவாரா? இல்லையே...! அதேபோல, நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக்காட்டினால், அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூறவேண்டும். அந்தக்குறைகள் நம்மிடம் இருக்குமேயானால், அவற்றை திருத்திக் கொள்ளவேண்டும். இது கண்ணாடி கூறும் மூன்றாம் தத்துவம்.

    கண்ணாடி குறைகளை மட்டும் காட்டுவது இல்லை. முகத்தில் வெளிப்படும் அழகையும், கவர்ச்சியையும் காட்டுகிறது. நாம் பிறரின் குறைகளை மட்டும் கவனிக்கக் கூடாது. அவரின் நிறைகளையும் மனநிறைவாக வாழ்த்தவேண்டும். இவ்வாறு வாழ்த்தும்போது, இரு உள்ளங்களுக்கிடையே அன்பும், கருணையும், அரவணைப்பும் உண்டாகிவிடுகிறது. இது கண்ணாடி கூறும் நான்காம் தத்துவம்.

    கண்ணாடி உடைந்துவிட்டால், நாம் நமது நிறை, குறைகளை சீர் செய்ய முடியாது. இதனால் மக்கள் முன்னிலையில் கேவலத்திற்கும் பரிகாசத்திற்கும் ஆளாக நேரிடும். இவ்வாறு நம்மை சீர் செய்யும் ஒரு முஸ்லிமின் உள்ளத்தை நாம் உடைத்து காயப் படுத்தினால், அவரால் நமக்கு கிடைக்கும் நேர்வழி, சீர்திருத்தம் கிடைக்காமல் போய்விடும். நாம் சீர்கெட்டு விட்டால், உலகம் நம்மை பழித்தும், இழித்தும் பேசும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். இது கண்ணாடி கூறும் ஐந்தாம் தத்துவம்.

    கண்ணாடியில் முகம் காணும்போது பின்வரும் துஆவை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தரு கிறார்கள்: ‘இறைவா! எனது புற தோற்றத்தை நீ அழகாக்கியது போன்று, எனது அக தோற்றத்தையும் நீ அழகுபடுத்துவாயாக’.

    ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமின் வெளித்தோற்றத்தை கண்ணாடி போன்று அழகுபடுத்துவதை போல், அவரின் அகத்தோற்றத்தையும் அழகுபடுத்தும் நற்செயல்களையும் கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமின் அகமும், புறமும் தூய்மைப்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். இது கண்ணாடி கூறும் ஆறாம் தத்துவம்.

    இவ்வாறு தான் ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என ஏந்தல் நபி (ஸல்) ஏவுகிறார்கள். இதன்படி அனைத்து முஸ்லிம்கள் வாழ்ந்து காட்டவேண்டும்.

    - மவுலவி அ.செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து,

    திருநெல்வேலி டவுண்.
    Next Story
    ×