search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உஹூத் போரின் பின்னணியும் துவக்கமும்
    X

    உஹூத் போரின் பின்னணியும் துவக்கமும்

    எதிரிகளின் படையில் அதிகமான போர் வீரர்களும் போர் ஆயுதங்களும் இருந்தன. இருப்பினும் அவர்களுக்கு முஸ்லிம்களைப் பற்றிய பயமிருந்தது.
    உஹுத் போரில் நபிகளார் துரிதமாகக் காரியங்களைச் செய்து ராணுவச் சட்டங்களைக் கூறி பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி, சிறிய குழுவை மலையில் நிறுத்தி, முஸ்லிம்களைப் பின்புறமாக எதிரிகள் தாக்கிவிடாமல் இருக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தார்கள் நபி முஹம்மது (ஸல்).

    எதிரிகளின் படையில் அதிகமான போர் வீரர்களும் போர் ஆயுதங்களும் இருந்தன. இருப்பினும் அவர்களுக்கு முஸ்லிம்களைப் பற்றிய பயமிருந்தது. காரணம் “நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சிக்கை செய்வீராக!” என்ற குர்ஆன் வசனம் அருளப்பட்ட போது நபிகளார் தனது நெருங்கிய உறவினர்களான ஹாஷிம் கிளையினரையும் மற்றவர்களையும் சந்தித்துப் பேசியபோது, நபிகளாரின் தந்தையின் சகோதரர் அபூ லஹப் இஸ்லாமையும் இறைத் தூதரையும் இழிவாகத் தொடந்து பேசினார், நபிகளாருக்குப் பலவகையான இன்னல்களைத் தந்தபோது, திருக்குர்ஆனில் ஸூரத்துல் லஹப்பில் அவனுக்கு இழி மரணம் வந்தடையும் என்று வந்துள்ளதைத் தெரிந்தும் கூட ஆயுள் அவகாசமிருந்தும் அவன் மாறு செய்தான்.

    அவனுடைய வாழ்வு இப்படித்தான் அமையுமென்று திட்டவட்டமாகச் சொல்லப்பட்டிருந்தபடியே அவன் துர்மரணம் அடைந்தான். குர்ஆனின் சான்று வெளிப்படையானது, ஆனால் ஏக இறைவன் ஒருவனே என்று ஏற்க மனமில்லாத இணை வைப்பாளர்கள், ‘தான்’ என்ற அகந்தையிலிருந்து விடுபடாதவர்களாகத் தமக்குத் தெரிந்த குறுக்கு வழியைக் கையாள நினைத்தனர்.



    மதீனாவாசிகளிடம் அபூ ஸுஃப்யான் தூதனுப்பி “எங்களுக்கு உங்களிடம் எந்தப் பகையுமில்லை, உங்களிடம் போர் செய்ய வரவில்லை. எங்களின் ஒன்றுவிட்ட சகோதரரை மட்டும் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள், நாங்கள் திரும்பிச் சென்று விடுகிறோம்” என்று ஏமாற்ற நினைத்த வார்த்தைகள் முஸ்லிம்களிடம் பலிக்காமல் போனது. அடுத்த முயற்சியாக மதீனாவின் முன்னாள் தலைவனான அபூ ஆமிர் என்பவரை அனுப்பிப் பார்த்தனர், அதையும் முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை.

    தங்கள் படையின் அணிகளை அமைத்தனர். குறைஷிப் பெண்களும் படைவீரர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களிடம் கவி பாடி உணர்வுகளைத் தூண்டவும் செய்தனர். பொதுத் தளபதியாக அபூ ஸுஃப்யான், வலப்பக்கத்தில் காலித் இப்ன் வலீத்தின் குதிரைப்படை, இடப்பக்கத்தில் பத்ருப் போரில் தனது தந்தை அபூ ஜஹ்லை இழந்த அவனது மகன் இக்ரிமா, காலாட்படை வீரர்களுக்கு ஸஃப்வான் இப்னு உமய்யா, மற்றும் அம்பெறியும் வீரர்களுக்கு அப்துல்லாஹ் இப்ன் அபூ ரபீஆ என்று தலைமையேற்று முன்னேறினர்.

    போருக்கு ஆயுத்தமாகினர். எதிரிப் படையின் முரட்டுக் கடா என்று அழைக்கப்படும் கபிஷுல் கதீபா முஸ்லிம்களை நேருக்கு நேர் மோத அழைத்தான். அழைத்தவனை ஒரே பாய்ச்சலில் வெட்டிச்சாய்த்தார்கள்  ஜுபைர்(ரலி). சண்டை சூடுபிடித்தது. நபிகளார் ‘அல்லாஹ் மிகப் பெரியவன் - அல்லாஹு அக்பர்’ என்று முழங்கினார்கள்.

    குறைஷிகளின் கொடியை தாங்கியவரான தல்ஹா இப்னு அபூ தல்ஹா போரின் தீப்பிழம்பை மூட்டினான்.

    அங்குச் சண்டை கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

    திருக்குர்ஆன் 111:1-5, அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×