search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நயவஞ்சகர்களின் உள்ளங்களை வெளிப்படுத்திய இறைவன்
    X

    நயவஞ்சகர்களின் உள்ளங்களை வெளிப்படுத்திய இறைவன்

    இதைத் திருக்குர்ஆனில் ஸூரத்துல் இம்ரானில் “அந்தப் போரில் உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து ஓடி விடலாமா என்று எண்ணியபோது – அல்லாஹ் அவ்விரு பிரிவாருக்கும் உதவி செய்து காப்போனாக இருந்தான். ஆகவே, முஸ்லிம்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
    மதீனாவைவிட்டு வெளியேறாமல்.. ஆனால் அதே சமயம் குறைஷிகள் மதீனாவிற்குள் நுழைய முயன்றால் தெரு முனைகளிலிருந்தே அவர்களை எதிர்ப்போமென்று நபி முஹம்மது (ஸல்) அவர்கள், நபித்தோழர்களிடம் கேட்ட ஆலோசனைக்கு நபித் தோழர்கள் மறுப்பு தெரிவித்து மதீனாவைவிட்டு வெளியேறி போர் புரிவோம் என்று கேட்டுக் கொண்டதன் பேரில், அதனை ஏற்றுக் கொண்டு நபி முஹம்மது (ஸல்) போருக்குத் தயாரானவர்களைச் சந்தித்துத் தகுந்த பிரிவுகளாக அவர்களைப் பிரித்து,  பார்வையிட்டார்கள்.

    போர் செய்யப் புறப்பட்டவர்களிலிருந்து பலவீனமானவர்களை மதீனாவிற்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள். ஆங்காங்கே நிறுத்தி உரிய நேரத்தில் தொழுகையைக் கடைப்பிடித்தார்கள் ஆனால் ராணுவ முகாமின் பாதுகாப்புக்காக, எல்லா நேரங்களிலும்.. கண்காணிப்பிற்காக சுழற்சி முறையில் ஆட்களை நியமித்திருந்தார்கள்.

    எதிரிகளின் படை தெரியும் அளவுக்கு, எதிரிகள் முகாமிட்டிருந்த இடத்திற்கு அருகில் வந்தபோது அதிகாலை தொழுகைக்கான நேரம் வந்ததால் அங்கு நின்று அனைவரும் ஃபஜர் தொழுகையை நிறைவேற்றினார்கள்.



    வெளித்தோற்றத்திற்காக மட்டும் இஸ்லாத்தை ஏற்ற இப்னு உபை படையில் ஒரு பகுதியான கிட்டதட்ட 300 வீரர்களை அழைத்துக் கொண்டு போர் செய்யாமல் திரும்பச் செல்ல விழைந்தான். இவன் உயிருக்குப் பயந்து போர் புரிய வரவில்லையென்றால் அவன் மதீனாவிலேயே தங்கியிருக்கலாம், ஆனால் அவனது நோக்கம், வீரர்களிடையே திடீர் பீதியை ஏற்படுத்தி, குழப்பத்தை நிகழ்த்துவது மட்டுமே.

    அவன் நோக்கத்தின்படியே மற்ற இரு பிரிவினர்களும் போரிலிருந்து பின் வாங்க இருந்தனர். அப்போது இறைவன் அவர்களின் மனதில் துணிவை ஏற்படுத்தினான். இதைத் திருக்குர்ஆனில் ஸூரத்துல் இம்ரானில் “அந்தப் போரில் உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து ஓடி விடலாமா என்று எண்ணியபோது – அல்லாஹ் அவ்விரு பிரிவாருக்கும் உதவி செய்து காப்போனாக இருந்தான். ஆகவே, முஸ்லிம்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    போரிலிருந்து பின் வாங்கியவர்களை அப்துல்லாஹ் இப்னு ஹராம் (ரலி) சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வர முயன்றார்கள். “நீங்கள் களத்தில் இறங்கிப் போர் புரிய வேண்டாம், எங்களுக்கு அரணாக நில்லுங்கள் போதும்” என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் “நீங்கள் போருக்கு வரவில்லை, உங்களையே அழித்துக் கொள்ள வந்திருக்கிறீர்கள்” என்று கூறினர்.

    இச்சம்பவம் நிகழ்ந்ததே மாறுசெய்பவர்களை அடையாளம் காட்டத்தான். இது குறித்துத் திருக்குர்ஆனில்,  “நயவஞ்சகரைப் பிரித்து அறிவதற்கும் தான்; அவர்களிடம் கூறப்பட்டது: “வாருங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள் அல்லது பகைவர்கள் அணுகாதவாறு தடுத்து விடுங்கள்,” அப்போது அவர்கள் சொன்னார்கள்: “நாங்கள் போரைப் பற்றி அறிந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம்.” அன்றையதினம் அவர்கள் நம்பிக்கையை விட நிராகரிப்பின் பக்கமே அதிகம் நெருங்கியிருந்தார்கள்; தம் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தம் வாய்களினால் கூறினர்; அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைப்பதையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்” என்றும் இவர்களைக் குறிப்பிட்டே சொல்லப்பட்டுள்ளது.

    திருக்குர்ஆன் 3:122, 3:167

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×