search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஞானம் பெற்ற மேதை
    X

    ஞானம் பெற்ற மேதை

    மறக்க வேண்டிய இரண்டு: ‘நீங்கள் பிறருக்கு செய்த நன்மை, பிறர் உங்களுக்கு செய்த தீமை. இவ்விரண்டையும் எப்போதும் மறந்துவிடுங்கள்’.
    எவர்களுடைய வாழ்வில் இத்தகைய நல்லுபதேசங்கள் நடைமுறைபடுத்தப்படுமோ அவர்களுடைய ‘வாழ்வு’ என்பது ‘இல்ஹாம்’ உடையதாக மாறிவிடும். அது இறைநேசத்தையும், இறை நெருக்கத்தையும் பெற்றுத் தந்துவிடும்.

    எவர்களுடைய வாழ்வில் இத்தகைய நல்லுபதேசங்கள் நடைமுறைபடுத்தப்படுமோ அவர்களுடைய ‘வாழ்வு’ என்பது ‘இல்ஹாம்’ உடையதாக மாறிவிடும். அது இறைநேசத்தையும், இறை நெருக்கத்தையும் பெற்றுத் தந்துவிடும்.

    நபிமார்கள் என்ற தீர்க்கத்தரிசிகளுக்கு இறைவன் அருளுகின்ற செய்திகள் ‘வஹீ’ (இறைத்தூது) என்று கூறப்படும். இறைவனின் விருப்பத்திற்கு ஆளான ஞானியர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கு ‘இல்ஹாம்’ (நல்லுதிப்பு) என்று அழைக்கப்படும்.

    இறுதித்தூதரான முகம்மது நபியோடு நபித்துவம் நிறைவு பெற்று விட்டதை இறைவன் தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:

    ‘உங்களில் உள்ள ஆடவர்களில் எவருக்கும் முகம்மது (நபி அவர்கள்) தகப்பனாக இருக்கவில்லை. எனினும் அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (கடைசி) முத்திரையாகவும் இருக்கின்றார். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தோனாக இருக்கிறான்’. (33.40)

    முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு யாதொரு நபியும் இனி வரமாட்டார்கள் என்பதை மேலே சொன்ன வசனம் நன்கு தெளிவுபடுத்துகின்றது. எனவே ‘வஹீ’யின் வாசல் நிறைவு பெற்று விட்டது. ‘இல்ஹாம்’ உடைய அருள்வாசலை தனது நேசர்களுக்காக யுக முடிவு நாள் வரை என்றும் இறைவன் திறந்தே வைத்திருக்கின்றான்.

    இல்ஹாம் என்ற ஞானத்தைப் பெற்ற மேதையான, ஹசரத் லுக்மான் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பிரசித்து பெற்று விளங்கினார்கள். அவர்கள் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு சிறப்பித்துக் கூறுகின்றது:

    ‘லுக்மானுக்கு திட்டமாக நாம் ஞானத்தை கொடுத்தோம். அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்துவீராக (என்று கூறினோம்). எவர் நன்றி செலுத்துகிறாரோ, அவர் நன்றி செலுத்துவதெல்லாம் தமது (நன்மைக்காக) தான். எவர் (அதனை) நிராகரிக்கிறாரோ (அது அவருக்கே கேடாகும்), நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன், புகழுக்குரியவன். (31-12)

    ஞான மேதை ஹசரத் அவர்களின் பெயரிலேயே ‘சூரத்து லுக்மான்’ என்ற 31 வது அத்தியாயம் குர்ஆனில் இறங்கி உள்ளது. இது ஞானம் பெற்ற மேதைகளுக்கு எல்லாம் இறைவன் வழங்கிய மகத்தான கண்ணியமாகவே கருதப்படுகின்றது.

    ஹசரத் லுக்மான் அவர்கள், தங்களது காலத்தில் வாழ்ந்த அநேக நபிமார்களுக்கு பணிவிடை (ஹிக்மத்) செய்து தனது ஞானத்தை பெருக்கிக்கொண்டார்கள். இயல்பாகவே இறைவன் இவர்களுக்கு மருத்துவ ஞானத்தையும் மிக அதிகமாக வழங்கியிருந்ததால், ‘லுக்மானுல் ஹக்கீம்’ என்றும் அழைக்கப்பட்டார்கள். ‘ஹக்கீம்’ என்ற சொல்லுக்கு ‘மருத்துவர்’ என்பது பொருளாகும்.

    யுனானி மருத்துவத்தின் அடிப்படை ஹசரத் லுக்மான் ஹக்கிமிடமிருந்தே ஆரம்பமாகிறது. இவர் கள் உடல்கூறு மற்றும் மனக்கூறு மருத்துவத்தில் நிபுணராக விளங்கினார்கள்.

    இவர்களை சிலர் நபி என்றும் கூறுவார்கள். ஆனால் மார்க்க அறிஞர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதனை மறுத்து கூறுகிறார்கள். “அல்லாஹ்வால், ஹசரத் லுக்மான் நல்லறிவும் ஞானமும் கொடுக்கப்பட்டவர்கள். அவர்கள் நபியல்லர். ஆடு மேய்த்த ‘ஹபசி’ (ஒரு இனத்தை சார்ந்தவர்)” என்கிறார்கள்.

    ‘எனதருமை மகனே’ என்று அழைத்து தனது மகனுக்கு கூறுவது போல் அமைந்துள்ள இவரது உபதேசங்கள் ஆதமுடைய மகன்களான மனித குலம் முழுமைக்கும் உள்ள உபதேசமாகவே உள்ளது.

    திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள இவர்களின் உபதேசம் குறித்து சிலவற்றை பார்ப்போம்.

    ‘எனது அருமை மகனே, இறைவனுக்கு நீ இணை வைக்காதே. நிச்சயமாக இணை வைத்தல் மிகப்பெரும் அறியாமையாகும்’. (31-13)

    ‘எனது அருமை மகனே, நிச்சயமாக (உன் செயல் நல்லதோ கெட்டதோ), அது கடுகின் விதையளவு இருந்தாலும் (சரி), இன்றும் அது ஒரு பாறைக்குள்ளாகவோ அல்லது வானத்திலோ, பூமியிலோ, (எங்கு மறைந்து இருந்தாலும்) (உனது இறைவன்) அல்லாஹ் அதனை (வெளி)க் கொண்டு வரும் (ஆற்றலுள்ளவன்). நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவாளன், (அனைத்தையும்) நன்கு அறிந்தவன்’. (31-16)

    ‘என்னுருமை மகனே, தொழுகையை கடைப்பிடிப்பாயாக, நன்மையானவற்றை ஏவுவாயாக, தீமையை விட்டும் (மக்களை) தடுப்பாயாக, (இதனால்) உனக்கு ஏற்படும் இன்னல்களை (நீ) பொறுமையுடன் (சகித்து) கொள்வாயாக. நிச்சயமாக காரியங்களில் இது (மிக) உறுதியானது ஆகும்’. (31-17)

    ‘இன்னும் (பெருமை கொண்டு) உன்னுடைய முகத்தை (மற்ற) மனிதர்களை விட்டும் திருப்பிவிடாதே, பூமியில் கர்வமாக நடக்காதே. நிச்சயமாக அல்லாஹ் பெருமையடித்து கர்வம் கொள்ளும் எவரையும் நேசிப்பதில்லை’. (31-18)

    எவர்களுடைய வாழ்வில் இத்தகைய நல்லுபதேசங்கள் நடைமுறை படுத்தப்படுமோ அவர்களுடைய ‘வாழ்வு’ என்பது ‘இல்ஹாம்’ உடையதாக மாறிவிடும். அது இறைநேசத்தையும், இறை நெருக்கத்தையும் பெற்றுத் தந்துவிடும்.

    இவர்கள் ஐயூப் நபியுடைய காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததாக சரித்திர குறிப்பில் காணப்படுகிறது. அவர்களின் உபதேசத்திலிருந்து இரண்டு விஷயங்களைப் பார்ப்போம்.

    ‘இரண்டை நினைவில் வையுங்கள், இரண்டை எப்போதும் மறந்து விடுங்கள்’.

    நினைவில் கொள்ள வேண்டிய இரண்டு: ‘இறைவனையும், இறப்பையும் எப்போதும் நினைவில் வையுங்கள்’.

    மறக்க வேண்டிய இரண்டு: ‘நீங்கள் பிறருக்கு செய்த நன்மை, பிறர் உங்களுக்கு செய்த தீமை. இவ்விரண்டையும் எப்போதும் மறந்துவிடுங்கள்’.

    மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, திருநெல்வேலி மாவட்டம்.
    Next Story
    ×