search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தெரிந்தவராயினும், தெரியாதவராயினும் அவருக்கு ஸலாம் சொல்லுங்கள்
    X

    தெரிந்தவராயினும், தெரியாதவராயினும் அவருக்கு 'ஸலாம்' சொல்லுங்கள்

    'ஸலாம்' என்ற சொல்லுக்கு உள்ளார்ந்த உள்ளன்பை வெளிப்படுத்துகிற சொல்லாகும். 'ஸலாம்' என்ற அரபுச் சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன.
    மனிதர்கள் தினந்தோறும் ஒருவரையருவர் சந்தித்துக் கொள்ளும்போது நலம் விசாரிப்பதும், வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதும் வழிவழியாக வந்த வழிமுறையாகும்.

    ஒருவரை முதன்முறையாகச் சந்திக்கும்போது 'வணக்கம்' கூறுவது தமிழர்களின் பண்பாடாகும். காலையில் சந்திக்கும்போது 'குட் மார்னிங்' என்பதும், மாலையில் சந்திக்கும்போது 'குட் ஈவனிங்' என்பதும், இரவில் பிரிகிற நேரத்தில் 'குட் நைட்' என்பதும் ஆங்கிலேயர்கள் நடைமுறை.

    இன்னும் 'வந்தனம்', 'நமஸ்தே', 'நமஸ்காரம்' போன்ற வாழ்த்துச்சொற்களும் உண்டு.

    ஆனால் இவற்றுக்கெல்லாம் இல்லாத சிறப்பு, இஸ்லாம் சொல்லித் தந்த 'ஸலாம்' என்ற சொல்லுக்கு உண்டு. அது உள்ளார்ந்த உள்ளன்பை வெளிப்படுத்துகிற சொல்லாகும்.

    'ஸலாம்' என்ற அரபுச் சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. 'பாதுகாப்பு' என்பது அவற்றுள் ஒன்று. இதன்படி 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கூறினால், 'உங்களுக்கு இறைவனின் பாதுகாப்பு கிடைக்கட்டும்' என்பது பொருள். அதாவது இறைவன் உங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பான்; நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. 'ஸலாம்' என்பதற்கு இன்னொரு பொருள், 'சாந்தி, சமாதானம்.' அதாவது நம்மிடையே சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டும்.

    'ஸலாம்' என்ற சொல்லுக்கு வாழ்த்து, முகமன் ஆகிய பொருள்களும் உண்டு.

    மேலும், இறைவனின் 99 திருநாமங்களில் 'அஸ்ஸலாம்' என்பதும் இடம் பெற்றுள்ளது. இறைவன் (அல்லாஹ்) அனைத்துக் குறைபாடுகளை விட்டு நீங்கியவன். 'நிச்சயமாக அல்லாஹ்வே 'ஸலாமாக' இருக்கின்றான்' என்பது நபிமொழியாகும்.

    இறைவனால் அவனது அடியார்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. அதனால் உலக மக்களின் நன்மைக்காக இறைவன் தன் பெயரை 'ஸலாம்' என்று வைத்திருக்கின்றான்.

    ஸலாமுக்கு, இறைவன் உங்களோடு இருக்கின்றான் என்ற பொருளும் கூறப்படுகிறது. எனவே 'ஸலாம்' கூறும்போதும், அதற்குப் பதில் 'ஸலாம்' கூறும்போதும் ஒருவர் மற்றொருவரைப் பார்த்து, 'இறைவன் உங்களோடு இருக்கின்றான்' என்று வாழ்த்துகின்றனர்.

    முதலில் 'ஸலாம்' கூறுபவர், 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கூற வேண்டும். இதற்கு, 'உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக' என்று பொருள். பதில் கூறுபவர், 'வ அலைக்கும் ஸலாம்' என்று சொல்ல வேண்டும். 'உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக' என்று இதற்கு அர்த்தம்.

    ஸலாம் சொல்லும்போது, 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொல்வதோடு நிறுத்தி விடாமல், 'வ ரஹ்ம(த்)துல்லாஹி வ பரகா(த்)துஹ§' என்பதையும் சேர்த்து சொல்லுதல் சிறப்பாகும். இதற்கு, 'இன்னும் இறைவனின் அருளும், அவனது நிரந்தரமான அபி விருத்தியும் உண்டாகட்டும்' என்பது பொருள். பதில் அளிப்பவர்களும், 'வ அலைக்கும் ஸலாம், வ ரஹ்ம(த்)துல்லாஹி வ பரகா(த்)துஹு' என்று கூற வேண்டும்.

    'அஸ்ஸலாமு அலைக்கும்- இதில் 'அலைக்கும்' என்பது பன்மை. இதற்கு 'உங்கள் மீது' என்று அர்த்தம்.

    'அஸ்ஸலாமு அலைக்க'- இதில் 'அலைக்க' என்பது ஒருமை. இதற்கு 'உன் மீது' என்று பொருள்.

    எனவே ஒருவருக்கு 'ஸலாம்' கூறினால் 'அஸ்ஸலாமு அலைக்கும்' (உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக') என்று பன்மையிலேயே கூற வேண்டும்.

    'உங்கள் மீது' என்ற வார்த்தையில் அவருடன் இருக்கின்ற அமரர்களையும், உலக முஸ்லிம்களையும் மனதில் நாடி, இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப் படையில் அவ்வாறு மொழிய வேண்டும்.

    சந்திக்கும்போது மட்டுமல்ல; பிரியும்போதும் 'ஸலாம்' சொல்ல வேண்டும் என்கிறது, இஸ்லாம்.

    ஸலாத்தை நேரிலும் சொல்லலாம். வெளியூரில் மற்றும் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ வேறொருவர் மூலமாகவும் கூறலாம்.

    வெளிநாடு செல்ல இருக்கும் உறவினர் ஒருவர், நம்மிடம் 'பயணம்' சொல்லி வாழ்த்து பெற வருகிறார். அவரிடம், 'நீங்கள் அங்கு என் அண்ணன் மகனைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படும். அப்போது அவருக்கு, 'என் ஸலாத்தைச் சொல்லுங்கள்' என்கிறோம். அவரும் அந்த ஸலாத்தைச் சுமந்து கொண்டு வெளிநாடு செல்கிறார்.

    சொல்லியபடியே அண்ணன் மகனைச் சந்தித்து ஸலாத்தைச் சமர்ப்பிக்கிறார்.

    இதைக் கேட்ட அண்ணன் மகன், 'வ அலைக்க அலைஹி(ஸ்)ஸலாம்' என்று மறுமொழி பகர்வார்.

    வ அலைக்க - இன்னும் தங்களுக்கும்
    வ அலைஹி - (சொல்லி அனுப்பிய) அவருக்கும்
    ஸலாம் - சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக.
    ஸலாத்தைச் சொல்லி அனுப்பியவருக்கு மட்டுமல்ல; அதைச் சுமந்து சென்றவருக்கும் இங்கே 'சோபனம்' கூறப்படுகிறது.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ஒரு மனிதர் சென்று, 'இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். அதற்கு நபிகளார், '(பசித்தவருக்கு) உணவு அளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும், உமக்கு அறிமுகமற்றவருக்கும் முகமன் (ஸலாம்) சொல்வதும் ஆகும்' என்று பதில் அளித்தார்கள்.

    'தெரிந்தவராயினும், தெரியாதவராயினும் அவருக்கு 'ஸலாம்' சொல்லுங்கள் என்று சொல்வது உயர்ந்த பண்பாட்டைப் பண்பாடும் சொல்லாகும்.
    Next Story
    ×