search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    யூதர்களின் பொறாமையும் வம்புகளும் வழக்குகளும்
    X

    யூதர்களின் பொறாமையும் வம்புகளும் வழக்குகளும்

    முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்த முடியாத யூதர்கள் வெளிப்படையாகவே நபிகளாரை எதிர்த்தவர்களாக அவர்களுடன் செய்திருந்த உடன்படிக்கையை முறித்துக் கொண்டனர்.
    பத்ருப் போருக்கு பிறகு முஸ்லிம்களின் மீது மதிப்பும் மரியாதையும் ஒருசேர மக்கள் மனதில் இருந்தது. இதனை யூதர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருப்பதையும் முறியடிக்க நினைத்தனர். ஏதாவது குழப்பங்கள் செய்து கொண்டே இருந்தனர். நபி முஹம்மது (ஸல்) மிகவும் பொறுமையாக இருந்தார்கள்.

    முஸ்லிம்களில் இரு பிரிவினரின் முன்னாள் பகையை யூதர்கள் நினைவுப்படுத்திக் கலகமூட்டினர். அக்கலகத்தினால் இரு பிரிவினரும் போருக்கே தயாராகும் அளவுக்கு, பகைமை கொண்டனர். அப்போது நபி முஹம்மது (ஸல்) அங்கு விரைந்து சென்று சமாதானப்படுத்தினார்கள். அவர்கள் முஸ்லிமாகிவிட்டதையும், அவர்களுக்குள் அல்லாஹ் அன்பை ஏற்படுத்தியிருப்பதையும் நினைவுபடுத்தினார்கள். இரு பிரிவினரும் தங்களின் தவறுகளை உணர்ந்து ‘அல்லாஹ் எங்களைப் பாதுகாப்பானாக’ என்று சொல்லி ஒருவரையொருவர் கட்டித் தழுவி அன்பை நிலைநிறுத்தினர்.

    முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்த முடியாத யூதர்கள் வெளிப்படையாகவே நபிகளாரை எதிர்த்தவர்களாக அவர்களுடன் செய்திருந்த உடன்படிக்கையை முறித்துக் கொண்டனர். யூதர்களைச் சந்தித்து நபி முஹம்மது (ஸல்) அறிவுரை வழங்கினார்கள். தூய மார்க்கத்திற்கு, நேர்வழிக்கு அவர்களை அழைத்தார்கள். ஆனால் யூதர்களோ ஆணவமாக “முஹம்மதே! குறைஷிகளை வென்றுவிட்ட மமதையில் பேசுகிறீர்கள். அவர்கள் போர் செய்யத் தெரியாதவர்கள். எங்களுடன் போர் புரிந்து பாரும். நாங்கள் வலிமைமிக்கவர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்” என்றனர். முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து அராஜகத்தைத் தொடங்கினர். முஸ்லிம் பெண்களை நேரடியாகவே வம்புக்கிழுத்தனர்.



    வியாபாரத்திற்குக் கடைக்கு வந்திருந்த ஒரு முஸ்லிம் பெண்ணின் பர்தாவை நீக்க வேண்டுமென்று ஒரு யூதன் வம்பிழுத்தான். அப்பெண்மணி மறுத்தாள். அவளுக்குத் தெரியாமல் அவளுடைய ஆடையைப் பின்னாலிருந்து கட்டிவிட்டான். அவள் வியாபாரம் முடிந்து நகரும்போது அந்தப் பெண்ணின் ஆடை மறைவிடம் தெரியும்படி அகன்று விட்டது. சுற்றியிருந்த யூதக்கூட்டத்தினர் சிரித்தனர். அப்பெண் உதவி வேண்டி கூச்சலிட்டார். இதை அறிந்த ஒரு முஸ்லிம் தன் உடன்பிறவா சகோதரிக்காக அந்த யூதனை ஆத்திரத்தில் கொன்றார். யூதர்களும் அந்த முஸ்லிம் நபரை விட்டுவைக்கவில்லை கொன்றுவிட்டனர். இப்படி ஆரம்பித்த சண்டை வலுப் பெற்று போராக மாறியது.

    “நிராகரிப்போரிடம் நபியே! நீர் கூறுவீராக: “வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள்; அன்றியும் மறுமையில் நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள்; இன்னும், நரகமான அவ்விரிப்பு கெட்ட படுக்கையாகும். பத்ரு களத்தில் சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது;

    நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, அகப்பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது” என்ற இறைவசனத்திற்கேற்ப முஸ்லிம்கள் யூதர்களான பனூ நளீர் குலத்தாரை வென்று அவர்களை நாடு கடத்தினார்கள். மற்ற குலத்தவரான குறைழா மன்னிப்பு கேட்டதால், நபிகளார் அவர்களுக்குக் கருணை காட்டி மன்னித்து மதீனாவிலேயே வசிக்க அனுமதித்தார்கள்.

    ஸஹீஹ் புகாரி 4:64:4028, திருக்குர்ஆன் 3:12,13, இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×