search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    போரில் சிறை பிடிக்கப்பட்ட கைதிகள்
    X

    போரில் சிறை பிடிக்கப்பட்ட கைதிகள்

    அல்லாஹ்விடம் உங்களுடைய மன்னிப்பு ஏற்கெனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் போர்க் கைதிகளிடம் ஈட்டுப் பணத்தை எடுத்துக் கொண்டதற்காக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்” என்ற எச்சரிக்கை இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.
    முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போரின் வெற்றிக்கு பிறகு மதீனாவிற்குள் நுழையும் போதே மதீனாவைச் சேரந்த பல தலைவர்கள் வாழ்த்துகளைக் கூறிய வண்ணமிருந்தனர். உடல்நிலை சரியில்லாமலிருந்த நபிகளாரின் மகள் ருகையா(ரலி) இறந்தவிட்ட செய்தியும் நபிகளாருக்குக் கிடைத்தது.

    நபிகளாரைத் தொடர்ந்து, போர் கைதிகளும் மதீனாவிற்கு அழைத்து வரப்பட்டனர். கைதிகளைப் போர்க்களத்திலிருந்த முஸ்லிம் வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து, கைதிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள உபதேசித்தார்கள் நபிகளார். கைதிகளிடம் ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டு அவர்களை விடுதலை செய்யலாமென்று அபூபக்ர் (ரலி) யோசனை சொன்னார்கள்.

    அதனை மறுத்து உமர் (ரலி), “கைதிகளைக் கொலை செய்வதே சரி, இவர்கள் கொடுங்கோலர்கள்” என்று கூறினார். நபிகளார் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்கள். கைதிகளிடம் ஈட்டுத்தொகையாக ஆயிரத்திலிருந்து நான்காயிரம் வெள்ளி நாணயங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டுப் பெறப்பட்டது. ஈட்டுத் தொகையைக் கொடுக்க இயலாத கைதிகள் எழுத, படிக்கத் தெரியாத மதீனாவைச் சேர்ந்த பத்து சிறுவர்களுக்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. சிறுவர்கள் நன்றாகக் கற்றுக் கொண்டதும் அக்கைதிகளுக்கு விடுதலை வழங்கப்படுமென்றும் வாக்குறுதி அறிவிக்கப்பட்டது.

    நபி (ஸல்) அவர்களுடைய மகள் ஸைனபின் கணவர் அபுல் ஆஸும் கைதிகளில் ஒருவராக இருந்தார். நபிகளாரின் மனைவி கதீஜா (ரலி) அவர்களின் மாலை ஈட்டுத்தொகையில் வந்ததைக் கண்ட நபிகளார், மகள் ஸைனப்(ரலி) தனது கணவனை விடுவிக்க, தனது தாயாரின் மாலையை அனுப்பியிருப்பதைப் பார்த்து, தங்களது தோழர்களிடம் அபுல் ஆஸை ஈட்டுத் தொகையின்றி விடுதலை செய்ய அனுமதி கேட்டார்கள். தோழர்கள் அனுமதிக்கவே, மகள் ஸைனப்பை மதீனாவிற்கு அனுப்பிவிட வேண்டுமென்ற நிபந்தனையோடு அபுல் ஆஸ் விடுதலை செய்யப்பட்டார்.

    “இஸ்லாமை அழித்தொழிக்க வந்த விஷமிகளை அடக்காமல் விரோதிகளை உயிருடன் சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் நிலையில்லா பொருட்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் உங்கள் நலத்தை மட்டுமே நாடுகிறான். அல்லாஹ் ஆற்றலில் மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

    அல்லாஹ்விடம் உங்களுடைய மன்னிப்பு ஏற்கெனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் போர்க் கைதிகளிடம் ஈட்டுப் பணத்தை எடுத்துக் கொண்டதற்காக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்” என்ற எச்சரிக்கை இறைவசனத்தை அல்லாஹ் அருளினான். நபிகள் நாயகம் (ஸல்) மற்றும் அவர்களுடைய தோழர் அபூபக்ர் (ரலி) இருவரும் மனம் வருந்தி அழுது அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு வேண்டினர்.

    திருக்குர்ஆன் 8:67, 68, அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×