search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பத்ருப் போரின் வெற்றியின் விளைவுகள்
    X

    பத்ருப் போரின் வெற்றியின் விளைவுகள்

    முஸ்லிம்களின் அபார வெற்றியைக் கண்டு இஸ்லாமை உண்மையான மார்க்கம் என்று அறிந்து கொண்டு பலர் மனம் மாறி இஸ்லாமிற்குத் திரும்பினர்.
    'பத்ரு'ப் போரில் முஸ்லிம்களுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. இணை வைப்பவர்களுக்குப் பொருட்சேதம் மட்டுமல்லாது பல உயிர்களையும் அவர்கள் இழக்க நேரிட்டது. குறைஷிகளின் மூத்த தலைவர்களும், தளபதிகளும் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர்.

    போர் முடிந்த மூன்றாவது நாள், நபி முஹம்மது (ஸல்) அவர்கள், 'பத்ரு'ப் போரில் இறந்தவர்களின் சடலங்கள் வீசப்பட்ட அசுத்தமான கிணற்றருகில் சென்று, அதில் எறியப்பட்டிருந்தவர்களின் பெயர்களையும், அவர்களின் தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, “இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் இன்று உங்களுக்கு இது மகிழ்ச்சியானதொரு நாளாகியிருக்கும். எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த நன்மைகள் உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். அதேபோல் இரட்சகன் வாக்களித்த தண்டனைகள் உண்மையானதுதான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” என்று கூறினார்கள்.

    அப்போது நபித் தோழர் உமர்(ரலி) இறைத்தூதரின் அருகிலில் வந்து, “இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதைக் கிணற்றில் உள்ள இவர்கள் நன்கு செவியேற்பவர்களாக இருக்கிறார்கள், உங்களுக்கு அது புரியாது” என்று கூறினார்கள்.

    மக்காவாசிகள் தோல்வி பற்றிக் கேள்விப்பட்டதும், இறந்தவர்களின் பெயர்களைப் பற்றி அறிந்ததும், அதனை நம்ப மறுத்து, கண்டிப்பாக இது தவறான செய்தியாகத்தான் இருக்க முடியுமென்று சாதித்தனர். அபூஸுஃப்யான் வருவதைக் கண்டு அபூலஹப் அவனிடம் “என்ன நடந்தது?” என்று ஆவலாகக் கேட்டான். நிகழ்ந்தவற்றை அபூஸுஃப்யான் விவரித்தார். “நாம் பலமிழந்துவிடவில்லை மாறாக மிகச் சிறந்த குதிரை வீரர்களைக் கண்டோம். அவர்களை எங்களால் எதிர்க்க முடியவில்லை” என்றவுடன் அபூராஃபி(ரலி) “அவர்கள் வானவர்கள்” என்று சொல்லியதுதான் தாமதம், அபூலஹப் கோபத்தில் அபூராஃபியைத் தாக்கினார். பிறகு மற்றவர்கள் வந்து விலக்கி அபூலஹப்பை அங்கிருந்து அனுப்பினர்.

    மதீனாவாசிகளுக்கும் போரைக் குறித்துப் பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. நபிகளார் கொலை செய்யப்பட்டார் என்ற தவறான தகவல்களும் பரப்பப்பட்டன. இறுதியில் அவர்கள், முஸ்லிம்களின் வெற்றியைத் தெரிந்து கொண்டு மகிழ்ச்சியின் மிகுதியில் “அல்லாஹு அக்பர், அல்லாஹ் மிகப் பெரியன்” என்று முழங்கினர்.

    'பத்ரு'ப் போரில் கிடைத்த பொருட்களைப் பங்கிடுவதில் மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இப்பிரச்சனைக்குத் தீர்வாக இறைவசனம் அருளப்பட்டது. “போரில் கிடைத்த வெற்றிப்பொருள் (அன்ஃபால்)களைப் பற்றி நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்கள் கேட்கின்றனர். அதற்கு நபியே! நீர் கூறுவீராக, ’அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் சொந்தமானதாகும். ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஸ்லிம்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்” என்ற இறைவசனத்திற்கு மக்கள் கட்டுப்பட்டனர். போரில் கிடைத்த பொருட்கள் ஒன்று திரட்டப்பட்டு,  பத்ர் மைதானத்திலிருந்து வெளியேறி வேறொரு இடத்தில் அப்பொருட்களைப் போரில் கலந்து கொண்ட வீரர்களுக்குச் சட்டப்படி பங்கு வைத்தார்கள். ஐந்தில் ஒரு பாகத்தை அல்லாஹ்விற்காகவென்றும் ஒதுக்கினார்கள்.

    முஸ்லிம்களின் அபார வெற்றியைக் கண்டு இஸ்லாமை உண்மையான மார்க்கம் என்று அறிந்து கொண்டு பலர் மனம் மாறி இஸ்லாமிற்குத் திரும்பினர். முஸ்லிம்களாக மாறாவிட்டால் பிற்காலத்தில் தங்களுக்குப் பிரச்சனைவரும் என்று பயந்து மனத்திற்குள் முஸ்லிம்களை வெறுப்பவர்கள் சிலரும் இஸ்லாமைத் தழுவினர்.

    ஸஹீஹ் புகாரி 4:64:3976, திருக்குர்ஆன் 8:1

    _ ஜெஸிலா பானு.

    Next Story
    ×