search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபையின் புனிதம் காப்போம்
    X

    சபையின் புனிதம் காப்போம்

    இறை நினைவுச் சபையில் நாம் ஒதுங்குவதும், அந்த இடத்தை பூர்த்தி செய்வதும் இறைவனை அடைவதும், சொர்க்கத்தில் இடத்தை முன்பதிவு செய்வதும் ஆகும் என்பது நபி மொழி கூறும் உண்மைச்சான்றாகும்.
    சபைகளில் சிறந்த சபை, உயர்ந்த சபை, புனித சபை, நன்மை தரும் சபை, அமைதி சபை, ஆன்மிக சபை, அருட்சபை, திருச்சபை, சுவனசபை எது?

    எந்த சபையில் இறைவனைப் பற்றி நினைவு கூரப்படுகிறதோ அந்த சபை சிறந்த சபை, அதுமட்டுமல்ல... அது சுவன பூஞ்சோலையாகவும் மாறிவிடுகிறது.

    இதுதொடர்பான நபி மொழி குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்:

    ‘நீங்கள் சுவன பூஞ்சோலைகளை கடந்து சென்றால், நன்றாக மேய்ந்து கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள்.

    ‘இறைத்தூதரே, சுவன பூஞ்சோலை என்றால் என்ன?’ என நபி தோழர்கள் கேட்டனர்.

    ‘அது இறைவனை நினைவு கூரப்படும் சபை’ என நபி (ஸல்) பதில் அளித்தார்கள்’.

    நன்மையும், இறையருளும், மன அமைதியும் கிடைக்கும் இறைநினைவு திருச்சபையில் நாம் கலந்து கொள்ளும் போது அங்கே கிடைக்கும் இடத்தை பாக்கியமாக கருதி, அந்த இடத்தை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். இது போன்ற சபையில் நாம் வெட்கப்பட்டு ஒதுங்கினாலோ, புறக்கணித்தாலோ, இறைவனும், இறையருளும் நம்மை விட்டும் புறக்கணிக்கப்படும்.

    இறை நினைவுச் சபையில் நாம் ஒதுங்குவதும், அந்த இடத்தை பூர்த்தி செய்வதும் இறைவனை அடைவதும், சொர்க்கத்தில் இடத்தை முன்பதிவு செய்வதும் ஆகும் என்பது நபி மொழி கூறும் உண்மைச்சான்றாகும்.

    ‘ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் இறையில்லத்தில் அமர்ந்திருக்கும் பொழுது மூன்று நபர்கள் முன்னோக்கி வந்தார்கள். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களை நோக்கினர்; மூன்றாம் நபர் பின்னோக்கிச் சென்றுவிட்டார். முன்னோக்கிய இருவரில் ஒருவர் சபையில் இடைவெளியை கண்டு கொண்டு அங்கே அமர்ந்து கொண்டார். மற்றொருவர் சபையினருக்கு பின்னால் அமர்ந்து கொண்டார். மூன்றாமவர் சபையை புறக்கணித்து விட்டார்.

    சபை முடிந்த பிறகு ‘இம்மூவரைப் பற்றி நான் உங்களுக்கு சில தகவலை அறிவிக்கட்டுமா?’ என நபி (ஸல்) கேட்டார்கள். முதலாம் நபர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கிக்கொண்டார்; அல்லாஹ்வும் அவரை தன் அருளின் பக்கம் இழுத்துக் கொண்டான். இரண்டாமவர் கூட்ட நெரிசலைக் கண்டு வெட்கப்பட்டு பின்னால் அமர்ந்து கொண்டார். அல்லாஹ்வும் அவரைக் கண்டு வெட்கப்பட்டு விலகிக் கொண்டான். மூன்றாம் நபர் சபையை புறக்கணித்தார்; அல்லாஹ்வும் தனது அருளை விட்டும் அவரை புறக்கணித்து விட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (நூல்: புகாரி, முஸ்லிம்: அறிவிப்பாளர் அபூவாகித் (ரலி).

    ‘இறைவிசுவாசிகளே, சபைகளில் ‘நகர்ந்து இடங்கொடுங்கள்’ என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால் நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடம் கொடுப்பான்; தவிர ‘எழுந்திருங்கள்’ என்று கூறப்பட்டால் உடனே எழுந்திருங்கள். (திருக்குர்ஆன்: 58:11)

    இறைவனின் திருச்சபையில் அனைவரும் சமமானவர்களே. அங்கே படித்தவன்–பாமரன், ஆண்டி–அரசன், முதலாளி–தொழிலாளி, உயர்ந்தவன்–தாழ்ந்தவன், ஏழை–பணக்காரன், சிறியவன்–பெரியவன் போன்ற பாகுபாடு கிடையாது.

    சாதாரண ஒருவரை எழுப்பிவிட்டு அவர் இடத்தில் உயர்வான அந்தஸ்தில் இருப்பவரை அமர வைப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. எனினும் கொஞ்சம் நகர்ந்து சென்று இடம் தாருங்கள் என்று கூறலாமே தவிர, இடத்தை காலி செய்யுங்கள் என்று கூற அனுமதி கிடையாது. இதுதான் இஸ்லாம் கூறும் சபை நாகரிகம் ஆகும்.

    சபை நாகரிகம் கருதி அமர்ந்திருப்பவர்கள் கொஞ்சம் விலகி மற்றவர்களுக்கு இடம் அளிக்கும்போது அவருக்கு இறைவனின் கருணை கிடைக்கிறது.

    ‘இரு நபர்களின் அனுமதியின்றி அவர்களுக்கிடையில் விலக்கி வைப்பதை நபி (ஸல்) அவர்கள் எவருக்கும் ஆகுமாக்கி வைக்கவில்லை’ (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அமர் (ரலி) அஹ்மது).



    இது போன்ற நாகரிகமான சபையின் மரபுகளை இஸ்லாம் அறிவுறுத்தி, சபையின் புனிதத்தை காக்கிறது. சபையின் புனிதம் காக்க இஸ்லாம் பல்வேறு விதமான சபை ஒழுங்குகளை போதிக் கிறது. அந்த சபை ஒழுக்கங்கள் வருமாறு:–

    1. சபைக்கு வருபவர் முற்பகுதி காலியாக இருக்கும் போது, பிற்பகுதியில் அமராமல் முற்பகுதியை பூர்த்தி செய்யவேண்டும்.

    2. ஒருவர் சபையில் நிரந்தரமாக ஓரிடத்தை சொந்தமாக்கிக் கொள்ளக் கூடாது.

    3. சபையில் அமர்ந்திருப்பவரை எழுப்பி அந்த இடத்தில் மற்றொருவர் அமரக்கூடாது.

    4. ஒருவர் எழுந்திருக்கும் போது, தமது சார்பாக அடுத்தவரை அமர்த்தக்கூடாது.

    5. ஒருவர் தான் இருந்த இடத்திலிருந்து எழுந்து விட்டு சென்ற பிறகு, திரும்பவும் சபைக்கு வருகை புரிந்தால், முதலில் அமர்ந்த இடத்தில் மீண்டும் அமர அவருக்கு முழு உரிமை உள்ளது.

    6. சபையில் அமர்ந்தால் அங்கும் இங்கும் பார்க்கக் கூடாது.

    7. சபையின் சப்தத்தை உயர்த்தி பேசக்கூடாது.

    8. சபையில் பேசப்படுவதை செவிதாழ்த்திக் கேட்க வேண்டும்.

    9. ஒரு சபை நடக்கும்போது போட்டி சபையோ மாற்று சபையோ நடத்தக்கூடாது.

    10. சபையில் வைத்து கொட்டாவி விடக்கூடாது.

    11. சபையில் ஒருவரை தாண்டி ஒருவர் செல்லக் கூடாது. இடையில் இடம் இருந்தால், அருகில் உள்ளவர் அந்த இடத்தை நிரப்பி, பின் வருபவருக்கு வசதியாக இடம் கொடுக்க வேண்டும்.

    12. சபையில் தூங்கக்கூடாது; தூக்கம் மிகைத்தால், இடத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    13. சபையில் இருக்கும்போது, கையை மூக்கில் வைப்பதும், காது குடைவதும், கண்ணை நோண்டுவதும், இதுபோன்ற ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடக்கூடாது.

    14. சபையில் இரண்டு நபர்களுக்கு மத்தியில் அவர்களின் அனுமதியின்றி பிரிவை ஏற்படுத்தக்கூடாது.

    15. சபை நிறைவு பெற்றால், யாருக்கும் இடையூறு இல்லாமல் அமைதியாக கலைந்துவிட வேண்டும்.

    மவுலவி அ.செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து,
    திருநெல்வேலி டவுண்.
    Next Story
    ×