search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பத்ருப் போரின் போது இறங்கிய இறைவாக்கு
    X

    பத்ருப் போரின் போது இறங்கிய இறைவாக்கு

    எவர் இறைவனை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பினாலான ஆடைகள் தயாரிக்கப்படும், கொதிக்கும் நீர் அவர்களின் தலைகளின் மீது ஊற்றப்படும்” என்ற இறைவசனம் அருளப்பட்டது.
    பத்ர் போருக்கு நபி முஹம்மது (ஸல்) அவர்களின் அணியினரும் எதிர் தரப்பு குறைஷி அணியினரும் ஆயத்தமாயினர்.

    குறைஷி படையைச் சேர்ந்த அஸ்வத் இப்னு அப்துல் அஸது மக்ஜூமி என்பவன் முஸ்லிம்களின் அருகில் இருக்கும் நீர்நிலையை உடைத்தெறிய வேண்டுமென்று போரின் தீ கங்குகளை மூட்டி, நீர் தடாகத்தை நோக்கி பாய்ந்து வந்தான். ஹம்ஸா (ரலி) வாளால் அவனுடைய பாதத்தைப் பதம் பார்த்தார்கள். நீர்நிலையைப் பாழ் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தவனாக அஸ்வத் பாய்ந்து நீர்நிலைக்குள் விழுந்தான். அதே இடத்தில் ஹம்ஸா (ரலி), அவன் மீது தாக்குதல் புரிந்து அவனை வெட்டிச் சாய்த்தார்கள்.

    இதைக் கண்ட குறைஷிகள் கொந்தளித்தனர். அவர்களிடமிருந்த குதிரை வீரர்களான ரபிஆவின் மகன்களான உத்பா, ஷைபா மற்றும் உத்பாவின் மகன் வலீது மூவரும் முன்னால் வந்தனர். அம்மூவரை எதிர்க்க வந்த முஸ்லிம்களைப் பார்த்து “நீங்கள் மதீனாவாசிகள், உங்களுக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் இல்லை, நாங்கள் நாடி வந்திருப்பது எங்கள் தந்தையின் சகோதரர்களின் மக்களை. முஹம்மதே! எங்களுக்கு நிகரான, எங்கள் இனத்தவரை அனுப்பும்!” என்று சத்தமாகக் கத்தினர்.



    உடனே நபி முஹம்மது (ஸல்), அவர்களுக்கு இணையான ஹம்ஸா (ரலி), அலீ (ரலி) மற்றும் உபைதா (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அவர்களை எதிர்கொண்டு நின்ற மாத்திரத்தில் ஹம்ஸா (ரலி), உத்பாவை தவிர மற்ற இருவரையும் வீழ்த்தி திரும்பும் போது உபைதா (ரலி) அவர்கள் அடிப்பட்டுக் கிடந்ததைப் பார்த்து, பாய்ந்து உத்பாவையும் வீழ்த்தி, உபைதாவை தமது தோளில் சுமந்து படைக்குத் திரும்பினர். ஆனால் உபைதா (ரலி) சில நாட்களில் இறந்துவிட்டார்.

    “இறைநம்பிக்கையாளர்களும், இறைநிராகரிப்பாளர்களும் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர். ஆனால் எவர் இறைவனை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பினாலான ஆடைகள் தயாரிக்கப்படும், கொதிக்கும் நீர் அவர்களின் தலைகளின் மீது ஊற்றப்படும்” என்ற இறைவசனம் அருளப்பட்டது.

    திருக்குர்ஆன் 22:19, இப்னு ஹிஷாம்

    - ஜெஸிலா பானு
    Next Story
    ×