search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பத்ருப்போரின் ஆயத்தங்களும் பிரார்த்தனைகளும்
    X

    பத்ருப்போரின் ஆயத்தங்களும் பிரார்த்தனைகளும்

    உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஸ்லிம்களோடுதான் இருக்கின்றான்” என்ற இறை வசனம் அருளப்பட்டது.
    பத்ர் பள்ளத்தாக்கிற்கு அருகிலுள்ள நீர்நிலை பக்கத்தில் நபி முஹம்மது (ஸல்) மற்றும் முஸ்லிம் படையினர் தங்கியிருந்தனர். குறைஷிகளும் பத்ர் பள்ளத்தாக்கின் மேற்பகுதியில் கூடாரங்கள் அமைத்துத் தங்கினர். அன்றிரவு மழை பொழிந்தது. அந்த மழை இணைவைப்பவர்களுக்கு அடைமழையாக, குறைஷிகளை முன்னேறவிடாமல் தடுத்தது. ஆனால், முஸ்லிம்களுக்கு, சாதாரணத் தூறலாக இருந்தது.

    காலை விடிந்து, நபி முஹம்மது (ஸல்), முஸ்லிம்களின் அணிகளைச் சரிசெய்து கொண்டிருந்தபோது நபிகளாரின் கையில் இருந்த அம்பு சற்று முன்னால் நிற்பவரின் வயிற்றில் லேசாகக் குத்திவிட்டது, உடனே அவர் “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் கையிலுள்ள அம்பு என்னைக் குத்திவிட்டதால் வலிக்கிறது, எனக்கு உங்களைப் பழிவாங்க வேண்டும்” என்றார். நபி (ஸல்) சற்றும் தாமதிக்காமல் தனது வயிற்றைத் திறந்து காட்டி “பழி தீர்த்துக் கொள்!” என்றார்கள். உடனே அவர் நபிகளாரை கட்டியணைத்து “அல்லாஹ்வின் தூதரே! போரை நோக்கி செல்லவிருக்கிறோம், இறுதியாக உங்களது மேனியைத் தொட பிரியப்பட்டேன்” என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

    அந்தக் காலை வேளையில் குறைஷிகளில் சிலர், நபி (ஸல்) அவர்களின் படையினரால் உருவாகியிருந்த நீர்நிலையில் நீர் பருக வந்தனர். நீர் பருக நபிகளும் அவர்களது படையினரும் குறைஷிகளை அனுமதித்தனர்.

    குறைஷியினரின் ஒற்றர், நபிகளாரின் கூட்டத்தினர் வெறும் முன்னூறு நபர்கள் இருப்பதைக் குறைஷி படையினரிடம் சொல்லிவிட்டு, ‘முஸ்லிம்களின் படையினர் வேறு எங்கும் மறைந்திருப்பதாகத் தெரியவில்லை. தாமதமாக வேறு படையினரும் வருவதாகத் தெரியவில்லை, பாதுகாப்பிற்கும் வாளைத் தவிர வேறெதுவுமில்லை. ஆனால் இவ்வளவு பெரிய எண்ணிக்கை கொண்ட கூட்டத்தினரான உங்களை அவர்கள் வீழ்த்தினால், நீங்கள் வாழ்ந்து பயனில்லை. முஸ்லிம்கள் இவ்வளவு தைரியமாகப் பெரும் படையான உங்களை எதிர்க்க வருகிறார்கள் என்றால் அது குறித்து யோசித்துக் கொள்ளுங்கள் என்று எச்சரித்துச் சென்றனர்.

    அதனையடுத்து குறைஷிகளைச் சேர்ந்த உத்பா மற்றும் அவரது பிரிவினர் “முஸ்லிம் படையினருடன் போரிட்டு என்ன செய்யப் போகிறோம், நமது சொந்தங்களை நாம் ஏன் எதிர்க்க வேண்டும், திரும்பிவிடலாம்” என்று கூறியபோது, அதற்கு அபூஜஹ்ல் “முஹம்மதையும் அவருடைய கூட்டத்தையும் பார்த்து உத்பா பயந்திருக்கலாம் அல்லது முஸ்லிம்களின் படையில் உத்பாவின் மகன் ஹுதைஃபா இருப்பதைப் பார்த்து, அவன் கொல்லப்படுவான் என்று பயந்து கூறியிருக்கலாம்” என்று ஏளனம் செய்தான். அத்தோடு முஸ்லிம்களால் கொல்லப்பட்ட அமர் என்பவரின் சகோதரரை அழைத்துப் பழியுணர்ச்சியைத் தூண்டினான் அபூஜஹ்ல். குறைஷிகளுக்கு வெறி தலைக்கேறியது முஸ்லிம்களை எதிர்த்து குறைஷிகளின் படை நேருக்கு நேர் வந்தது.

    நபி முஹம்மது (ஸல்) படையினருக்கு கட்டளை பிறப்பித்தார்கள், “போரை எனது கட்டளை வரும் வரை தொடங்காதீர்கள். எதிரிகள் தூரத்திலிருக்கும்போது அம்புகளை எய்து வீணாக்கிவிடாமல் மிச்சப்படுத்திக் கொள்ளுங்கள், அவர்கள் நெருங்கும்போது அவர்களின் மீது அம்பெறியுங்கள். அவர்கள் உங்களைச் சூழ்ந்து கொள்ளும் வரை நீங்கள் வாட்களை உருவாதீர்கள்” என்று சொல்லிவிட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, எதிரி அணியின் நிலவரத்தை காண பரண் வீட்டில் ஏறினார்கள்.

    அபூஜஹ்லும் பிரார்த்தனை செய்தான் “இறைவா! உனக்கு விருப்பமானவருக்கு உதவி செய். நாங்கள் அறியாததை எங்களுக்கு மார்க்கமாகக்கொண்டு வந்து, உறவுகளில் பிளவை ஏற்படுத்தியவரை அழித்துவிடு” என்று பிரார்த்தித்தான்.

    “நிராகரிப்பவர்களே! நீங்கள் வெற்றியின் மூலம் தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி முஸ்லிம்களுக்கு வந்து விட்டது; இனியேனும் நீங்கள் தவறை விட்டு விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் போருக்கு வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஸ்லிம்களோடுதான் இருக்கின்றான்” என்ற இறை வசனம் அருளப்பட்டது.

    ஸஹீஹ் புகாரி 4:64:3984,3985, திருக்குர்ஆன் 8:19

    -ஜெஸிலா பானு.
    Next Story
    ×