search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஹுதைபிய்யா உடன்படிக்கையின் ஷரத்துகள்
    X

    ஹுதைபிய்யா உடன்படிக்கையின் ஷரத்துகள்

    உடன்படிக்கை பத்திரம் எழுதி முடித்ததும், தம்முடன் வந்திருப்பவர்கள் ‘இங்கேயே ‘குர்பானி’ கொடுத்திட வேண்டும்’ என்று நபிகளார் உத்தரவிட்டார்கள்.
    நபிகள் நாயகம் அவர்கள் தலைமையிலான இறை நம்பிக்கையாளர்களுக்கும், இறைமறுப்பாளர்களான குரைஷிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஹுதைபிய்யா உடன்படிக்கை குறித்து கடந்த வாரம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் அந்த உடன்படிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து காண்போம்.

    சந்தர்ப்ப சூழ்நிலை தங்களுக்கு எதிராக இருப்பதை அறிந்த குரைஷிகள் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள சுஹைல் இப்னு அம்ர் என்பவரை நபிகளாரிடம் அனுப்பி வைத்தனர்.

    சுஹைல் என்பதற்கு ‘இலகுவானது’ என்பது பொருள். சுஹைலைப் பார்த்ததும் நபிகளார், “உங்களது காரியம் உங்களுக்கு இலகுவாகி விட்டது. குரைஷிகள் இவரை அனுப்பியதில் இருந்து அவர்கள் சமாதானத்தை நாடி விட்டனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார்கள்.

    நபிகளாரிடம் சுஹைல் நீண்ட நேரம் பேசினார். அதற்குப் பிறகு சமாதானத்திற்கான அம்சங்களை இருவரும் முடிவு செய்தனர்.

    சமாதான உடன்படிக்கையின் ஷரத்துகள் வருமாறு:-

    1. இந்த ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுடன் திரும்பிச் செல்ல வேண்டும். மக்கா நகருக்குள் நுழையக் கூடாது.

    2. அடுத்த ஆண்டு முஸ்லிம்கள் மக்கா வந்து ‘உம்ரா’ செய்யலாம். அவர்கள் மக்காவில் மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து வரலாம். ஆனால் அவற்றை உறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் எந்தவித தொந்தரவும் கொடுக்கப்பட மாட்டாது.

    3. இந்த ஒப்பந்தம் 10 ஆண்டுகள் வரை நீடித்திருக்கும். (10 ஆண்டுகளுக்கு இரு தரப்பிலும் போர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கக் கூடாது)

    4. குரைஷிகளில் யாராவது மதீனா நகருக்கு வந்து விட்டால் அவரை மக்கா நகருக்கு திருப்பி அனுப்பி விட வேண்டும். ஆனால் முஸ்லிம்களில் எவராவது மக்கா நகருக்குச் சென்றால் அவரைத் திருப்பி அனுப்ப மாட்டோம்.

    இவற்றை எழுதுவதற்காக நபிகளார் அலி (ரலி) அவர்களை அழைத்து வாசகங்களைக் கூறினார்கள். அலி (ரலி) அவர்கள், ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்’ (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் திருப்பெயரால் தொடங்குகிறேன்) என்ற வாசகத்தை எழுதினார்.

    அப்போது சுஹைல் குறுக்கிட்டு, “எங்களுக்கு ரஹ்மானையும் தெரியாது; ரஹீமையும் தெரியாது. எங்களுக்கு தெரிந்த முறையில் எழுதுங்கள்” என்றார். அருகில் இருந்த நபிகளார், “அப்படியானால் எப்படி எழுத வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு சுஹைல், “இறைவன் பெயரால் எழுதுங்கள்” என்றார். அவ்வாறு அந்த வாசகம் திருத்தி எழுதப்பட்டது.

    பின்பு, “இது அல்லாஹ்வின் தூதர் முகம்மது குரைஷிகளுடன் செய்து கொண்ட சமாதான உடன்படிக்கையாகும்” என்று எழுதும்படி அலியிடம் கூற அவர்களும் அவ்வாறே எழுதினார்கள். ஆனால் சுஹைல் அந்த வாசகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டால் இந்த ஒப்பந்தமே தேவையில்லையே. அதனால் அதற்குப் பதிலாக அப்துல்லாஹ்வின் மகன் முகம்மது என்று எழுதுங்கள்” என்றார்.

    அதற்கு நபிகளார், “நீங்கள் என்னைப் பொய்யன் என்று கூறினாலும் சரியே! நான் உண்மையில் அல்லாஹ்வின் தூதர்தான்” என்று கூறி விட்டு, ‘ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர்) என்ற சொல்லை அழித்து விட்டு ‘முகம்மது இப்னு அப்துல்லாஹ்’ (அப்துல்லாவின் மகன் முகம்மது) என்று எழுதுங்கள்’ என்று அலியிடம் கூறினார்கள். ஆனால் அலி (ரலி) அவர்கள் இந்தச் சொல்லை அழிப்பதற்கு மறுத்து விட்டார்கள். எழுதப் படிக்கத் தெரியாத காரணத்தால் அந்த வரி எங்கிருக்கிறது என்று கேட்டு நபிகளாரே தம் கையால் அழித்தார்கள்.

    இவ்வாறு ஒப்பந்தம் எழுதிக் கொண்டிருந்தபோது, குரைஷிகளின் பிரதிநிதி சுஹைலின் மகன் அபூஜந்தல் (ரலி) மக்காவில் இருந்து கை மற்றும் கால்களில் இருந்த விலங்குகளோடு தப்பியோடி எப்படியோ அங்கு வந்து சேர்ந்தார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட குற்றத்திற்காக தனக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளைக் கண்ணீர் மல்க எடுத்துரைத்தார்.

    அபூஜந்தல் நபிகளாரிடம், ‘இறைத்தூதரே! என்னை இறை மறுப்பாளர்களிடம் இருந்து விடுவித்து தங்களுடன் அழைத்துச் சென்று விடுங்கள்’ என்று வேண்டினார்.

    இதைப் பார்த்த சுஹைல், ‘சமாதான ஒப்பந்தம் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். உடன்படிக்கையின்படி அபூஜந்தலை நீங்கள் உடன் அழைத்துச் செல்ல முடியாது’ என்றார்.

    அப்போது அபூஜந்தல், ‘என் முஸ்லிம் சகோதரர்களே! நீங்கள் என்னை மீண்டும் அவர்களிடமா ஒப்படைக்கப் போகிறீர்கள்?’ என்று கதறினார்.

    அப்போது நபிகளார், ‘அபூஜந்தலே! நீர் பொறுமையைக் கடைப்பிடியும். உனக்கும், உன்னுடன் இருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடுதலையையும், மகிழ்ச்சியையும் அல்லாஹ் தருவான். நாங்கள் இந்தக் கூட்டத்தாரிடம் சமாதான உடன்படிக்கை செய்திருக்கிறோம். அதை நிறைவேற்றுவது எங்கள் கடமை. அவர்களும் அல்லாஹ்வின் பெயர் கூறி இந்த உடன்படிக்கையைச் செய்திருக் கிறார்கள். எனவே நாங்கள் அவர்களிடம் ஒப்பந்தத்தை முறிக்கவோ அதற்கு எதிராகச் செயல்படவோ முடியாது’ என்று கூறினார்கள்.

    அபூஜந்தல் எப்படி அங்கு வந்தாரோ அப்படியே விலங்கு களை அணிந்தபடி திரும்பிச் சென்று விட்டார்.

    உடன்படிக்கை பத்திரம் எழுதி முடித்ததும், தம்முடன் வந்திருப்பவர்கள் ‘இங்கேயே ‘குர்பானி’ கொடுத்திட வேண்டும்’ என்று நபிகளார் உத்தரவிட்டார்கள். முதலில் அவர்களே ‘குர்பானி’ கொடுத்து முடியைக் களைந்தார்கள். பின்னர் நபித்தோழர்கள் அந்தக் கட்டளையை நிறைவேற்றினார்கள்.

    சமாதான ஒப்பந்தத்திற்குப் பிறகு நபிகளார் மூன்று நாட்கள் வரை ஹுதைபிய்யாவிலேயே தங்கி இருந்தார்கள். அவர்கள் திரும்பிச் செல்லும்போது, திருக்குர்ஆனின் 48-வது அத்தியாயமான ‘அல் பத்ஹ்-வெற்றி’ என்ற அத்தியாயம் இறங்கியது. அதில் இந்த உடன்படிக்கை நிகழ்ச்சியை சுட்டிக் காட்டி, ‘இது மிகப்பெரிய, தெளிவானதொரு வெற்றி’ என்று இறைவன் கூறுகின்றான்.
    Next Story
    ×