search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன்: சுழலும் சூரியன்
    X

    அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன்: சுழலும் சூரியன்

    சூரியன் தன் அச்சின் மீது சுழல்கிறது என்ற அறிவியல் உண்மையை விஞ்ஞான உலகம் உரைப்பதற்கு முன்பே அதை திருக்குர்ஆன் இந்த உலகிற்கு எடுத்துரைத்தது.




    சூரியன் நமக்கு மிக அருகில் இருக்கும் ஒரு விண்மீன் என்பதால் பிற விண்மீன்கள் போலன்றி அது பெரிதாகத் தோன்றுவதுடன் பிரகாசமாகவும் வெப்பம்மிக்கதாகவும் இருக்கின்றது. பூமியில் உள்ள உயிரினங்களுக்குத் தேவையான ஒளியையும் வெப்பத்தையும் இடைவிடாது தந்து காத்து வருவது சூரியனே. தாயைச் சுற்றி வரும் குழந்தைகளைப்போல, பூமியும் பிற கோள்களும் சூரியனை வெவ்வேறு சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன.

    ஆனால் ஆரம்ப காலத்தில் சூரியன் உள்பட அனைத்துக் கோள்களும் பூமியை மையமாகக் கொண்டே சுற்றி வருகின்றன என்று விஞ்ஞானிகள் கூறி வந்தனர்.

    இதைத் தொடர்ந்து 1512-ம் ஆண்டு நிகோலஸ் கோபர்நிகஸ் என்ற அறிவியல் அறிஞர், “கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாகக் கொண்டே சுற்றி வருகின்றன. ஆனால் சூரியன் ஒரே இடத்தில் நகராமல் நிலை பெற்றிருக்கிறது” என்ற கருத்தை வெளிப்படுத்தினார்.

    திருக்குர்ஆன் இறைவனால் இறக்கி அருளப்பட்டபோது, இன்றுள்ள வானியல் அறிவோ, நவீன தொழில் நுட்பமோ, சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளோ நிச்சயமாக இருக்கவில்லை. ஆனால் திருக்குர்ஆன், “அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். (வானில் தத்தமக்குரிய) வட்டவறைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன” (21:33) என்ற கருத்தை வெளியிட்டது.

    மேற்கண்ட வசனத்தில் உள்ள ‘நீந்துகின்றன’ என்ற சொல், விண்ணில் சூரியனின் நகர்வை விளக்குகிறது. மேலும் இந்தக் கோளங்கள் அனைத்தும் எந்தவிதப் பிடிப்பும் இல்லாமல் விண்வெளியில் சுற்றி வருவதைக் கற்பனை செய்து பார்த்தால் அவை நீந்துவது போன்றே தோன்றுகிறது.

    சூரியன் தன் அச்சின் மீது சுழல்கிறது என்ற அறிவியல் உண்மையை விஞ்ஞான உலகம் உரைப்பதற்கு முன்பே அதை திருக்குர்ஆன் இந்த உலகிற்கு எடுத்துரைத்தது.

    சூரியனின் முகத்தோற்றத்தில் சூரியக்கரும்புள்ளிகள் காணப்படுகின்றன. சூரியன் தன்னைத் தானே சுற்றி வரும்போது இந்தக் கரும்புள்ளிகளும் சுற்றுகின்றன. அவை 25 நாட்களுக்கு ஒருமுறை வட்டப்பாதையில் சுழன்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சூரியன் ஒரு வினாடிக்கு சுமார் 150 மைல் வேகத்தில் விண்வெளியில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    சூரியன் ஒரு குறிப்பிட்ட பாதையில் நிலையாக இல்லாமல் அது குறிப்பிட்ட பாதையில் செல்கிறது என்பதை, “சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் ஏற்பாடாகும்” (36:38) என்கிறது இறைமறை.

    சூரியன் தன் கோளக் குடும்பத்தைச் சுமந்து கொண்டு, ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த இடத்தை விண்ணியல் ஆய்வாளர்கள் துல்லியமாகக் கண்டறிந்து அதற்கு ‘சோலார் அபெக்ஸ்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்தக் குறிப்பிட்ட பிரதேசம் தமிழில், ‘சூரிய முகடு’ என்று அழைக்கப்படுகிறது.

    “அல்லாஹ் சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன” (திருக்குர்ஆன்-13:2) என்றும்,

    “சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலம் வரை ஓடும்” (39:5) என்றும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.

    சூரியன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த இதர கோள் களையும் இழுத்துக் கொண்டு ஓடுகிறது என்ற விஞ்ஞானிகளின் கூற்றை, இந்த இறை வசனம் மெய்ப்பிப்பதாக இருக்கிறது.

    சூரியன் சுழன்று கொண்டே இருக்கிறது என்பது மட்டுமல்ல; ஓடிக்கொண்டும் இருக்கிறது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக்கொண்டே இருக்கும் என்று சொல்ல வேண்டுமானால், அது நிச்சயமாக இறைக்கூற்றாகவே இருக்க முடியும். இந்த உண்மையை 1,400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகச் சொல்லி இருக்க முடியாது.

    மேலும், “பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக” (51:7), “வானத்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி” (25:61), என்பன போன்ற திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் ஒவ்வொரு கோளங் களுக்கும் தனித்தனி பாதைகள் உள்ளன என்பதையும், அவை அந்தப் பாதைகளிலேயே சுற்றிக்கொண்டிருக்கின்றன என்பதையும் அறிய முடிகிறது.

    நாம் வசிக்கும் இந்தப் பூமியை சந்திரன் அதனுடைய பாதையில் சுற்றி வருகிறது. பூமி உள்ளிட்ட ஒன்பது கோள்களும் தத்தமது பாதைகளில் சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன.

    “தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும், சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்” (14:33) என்றும், “சூரியன் சந்திரனை அடைய முடியாது; இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவறைக்குள் நீந்திச் செல்கின்றன” (36:40) என்றும் இறைவன் கூறுகின்றான்.

    இந்த வசனத்தில் மனிதனுக்கு நன்றாகத் தெரிந்த சூரியன், சந்திரனைச் சான்றாகக் கொண்டு கிரகங்கள் எவ்வாறு தத்தமது பாதைகளில் சுற்றுகின்றன என்பதை இறைவன் விளக்குகின்றான்.

    “பூமியை மையமாகக் கொண்டே எல்லாக் கோள்களும் சுற்றி வருகின்றன”-

    “சூரியனை மையமாக வைத்தே கோள்கள் அனைத்தும் சுற்றி வருகின்றன, ஆனால் சூரியன் அசையாமல் ஒரே இடத்தில் நிலை பெற்றுள்ளது”-

    இப்படி அறிவியலாளர்களைத் தவறான முடிவுக்கு அழைத்துச் சென்ற விஷயங்களில்கூட ‘மிகச்சரியான அறிவியல் உண்மைகளைத் தந்தது, திருக்குர்ஆன்’ என்பதை உறுதியாகக் கூறலாம்.
    Next Story
    ×