search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெற்றிதரும் தூய எண்ணங்கள்
    X

    வெற்றிதரும் தூய எண்ணங்கள்

    மனிதனின் உடல் அமைப்பும், உறுப்புகளின் வெளிப்பாடும் நன்மை-தீமை ஆகிய இரண்டையும் மனம் போன போக்கில் செய்யக்கூடிய வகையில் தான் படைக்கப்பட்டிருக்கின்றன.
    எந்த நிலையிலும் ‘இறையச்சம்’ என்ற தூய எண்ணம் தான் நன்மை- தீமை என்ற விளைவுகளை தீர்மானிக்கின்றது.

    இந்த உலகம் பாவங்கள் செய்யத்தூண்டும் வகையில் தான் படைக்கப்பட்டுள்ளது. அதில் மனிதனுக்கு சோதனையும் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இறைவனின் துணைகொண்டு இந்த சோதனையில் வெற்றிபெற மனிதன் முயற்சி செய்யவேண்டும். அப்போது தான் அவன் நம்பிக்கை கொண்டிருக்கிற மறுமை வாழ்வு இனிமையாக அமையும்.

    தூய எண்ணம்

    மனிதனின் உடல் அமைப்பும், உறுப்புகளின் வெளிப்பாடும் நன்மை-தீமை ஆகிய இரண்டையும் மனம் போன போக்கில் செய்யக்கூடிய வகையில் தான் படைக்கப்பட்டிருக்கின்றன. மனம் பாழ்படும் போது தான் மனிதன் பாவத்தை நோக்கி பயணம் செய்கின்றான்.

    ஒருவன் பாவத்தின் பக்கம் செல்ல எத்தனிக்கும் போது அவனை கடிவாளமிட்டு கட்டுப்படுத்துவது தூய எண்ணங்கள் மட்டுமே. அதுதான் அவர்களை பரிசுத்தமாக வைக்கும். திருக்குர்ஆனும் அதைத் தான் இவ்வாறு சொல்கிறது:

    “நபியே! நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களை பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்” (24:30).

    அதுபோன்று, “பெண்களும் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும், பிறர் கண்ணில் படாவண்ணம் தங்களையும் தங்கள் கற்பையும் பாதுகாத்து கொள்ளட்டும். வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது ‘பர்தா’ அணிந்து தங்கள் கண்ணியத்தை காத்து கொள்ளட்டும்” என்று வலியுறுத்தப் படுகிறது.

    கரங்கள் செய்யும் பாவம்

    இறைவன் நம்மை பல தீமையான சோதனையைக் கொண்டு சோதிப்பான். எல்லாவித சோதனைகளுக்கும் நம் கரங்கள் செய்த பாவங்கள் தான் காரணமாகின்றன.

    “ஒரு தீங்கு உங்களை வந்தடைவதெல்லாம் உங்கள் கரங்கள் தேடிக்கொண்ட தீய செயலின் காரணமாகவே தான். ஆயினும் அவற்றில் அனேகமானவற்றை அல்லாஹ் மன்னித்துவிடுகிறான்” (42:30) என்கிறது திருக்குர்ஆன்.

    பாவங்களில் பலவற்றை மன்னிக்கின்ற அல்லாஹ் அவை அதிகரிக்கும் போதோ, மற்றவர்களை மிகுதியாக பாதிப்புக்குள்ளாக்கும் போதோ கடலிலும், தரையிலும் சில தண்டனைகளையும் நிர்ணயித்திருக்கின்றான். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:

    ‘மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாக கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் அதிகமாகப் பரவி விட்டன. அவற்றில் இருந்து அவர்கள் விலகிக்கொள்வதற்காக அவர்களின் தீய செயல்களில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் இம்மையிலும் சுவைக்கச் செய்கின்றான்’ (30:41).

    ஜோடிகள்

    “ஒவ்வொரு வஸ்துக்களையும் ஆண்-பெண் கொண்ட ஜோடி ஜோடியாகவே நாம் படைத்திருக்கிறோம். இதைக் கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக?” (51:49) என்கிறது திருக்குர்ஆன்.

    உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் இரட்டைத் தன்மை கொண்டவைகளாகவே படைக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கொன்று முரண்பட்ட தன்மை கொண்டவைகளாக இருந்திட்ட போதிலும், அவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிற தன்மையில் தான் இயக்கப்படுகின்றன.

    ஆண்-பெண் உயிரினங்களில் இருப்பது போன்று, வானம்-பூமி, நீர்-நிலம், மேடு-பள்ளம், சிகரம்-சமவெளி என்று எத்தனை எத்தனையோ படைப்புகள் உலகெங்கிலும் பரந்து விரிந்து கிடக்கின்றன.

    இதுபோன்று மனித உணவுர்களும் இரண்டு மாறுபட்ட தன்மைகளை வெளியிடக்கூடியதாக உள்ளன. இன்பம்-துன்பம், கோபம்-அமைதி, சிரிப்பு-அழுகை, ஆணவம்-பணிவு என்று வாழ்வில் ஏற்படுகின்ற ஒவ்வொரு உணர்ச்சிகளும் இரட்டை தன்மைகளுடன் அமைந்துள்ளன.

    வாழ்வியலில் இந்த உணர்ச்சிகளும், மனிதனின் செயலாக்கங்களும் ஒன்றாக கலந்து ஏற் படுத்துகின்ற விளைவுகள் தான் அல்லாஹ்வின் பார்வையில் பாவ புண்ணியங்களை நிர்ணயம் செய்கின்றன. அந்த செயல்கள் நன்மை தந்தால், அதற்கு வெகுமதியாக சொர்க்கமும், தீமை என்றால் தண்டனையாக நரகமும் வரையறுக்கப்பட்டுள்ளன.

    இரண்டு வழிகள்

    ‘உங்கள் முன் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று நன்மையைப் பெற்று தரும் நேரான வழி. இன்னொன்று அதற்கு நேர்மாறானது’ என்று கூறுகிறான் இறைவன். இப்படி இரண்டு வழிகளை காண்பித்தவன், பாவங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், ஈடேற்றம் பெற்றுக் கொள்ளவும் நேர்வழி என்ற பாதையில் மட்டும் தான் பயணிக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகின்றான். கட்டளைக்கு அடிபணிந்தவன் கணக்கில்லா நன்மைகளை இம்மையிலும் மறுமையிலும் பெற்றுக்கொள்வான். மறுத்தவன் நரகத்தை சேர்ந்தவன் ஆவான்.

    ஒருமுறை சகாபாக்கள் கூடியிருந்த சபையில் நடந்த நிகழ்வு இது:

    நபிகள் (ஸல்) அவர்கள் எல்லோரையும் நோக்கி, ‘பெருபான்மையான மக்கள் மிக எளிதாக சுவர்க்கம் புகச்செய்யும் நன்மையான காரியம் ஒன்றை தாங்களுக்கு அறிவிக்கவா?’ என்று வினவினார்கள்.

    ‘ஆம்’ என்று ஆமோதித்த சகாபாக்களிடம், ‘நீங்கள் இரு தாடைகளுக்கிடையே உள்ள நாவையும், இரு தொடைகளுக்கிடையே உள்ள அந்தரங்க உறுப்பையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ என்றார்கள். நாவை பாதுகாப்பது என்றால் அதனைக்கொண்டு நன்மையை பேசுங்கள், இனிமையாக பேசுங்கள், பிறருக்கு இடர் ஏற்படா வண்ணம் பேசுங்கள். கருத்து வேறுபாடுகளை தவிர்த்து மனித நேயத்தோடு பேசுங்கள்.

    அந்தரங்கம் புனிதமானது. அதிலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வது இறையச்சத்தின் உச்சம். தூய எண்ணத்தின் அடிப்படையில் ஒருவன் நன்மையான வழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    ‘மனிதர்கள் தங்கள் தீய நடத்தையை விட்டு தங்களை மாற்றி கொள்ளாதவரை நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றி விடுவதில்லை’ (13:11).

    தூய எண்ணங்களுடன் நன்மைகள் செய்து வந்தால் மட்டுமே நாம் வெற்றியாளர்கள் ஆக முடியும். எனவே நல்வழியை தேர்ந்தெடுப்போம், நலமுடன் வாழ்வோம்.

    எம்.முஹம்மது யூசுப், உடன்குடி.
    Next Story
    ×