search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    போர் செய்ய அனுமதியும் அதற்கான நிபந்தனைகளும்
    X

    போர் செய்ய அனுமதியும் அதற்கான நிபந்தனைகளும்

    சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது” என்று அக்கிரமத்தை அழித்து அல்லாஹ்வின் கட்டளைகளை நிலை நிறுத்துவதற்காக மட்டுமே போர் செய்வது அனுமதிக்கப்பட்டது.
    “இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் பொருட்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாகக் கடுமையாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டோரிடமிருந்தும், இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் பல நிபந்தனைகளைக் கேட்பீர்கள். அச்சமயத்திலெல்லாம் நீங்கள் பொறுமைகாத்து, தவறான வழியிலிருந்து விலகி இறைவனிடம் பயபக்தியோடு இருந்தீர்களேயானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் உங்களுக்கு நன்மையைத் தேடித் தரும்” என்ற திருக்குர்ஆனின் வசனத்திற்கேற்ப முஸ்லிம்களுக்குப் பல சோதனைகள் வந்தன. கடுமையான பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    யூதர்களுடன் உடன்படிக்கை செய்தும் அவர்கள் அதனை முறித்து அதற்கு எதிராக இணை வைப்பாளர்களுடன் இணைந்து கொண்டு மோசடி செய்தனர். யூதர்களாலும் குறைஷிகளாலும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் உயிருக்கு மட்டுமல்ல அனைத்து முஸ்லிம்களுக்கும் ஆபத்து இருந்தது. மதீனாவிலும் முஸ்லிம்களை இறைமறுப்பாளர்கள் நிம்மதியாக இருக்க விடவில்லை, குறைஷிகள் தொடர்ந்து முஸ்லிம்களை வம்புக்கு இழுத்தனர். போர் புரிய அழைத்தனர். முஸ்லிம்கள் செய்த தவறுதான் என்ன? ‘இறைவன் ஒருவன்தான்’ என்றமையால் நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

    இதனால் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இறை நிராகரிப்பவர்கள் சண்டையிட்டால், அவர்களை எதிர்த்து போர் புரிய மட்டும் அனுமதி அளித்தான். “நிராகரிப்பவர்களால் அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்ட நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ் இவர்களுக்கு உதவி செய்யப் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்” என்ற இறைவசனம் வந்த பிறகு முஸ்லிம்கள் சாந்தியடைந்தாலும் அதிலும் அல்லாஹ் நிபந்தனையை வைத்தான்.

    அதில் “இவர்களுக்கு நாம் பூமியில் ஆட்சியைக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; தர்மம் அதாவது ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையைத் தடுப்பார்கள். மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது” என்று அக்கிரமத்தை அழித்து அல்லாஹ்வின் கட்டளைகளை நிலை நிறுத்துவதற்காக மட்டுமே போர் செய்வது அனுமதிக்கப்பட்டது.

    அல்லாஹ்விடமிருந்து அனுமதி வந்ததால், உடனே போரை தொடங்கிவிடாமல் நபிகளார் அதற்காக முதலில் ஆயத்தமானார்கள். குறைஷிகளின் வியாபார வழித்தடமான மக்காவிலிருந்து ஷாம்(சிரியா) செல்லும் முக்கிய வழியைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்று நபி (ஸல்) விருப்பப்பட்டார்கள். மதீனாவைச் சுற்றியுள்ள வழிகளைப் படைப் பிரிவினர் அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ளச் செய்தார்கள்.

    மதீனா மட்டுமல்லாது மக்காவில் சுற்றியிருக்கும் பகுதி, ஷாமிற்குச் செல்லுமிடத்திலென்று முஸ்லிம்களுடன் நட்பில் இருப்பவர்களிடமும் மற்றும் பகைமை காட்டாதவர்களிடமும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இதன் மூலம் முஸ்லிம்கள் இப்போது பலமடைந்து விட்டார்கள், தங்களுடைய பயத்திலிருந்து வெளியே வந்துவிட்டார்கள் என்று மதீனாவில் உள்ள இணை வைப்பவர்களுக்கும், யூதர்களுக்கும் அதைச் சுற்றியுள்ள கிராம அரபிகளுக்கும் உணர்த்தினார்கள் நபி முஹம்மது (ஸல்) அவர்கள்.

    திருக்குர்ஆன் 3:186, 5:65:4566, 22:39-41, அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×