search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நிராகரிக்கும் கூட்டத்தாருக்கு நேர்வழி கிடைக்காது
    X

    நிராகரிக்கும் கூட்டத்தாருக்கு நேர்வழி கிடைக்காது

    மனிதர்களின் தீங்குகளில் இருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேரான வழியில் செலுத்த மாட்டான்” என்ற இறைவசனம் அருளப்பட்டது.
    ஸஅத் இப்னு முஆத்(ரலி) வியாபாரத்திற்காக ஷாம் நாட்டிற்குச் செல்லும்போதெல்லாம் வழியில் மக்காவில் அவருடைய நண்பர் உமய்யா இப்னு கலஃப் வீட்டில் தங்குவார்கள்.

    ஒரு முறை உம்ரா செய்யும் நோக்கத்தில் ஸஅத்(ரலி) மக்காவிற்குச் சென்று ஆள் நடமாட்டமில்லாத அமைதியான நண்பகல் வேளையில் இறையில்லம் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்தார்கள் அதாவது தவாஃப் செய்தார்கள். அப்போது அந்த வழியாகச் சென்ற அபூ ஜஹ்ல் இதைப் பார்த்துவிட்டு, உரத்த குரலில் “உமய்யா, உன்னோடு இருக்கும் அந்த நபர் யார்?” என்று கேட்டான்.

    அதற்கு உமய்யா மறைக்காமல் “இவர்தான் ஸஅத்” என்றார். கஅபாவை நெருங்கி அபூ ஜஹ்ல் ஸஅத்(ரலி) அவர்களிடம் “மதம் மாறிச் சென்றவர்களுக்கு மதீனாவில் தஞ்சமளித்து அவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிபவர்கள் அஞ்சாமல் மக்காவிற்குள் வந்து கஅபாவை சுற்றி வர எவ்வளவு தைரியமிருக்கும்? நீ மட்டும் உமய்யாவுடன் இல்லாவிட்டால் நீ உன் வீட்டாரிடம் சுகமாகப் போய் சேர மாட்டாய்” என்று மிரட்டினான்.

    பதிலுக்கு ஸஅத்(ரலி) அபூ ஜஹ்லைவிடக் குரலை உயர்த்தி, தைரியமாக “அல்லாஹ்வின் மீதாணையாக, கஅபாவைச் சுற்ற விடாமல் மட்டும் என்னை நீ தடுத்திருந்தால், நீ வாணிபக் குழுவுடன் கடந்து செல்லும் மதீனாவின் தடத்தை நான் இடைமறிப்பேன். இதைவிட அது உனக்கு மிகவும் கடினமானதாயிருக்கும்” என்று எச்சரித்தார்.

    உடனே ஸஅத்(ரலி) அவர்களின் நண்பர் உமய்யா, “ஸஅத்! மக்காப் பள்ளத்தாக்கில் வசிப்பவர்களின் தலைவரான மரியாதைக்குரிய அபூ ஜஹ்ல் எதிரில் சப்தமிட்டுப் பேசாதே!” என்று கூறினார்.

    கோபமாக ஸஅத்(ரலி) அவர்கள், “உமய்யாவே! அபூ ஜஹ்லுக்கா வக்காலத்து வாங்குகிறீர்கள்? உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள், ஏனெனில், நபித்தோழர்கள் உன்னைக் கொலை செய்வார்கள் என்று இறைத்தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கூற கேட்டேன்” என்று சொன்னார்கள்.

    அச்சமடைந்தவராக “மக்காவிலா நான் கொல்லப்படுவேன்?” என்று உமய்யா கேட்டதற்கு, “எனக்குத் தெரியாது” என்று ஸஅத்(ரலி) பதிலளித்தார்கள்.

    இதனால் உமய்யா மிகவும் பீதியடைந்தார். அதைப் பற்றித் தன் மனைவியிடமும் உமய்யா பகிர்ந்தார். உடனே அவர் மனைவி, “அது உண்மையாகத்தானிருக்கும், ஏனெனில் முஹம்மது பொய் சொல்வதில்லை” என்று சொன்னாள். (அதன் பிறகு உமய்யா மக்காவைவிட்டு வெளியில் எங்கும் செல்லாமலே இருந்தார். ஆனால் காலம் கடந்து 'பத்ரு' போர்க்களத்தில் உமய்யாவை வலிமையும் உயர்வும் மிகுந்த அல்லாஹ் முஸ்லிம் படையால் கொலை செய்யும்படி அவரது விதி முடிந்தது.)

    குறைஷிகள் தொடர்ந்து முஸ்லிம்களையும் குறிப்பாக நபி (ஸல்) அவர்களையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென்று தீவிரமாக ஆலோசித்தனர். ஒவ்வொரு இரவும் நபி தோழர்களில் ஒருவர் நபிகளாரின் பாதுகாப்பிற்காக வந்து அமர்ந்துவிடுவார்கள். அப்போது “தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதை எந்தக் குறைவுமின்றி மக்களுக்கு அறிவித்து விடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யா விட்டால், அவனுடைய தூதை நீங்கள் நிறைவேற்றியவராக மாட்டீர்கள். இதில் எவருக்கும் அஞ்சாதீர்கள்! மனிதர்களின் தீங்குகளில் இருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேரான வழியில் செலுத்த மாட்டான்” என்ற இறைவசனம் அருளப்பட்டது.
     
    ஸஹீஹ் புகாரி 4:64:3950, 4:61:3632, திருக்குர்ஆன் 5:67

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×