search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாமிய அரசியல் சட்டத்தை உருவாக்கிய நபிகள்
    X

    இஸ்லாமிய அரசியல் சட்டத்தை உருவாக்கிய நபிகள்

    நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய மதீனா உடன்படிக்கையே முதல் இஸ்லாமிய அரசியல் சட்டமாக அமைந்தது.
    நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய மதீனா உடன்படிக்கையே முதல் இஸ்லாமிய அரசியல் சட்டமாக அமைந்தது. இச்சட்டம் மதீனாவில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தந்தது. மதீனாவின் சாசனம் புனித குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி தன்னலமில்லாத, பாகுபாடில்லாத, எங்குமே காணமுடியாத பெருந்தன்மையுடன் மன்னிக்கும் பண்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சட்டமாக அமைந்தது.

    குறைஷி இனத்தைச் சேர்ந்த இறைநம்பிக்கையாளர்கள், மதீனாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் அனைத்து முஸ்லிம்கள், இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் போடப்பட்ட ஒப்பந்தம் சகோதரத்துவத்தை மேம்படுத்தியது. இஸ்லாமியர்களுக்கான சட்டம் தவிர, யூதர்களுடன் நன்மையான நல்ல உடன்படிக்கையையும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஏற்படுத்தித் தந்தார்கள். அந்த யூதர்களை அதிகாரம் கொண்டு மதீனாவை விட்டு விரட்டவில்லை. மக்காவை விட்டு வந்தவர்களின் சொத்துகளைக் குறைஷிகள் அபகரித்தனர், ஆனால் மதீனாவில் இருந்த யூதர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய நபிகளார் நாடவில்லை. மாறாக, அவர்களுக்கு அவர்களது செல்வத்திலும், மதத்திலும் முழுச் சுதந்திரத்தை அளித்தார்கள்.

    மக்காவிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் குறைஷிகளிடமிருந்து தப்பித்து மதீனாவில் நிம்மதியான, பாதுகாப்பான இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்களெனக் கோபத்திலிருந்தார்கள் குறைஷிகள். மதீனாவிலிருக்கும் தங்களுக்குச் சாதகமானவர்களைக் கூட்டுச் சேர்க்க நினைத்து அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூலுக்குக் கடிதம் எழுதினார்கள். நபி (ஸல்) மதீனா வருவதற்கு முன் மதீனாவாசிகள் அவனையே தங்களது அரசனாக ஏற்றுக் கொள்ள இருந்தனர். இதனால் அவனுக்கு நபி (ஸல்) அவர்கள் மீதுள்ள கோபத்தை அறிந்த மக்காவாசிகள், அப்துல்லாஹ் இப்னு உபைக்கும் அவனுடன் இருந்த இணை வைப்போருக்கும் கடிதம் எழுதினர். மக்காவைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்காமல் வெளியேற்ற வேண்டுமென்று கேட்டனர்.

    அந்தச் சமயத்தில், ஓர் அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கும் இணை வைப்பாளர்கள், யூதர்கள், இறைநம்பிக்கையாளரென்று எல்லோரும் இருந்தனர். அங்கே அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலும் இருந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அவையோருக்கு சலாம் (முகமன்) கூறினார்கள். பிறகு தம் வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைய அவர்களை அழைத்தார்கள்.

    அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினார்கள். இதைக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல், நபி(ஸல்) அவர்களிடம் “மனிதரே! நீர் கூறுகிற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. ஆனால், அதை எங்களுடைய அவையில் வந்து சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் அதை எடுத்துச் சொல்லுங்கள்” என்று முகத்தில் அறைந்தாற்போல் சொன்னார்.

    அங்குச் சலசலப்பு ஏற்பட்டது, அங்கிருந்தவர்கள் ஒருவரையொருவர் சாடிக் கொண்டனர். நபி(ஸல்) அவர்கள், மக்களை அமைதிப்படுத்தினார்கள். அதன்பின் ஸஅத் இப்னு உபாதா(ரலி) நபிகளாரிடம் “மதீனாவாசிகள் அப்துல்லாஹ்வுக்குக் கீரிடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய மார்க்கத்தின் மூலம் அந்த முடிவுகளை நிராகரித்ததால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். இதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்து கொண்டதற்குக் காரணம்” என்று விளக்கிக் கூறினார். அவர் கோபத்திலிருந்த நியாயத்தைப் புரிந்து கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்தார்கள்.

    குர்ஆனில் அல்லாஹ் கூறினான்: “இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களுக்கு முன்வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும் இணைவைத்தோரிடமிருந்தும் ஏராளமான நிபந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். அப்போதெல்லாம், நீங்கள் பொறுமை காத்துத் தீமையிலிருந்து விலகி நடந்தால், அதுதான் உறுதிமிக்கச் செயல்களில் ஒன்றாகும்”.

    ஸஹீஹ் புகாரி 5:65:4566, திருக்குர்ஆன் 03:186

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×