search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஹுதைபிய்யா உடன்படிக்கை
    X

    ஹுதைபிய்யா உடன்படிக்கை

    இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம்.
    மக்காவில் உள்ள இறை இல்லமான கஅபாவுக்குச் சென்று இறை வணக்கத்தை நிறைவேற்ற முடியாமல் முஸ்லிம்கள் சுமார் 6 ஆண்டு காலமாக இணை வைப்பவர் களால் தடுக்கப்பட்டு வந்த காலகட்டம் அது.

    ஹிஜ்ரி 6-ம் ஆண்டு துல்கஅதா மாதத்தின் தொடக்கத்தில் தோழர்களுடன் மதீனாவில் இருந்து மக்கா சென்று ‘உம்ரா’ செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடிவு செய்தார்கள். ‘உம்ரா’ என்பது ஹஜ் அல்லாத காலங்களில் ‘கஅபா’ சென்று இறைவனை வழிபடுவதாகும்.

    சிலை வணக்கத்தில் ஈடுபடும் குரைஷிகள், இறை இல்லத்துக்குச் சொந்தம் கொண்டாட முடியாது என்பதையும், புனித யாத்திரை செல்லும் உரிமை முஸ்லிம்களுக்கும் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே நபிகளாரின் நோக்கம். 1,400 முஸ்லிம்களுடன் நபிகளார் புறப்பட்டார்கள்.

    ‘இறை இல்லமான கஅபாவை தரிசிப்பதற்காகவே செல்கிறோம்; போர் புரிவதோ தாக்குதல் நடத்துவதோ எங்கள் எண்ணம் அல்ல’ என்பதைப் பிரதான அம்சமாகப் பிரகடனப்படுத்தினார்கள்.

    இருப்பினும் குரைஷிகளின் நிலையை அறிந்து கொள்ள ஒற்றன் ஒருவரை அனுப்பி வைத்தார்கள்.

    ‘எல்லா குலத்தவரையும் குரைஷிகள் ஒன்று திரட்டி இருக்கிறார்கள். உங்களை மக்கா நகருக்குள் நுழைய விடக்கூடாது என்பதுதான் அவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவான முடிவு’ என்று அந்த ஒற்றன் தெரிவித்தார்.

    இருந்தபோதிலும் நபிகளார் எதைப் பற்றியும் கவலைப்படாமல் முன்னேறிச் சென்றார்கள்.

    அவர்கள் ஹுதைபிய்யா என்ற இடத்தில் முகாமிட்டார்கள். இது மக்காவில் இருந்து ஜித்தாவுக்குச் செல்லும் வழியில் ஐந்து கல் தொலைவில் இருக்கிறது. இங்கு ‘ஹுதைபிய்யா’ என்ற பெயரில் கிணறு ஒன்று இருந்தது. அந்தக் கிணற்றின் அருகே இருந்த ஊருக்கும் இந்தப் பெயரே வழங்கப்படலாயிற்று.

    அங்கு நபிகளார் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது குஜாஆ கிளையைச் சேர்ந்த சிலருடன் புதைல் இப்னு வர்கா என்பவரை சந்தித்துப் பேசினார்.

    அவரிடம் நபிகளார், ‘நாங்கள் யாரிடமும் சண்டை செய்வதற்காக இங்கு வரவில்லை ‘உம்ரா’ செய்வதற்காகவே வந்துள்ளோம். நிச்சயமாக குரைஷிகளுக்குப் போரின் காரணமாக கடுமையான சேதமும் நஷ்டமும் ஏற்பட்டிருக் கிறது. அவர்கள் விரும்பினால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நான் அவர்களுடன் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். அவர்கள் எனக்கும் மற்ற மக்களுக்கும் இடையில் குறுக்கிடக் கூடாது. (அதாவது நான் மக்களுக்கு இஸ்லாமை எடுத்துக் கூறுவதற்கு அவர்கள் தடையாக இருக்கக் கூடாது.) விரும்பினால் மற்ற மக்களைப் போல இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாம். இல்லையெனில் சிறிது காலம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். இவற்றை ஏற்றுக் கொள்ளாமல் ‘போர்தான் புரிவோம்’ என்று பிடிவாதம் பிடித்தால், இந்த மார்க்கத்திற்காக என் கழுத்து துண்டாகும் வரை அல்லது அல்லாஹ் இந்த மார்க்கத்தை நிலை நிறுத்தும் வரை நான் அவர்களுடன் போர் புரிவேன்’ என்று கூறினார்கள்.

    இந்தக் கருத்தைக் குரைஷிகளிடம் புதைல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து குரைஷிகள் சார்பில் நபிகளாரிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இதற்கிடையே போர் வெறி பிடித்த குரைஷி இளைஞர்கள் தங்களின் தலைவர்கள் சமாதான உடன்படிக்கையில் ஆர்வமாக இருப்பதை விரும்பவில்லை. உடனே அதைத் தடுக்க வேண்டும் என்று திட்டமிட்டனர்.

    அதன்படி அவர்கள் இரவில் முஸ்லிம்களின் கூடாரத்திற்குள் புகுந்து, போரைத் தூண்டும் சதிச்செயல்களில் ஈடுபட முடிவு எடுத்தனர். இதை நிறைவேற்ற எழுபதுக்கும் மேற்பட்டோர் முஸ்லிம்களின் கூடாரத்தை நோக்கி முன்னேறினார்கள்.

    நபிகளார் நியமித்த பாதுகாப்பு படையின் தளபதியான முகம்மது இப்னு மஸ்லமா, எதிரிகள் அனைவரையும் சுற்றி வளைத்து கைது செய்தார். இருந்தபோதிலும் சமாதானத்தில் கொண்ட ஆர்வம் காரணமாக அனைவரையும் மன்னித்து நபிகளார் விடுதலை செய்து விட்டார்கள்.

    இந்த நிலையில், குரைஷிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த உஸ்மான் (ரலி) அவர்களை மக்கா மாநகருக்கு அனுப்ப நபிகளார் முடிவு செய்தார்கள். அங்கு சென்ற உஸ்மான், குரைஷிகளின் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கஅபாவை முஸ்லிம்கள் தரிசிக்க அவர்கள் எந்தவிதத்திலும் இசைவைத் தெரிவிக்கவில்லை. மேலும் உஸ்மான் (ரலி) அவர்களைத் திரும்பிச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திக் கொண்டனர்.

    இந்த நேரத்தில் ‘உஸ்மான் கொல்லப்பட்டு விட்டார்’ என்ற வதந்தி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது முஸ்லிம்களை தவிப்புக்குள்ளாக்கியது. முஸ்லிம்கள் அனைவரையும் ஒரு கருவேல மரத்தின் கீழ் நபிகளார் ஒன்று திரட்டி, உஸ்மான் (ரலி) அவர்களது கொலைக்கு பழி வாங்கும் வகையில் இறுதி வரை போராடுவது என்று கையோடு கை இணைத்து உறுதிமொழி வாங்கினார்கள். இந்த உறுதிமொழி முஸ்லிம்களிடையே வியக்கத்தக்க ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. இந்த உடன்படிக்கையே ‘பைஅத்துர் ரிள்வான்’ (அங்கீகரிக்கப்பட்ட இறைப் பொருத்தத்திற்குரிய உடன்படிக்கை) என்று இஸ்லாமிய வரலாற்றில் பெருமையாகப் பேசப்படுகிறது.

    இது குறித்து இறை வசனமும் இறங்கியது:

    “அந்த மரத்தினடியில் உங்களிடம் கை கொடுத்து உடன்படிக்கை செய்த நம்பிக்கையாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தி அடைந்தான். அவர்களின் உள்ளங்களில் இருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும் ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியாக ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான்” (திருக்குர்ஆன்-48:18)

    இதற்கிடையே முஸ்லிம்கள் தங்கள் மீது பயங்கரமான முறையில் போர் தொடுக்க ஆயத்தமாகி விட்டனர் என்ற தகவல் குரைஷிகளுக்குக் கிடைத்தது. இனியும் உஸ்மானை தடுத்து வைத்திருப்பது தவறு; அவரைத் தாமதிக்காமல் அனுப்பிட வேண்டும் என்று தீர்மானித்தனர். இதன்படி உஸ்மான் பத்திரமாக முஸ்லிம்களிடம் வந்து சேர்ந்தார்.
    Next Story
    ×