search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நிறைவேற்றப்பட வேண்டிய இறைநீதிகள்
    X

    நிறைவேற்றப்பட வேண்டிய இறைநீதிகள்

    ஒவ்வொரு பாவத்தையும் செய்யாமல் தவிர்த்து, இறைகுணத்தை செயல்படுத்த இடம் கொடுத்தால்தான், நம்மைப்பற்றி இறைவன் கொண்டுள்ள சித்தத்தின்படியான இறைநீதிகளை நிறைவேற்ற வழிபிறக்கும்.
    உலகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான நன்மைகளை இறைவன் நிறுத்தாமல் அருளிக்கொண்டிருக்கிறார். தேவைக்கு அதிகமான நன்மைகளை இறைசித்தத்தைத் தாண்டி மனிதன் நாடும்போதுதான் பாவத்துக்குள் விழுகிறான்.

    தேவைக்கு மேல் தேவை ஏற்படுவது போலவும், பணத்தை தேடிவைத்துக் கொள்ளாவிட்டால் உலகத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டு விடுவோம் என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை சாத்தான் உருவாக்கி வைத்துள்ளான். அடுத்தவர்களை பார்த்து வாழும் பலர், இந்த மாயைக்குள் எளிதில் சிக்கிக்கொள்கிறார்கள்.

    தகுதிக்கும் மேலானதை தேடத்தூண்டும் செயலை, ஆதாம் காலத்தில் இருந்து சாத்தான் செய்து வருகிறான். தரப்பட்டதோடு திருப்தியடையாத உள்ளத்தை (1 தீமோ.6;6), சாத்தான் எளிதில் வசப்படுத்திக் கொண்டு, அவர்களை ஏவாளைப் போல ஏமாற்றி வருகிறான். இதனால் வரும் அலைச்சல்களும், அங்கலாய்ப்புகளும் ஏராளம் ஏராளம்.

    நட்புக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் இறைவன் அனுமதிக்கும் நபர்களையும் தாண்டி, உள்நோக்கத்தோடு தேடிக்கொள்ளும் நட்புகளாலும் பல வகையில் பாதை மாறி பலர் ஓடிக்கொண்டிருக்கின்றனர். உலகில் இதெல்லாம் இயல்புதானே என்று தவறுகளை பலர் நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

    இவற்றில் இருந்து மீட்படைய வேண்டுமானால், உண்மையான இறைப்பாதையை அவரவரே நாடிச்சென்று வேத சத்தியங்களைக் கண்டுகொள்வது மட்டுமே ஒரே வழியாக உள்ளது. இதற்காக இறைவனுக்கு நமது வாழ்க்கையில் எல்லா வகையிலும் இடம்கொடுக்க வேண்டியது அவசியம்.

    ஏசு தனது இறைப்பணியைத் தொடங்கு வதற்கு முன்பு, அவரைப்பற்றிய பல்வேறு தகவல்களை தீர்க்கதரிசனமாக மக்களிடையே யோவான் ஸ்னானன் அறிவித்து வந்தான். ஞானஸ்னானம் என்ற ஒரு இறைநீதியை யோவான் ஸ்னானன் மூலம் நிறைவேற்றுவதற்கு ஏசு வந்தபோது அவன் மறுத்தான்.

    அப்போது ஏசு, ‘இப்போது இடங்கொடு. இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்ற தாயிருக்கிறது’ என்றார் (மத்.3;15).

    இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் இறைவனுக்கு இடம் கொடுத்து இறைநீதியை நிறைவேற்றுவது எல்லாருக்குமே தரப்பட்ட கட்டளையாக இருக்கிறது. இறைநீதியை நிறைவேற்ற வேண்டுமானால், வாழ்க்கையில் இறைவனுக்கு இடம் கொடுத்தாக வேண்டும் என்பதையும் அந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.

    வாழ்க்கையில் இறைவனுக்கு இடம் கொடுப்பது என்றால் என்ன?

    முழுமையான மனந்திரும்புதல்தான் இதற்கான முதல் தகுதியைத் தருகிறது. சரீர ரீதியான பாவங்களில் இருந்தும், உள்ளத்தில் இருந்து புறப்பட்டு வரும் பாவங்களில் இருந்தும், ஜென்ம சுபாவம் என்ற பிறவிக்குணங்களில் இருந்தும் மனந்திரும்புவது தான், அதில் முழுமையைத் தருகிறது.

    ஒரு அழுக்கை வைத்துக் கொண்டு மற்றொரு அசுத்தத்தை நீக்கிக் கொள்வது முழுமையான சுத்தத்தைத் தராது. இதில் முழுத்தகுதியையும் பெற்றவன் மட்டுமே வாழ்க்கையின் அனைத்து செயல்பாட்டிலும் இறைவனுக்கு இடம் கொடுப்பவனாகவும், அதன் மூலம் அவனைப்பற்றிய இறைநீதிகளை நிறைவேற்றுபவனாகவும் இருக்க முடியும்.

    இப்படிப்பட்ட ஆன்மிக வாழ்க்கைக்கு முழுமையான மனந்திரும்புதல் என்பதுதான் அடிப்படையாக உள்ளது. இந்த அடிப்படை அஸ்திவாரத்தை போடாமல், வெளி அடையாளத்துக்காக கூறப்பட்ட ஞானஸ்னானம், ‘ராப்போஜனம்’ என்ற ‘திருவிருந்து’ போன்றவற்றை மேலே மேலே கட்டிக்கொள்வதில் அர்த்தமில்லை.

    இறைவனுக்கு இடம் கொடுக்கும் சூழ்நிலை வரும்போது, யோவான் ஸ்னானன் போல அதை மறுக்கும் நிலைதான் முதலில் ஏற்படுகிறது. ஏனென்றால், அது இயல்பு வாழ்க்கையில் இருந்து திசை திரும்பிச் செல்வதுபோல் உள்ளது.

    முதலாவதாக, சரீர ரீதியான பல்வேறு பாவங்களை விட்டுவிட்டு, சாதக சூழ் நிலைகள் எழுந்தாலும் அவற்றை செய்யாமல் இருப்பதுதான், சரீர ரீதியான வாழ்க்கையில் இறைவனுக்கு இடம் கொடுத்தலாகும். அதோடு நின்றுவிட முடியாது.

    இரண்டாவதாக, காமம், கெடுதல் நினைப்பது, பொறாமை, பொருளாசை (மாற்கு 7;21,22) உட்பட உள்ளத்தில் இருந்து புறப்பட்டு வரும் பல பாவங்களை விலக்கியாக வேண்டும். அதாவது, இச்சையான நினைவு-பார்வை, வேறுபாடு-கவுரவம் பார்ப்பது, மற்றவரின் பொருட்கள் மீது ஆசை வைப்பது என பலவகையான பாவங்கள் உள்ளன. உள்ளத்தில் இருந்து உருவாகும் இவற்றை விலக்கியாக வேண்டும்.

    மூன்றாவதாக, பொய் சொல்வது, நினைத்தபடி நடக்காவிட்டால் எரிச்சல் படுவது, கருத்து வேறுபாடு கொண்டவர்கள் மீது கோபமடைவது போன்ற பல வகையான பிறவிக்குணங்களில் இருந்தும் நீங்கியாக வேண்டும்.

    மேற்கூறப்பட்ட இந்த சில பாவங்களை, அதற்கான சூழ்நிலை எழும்போது செய்யாமல் கட்டுப்படுத்தி, இறைவன் சொன்னதை மட்டுமே செயல்படுத்த முழுமனதோடு முற்படுவதுதான் இறைவனுக்கு இடம் கொடுத்தலாகும்.

    உதாரணமாக, பகைவனை நேசித்தல் என்பது இறைவனுக்கு இடம் கொடுப்பதில் ஒன்றாகும். இது இயல்புக்கு மாறானது.

    இப்படி இயல்பாகச் செய்யும் பாவங்களை தவிர்க்க முழுமனதோடு முயன்றால், அதற்கு இறைஆவியின் பலம் தரப்படும் என்பதை கிறிஸ்தவம் மட்டுமே உறுதிபகர்கிறது. அதாவது, வெறும் போதனையை மட்டும் செய்யாமல், போதனையை வாழ்க்கையில் செயல்படுத்தக் கூடிய பலத்தையும் சேர்த்துத் தரும் ஒரே மார்க்கம் கிறிஸ்தவமே.

    இப்படி ஒவ்வொரு பாவத்தையும் செய்யாமல் தவிர்த்து, இறைகுணத்தை செயல்படுத்த இடம் கொடுத்தால்தான், நம்மைப்பற்றி இறைவன் கொண்டுள்ள சித்தத்தின்படியான இறைநீதிகளை நிறைவேற்ற வழிபிறக்கும்.

    அந்த வகையில் யோவான் ஸ்னானன் இடம் கொடுத்த போதுதான், அவனால் ஏசுவுக்கு திருமுழுக்கு ஞானஸ்னானம் கிடைக்கும் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறியது. நாம் எதற்கு இடம் அளிக்கிறோம்?
    Next Story
    ×