search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பார்க்க முடியாத படைகளைக் கொண்டு பலப்படுத்திய இறைவன்
    X

    பார்க்க முடியாத படைகளைக் கொண்டு பலப்படுத்திய இறைவன்

    நிராகரிப்போரின் முயற்சிகள் வீணானது, வாக்குகள் கீழானது. அல்லாஹ்வின் வாக்குதான் எப்போதும் மேலானது. அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
    நபி முஹம்மது (ஸல்), பிறந்த மண்ணான மக்காவைத் துறந்து மனவருத்தத்தோடு வெளியேறினார்கள். ‘தவ்ர்’ என்ற மலை குகைக்கு வந்தபோது நபித் தோழர் அபூ பக்கர் (ரலி) முதலில் குகையில் நுழைந்து அங்கு ஏதும் பூச்சியோ அல்லது விஷ ஜந்தோ உள்ளதா என்று தம் கைகளால் தடவிப் பார்த்து, அதன் பின் நபி (ஸல்) அவர்களைக் குகைக்கு உள்ளே வரச் சொன்னார்கள்.

    நபிகளார் மக்காவிலில்லை என்று அறிந்த குறைஷிகள் எல்லாப் பக்கமும் ஆட்களை அனுப்பித் தேடினர். நபிகளாரைப் பிடித்து வருபவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசு என்று அறிவித்தனர். ஆகையால் நபி முஹம்மது (ஸல்) மற்றும் அபூ பக்கர் (ரலி) இருவரும் அந்தக் குகையிலேயே கிட்டத்தட்ட மூன்று நாட்கள் தங்கும்படியாக ஆகிவிட்டது. ஊருக்குள் நடப்பவை பற்றி அபூ பர்க்கர் (ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் தகவல் தந்த வண்ணம் இருந்தார்கள். அவர்கள் வந்து போகும் கால் தடங்களை அழிக்கவே ஒரு பணியாள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். அவர் தம் ஆடுகளை எடுத்துக் கொண்டு அப்துல்லாஹ்வின் பின்னேயே சென்று சுவடுகளை அழிப்பார்.

    நபிகளார் மற்றும் அபூ பக்கர் (ரலி) இருவருக்கான பயண உணவை, அபூ பக்கர் (ரலி) அவர்களின் வீட்டில் தயாரித்து, தண்ணீர் தோல் பையை ஒட்டகத்தில் வைத்து கட்டிக் கொண்டு வந்திருந்தனர். உணவையும் தண்ணீரையும் ஒட்டகத்தில் வைத்துக் கட்டுவதற்கு அபூ பக்கர் (ரலி) அவர்களின் மகள் அஸ்மாவிற்குத் தனது இடுப்புக் கச்சையைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. இடுப்புக் கச்சையை இரண்டாகக் கிழித்து, ஒன்றினால் தண்ணீர் தோல் பையையும், மற்றொன்றினால் பயண உணவையும் கட்டினார். இதனால் அஸ்மாவுக்கு ‘இரட்டைக் கச்சைக்காரர்’ என்று பட்டப் பெயரும் வந்தது. இப்படி அபூ பக்கரின் ஒட்டுமொத்தக் குடும்பமும் ஏதாவது ஒரு வகையில் நபிகளார் ஹிஜ்ரத் செய்வதற்கு உதவினர்.

    குகையில் அபூ பக்கரின் மடியில் நபிகளார் தலையைச் சாய்த்துத் தூங்கினார்கள். அப்போது அபூ பக்கர் (ரலி) அவர்களை ஏதோ தீண்டிவிட்டதால் அவர் தாங்க முடியாத வலியில் இருந்தார்கள். இருப்பினும் நபிகளார் விழித்துவிடக் கூடாதென்று வலியைத் தாங்கிக் கொண்டு அசையாமல் இருந்தார்கள். வலியின் காரணமாக அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடி ஒரு சொட்டுக் கண்ணீர் நபிகளாரின் கன்னத்தில் விழுந்தது. உடனே விழித்துக் கொண்ட நபி முஹம்மது (ஸல்) “அபூ பக்கரே, ஏன் கலங்குகிறீர்கள்?” என்று கேட்டார்கள். வலியில் இருந்த அபூ பக்கர் (ரலி) தம்மை ஏதோ தீண்டியதைப் பற்றிச் சொன்னார்கள். நபிகளார் தமது உமிழ்நீரை எடுத்து, தீண்டிய இடத்தில் தடவியவுடன் அபூ பக்கர் (ரலி) அவர்களின் வலி நீங்கியது.

    இருவரும் குகையில் இருந்தபோது விரோதிகளின் நடமாட்டம் வெளியில் தெரிந்தது. எதிரிகள் குகைவாசலை வந்தடைந்தனர். அபூ பக்கர் (ரலி) மெல்லிய குரலில் நபிகளாரிடம் “யா ரசூலல்லாஹ்! அவர்கள் குனிந்தாலேபோதும் நாம் குகைக்குள் இருப்பதைத் தெரிந்து கொள்வார்கள்” என்று கூறியவுடன், அதற்கு நபி முஹம்மது (ஸல்) சொன்னார்கள், “கவலைப்படாதீர்கள், இங்கு நாம் இருவர் மட்டுமல்ல. நம்மோடு மூன்றாமவனாக அல்லாஹ்வும் நம்முடன் இருக்கிறான்” என்று உறுதியான நம்பிக்கையுடன் கூறினார்கள்.

    அல்லாஹ்வின் உதவியால் குகையின் வாயிலில் சிலந்தி வலை கட்ட ஆரம்பித்தது. அங்கு ஒரு பறவையின் முட்டையும் தென்பட்டது. யாருமில்லாத இடத்தில்தான் பறவை முட்டையிடும், சிலந்தி வலை அறுந்திருந்தால் உள்ளே யாரும் சென்றிருப்பார்கள் என்று சந்தேகம் வரும், ஆகையால் எதிரிகள் பார்க்க முடியாத படைகளைக் கொண்டு காரியத்தைப் பலப்படுத்தினான் இறைவன். நிராகரிப்போரின் முயற்சிகள் வீணானது, வாக்குகள் கீழானது. அல்லாஹ்வின் வாக்குதான் எப்போதும் மேலானது. அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.

    ஸஹீஹ் புகாரி 2:42:2138, 3:56:2979, 4:62:3651, 4:62:3653, திருக்குர்ஆன் 9:40

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×