search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெறுப்பு நெருப்பை அணையுங்கள்
    X

    வெறுப்பு நெருப்பை அணையுங்கள்

    பெருமானார் (ஸல்) அவர்களுடைய வாழ்வில் இதற்கான பாடம் உள்ளது. ஏற்படவிருந்த ஒரு பெரும் இனக்கலவரத்தை அண்ணலார் (ஸல்) அவர்கள் எவ்வாறு தீர்த்து வைத்தார்கள் என்பது நமக்கான பாடமும் படிப்பினையும்.
    தவறுகளைக் கண்டால் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது ஒரு கலை. ஒவ்வொரு வாசலுக்கும் ஒவ்வொரு தனித்தனித் திறவுகோல் இருப்பதைப் போன்றே, ஒவ்வொரு தவறையும் தனித்தனியாகக் கையாள்வது ஒரு கலை. முடிந்தவரை அதனைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

    பெருமானார் (ஸல்) அவர்களுடைய வாழ்வில் இதற்கான பாடம் உள்ளது. ஏற்படவிருந்த ஒரு பெரும் இனக்கலவரத்தை அண்ணலார் (ஸல்) அவர்கள் எவ்வாறு தீர்த்து வைத்தார்கள் என்பது நமக்கான பாடமும் படிப்பினையும்.

    பனூமுஸ்தலக் போருக்காக தமது தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் சென்றிருந்தார்கள். போரிலிருந்து திரும்பி வரும் வழியில் ஓரிடத்தில் தங்கி அனைவரும் ஓய்வெடுத்தனர். அப்போது முஹாஜிர்கள் தங்களது பணியாளரான ஜஹ்ஜாஹ் பின் மஸ்ஊத் என்பவரைத் தண்ணீர் எடுத்து வருமாறு அனுப்பி வைத்தனர். அதேவேளை அன்சாரிகளும் தங்களது பணியாளரான ஸினான் பின் வபர் என்பவரைத் தண்ணீர் எடுத்து வருமாறு அனுப்பி வைத்தனர்.

    தண்ணீர் இருக்கும் கிணற்றுக்கு அருகே பணியாளர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஒருவர் மற்றவரை அடிக்க, அடிபட்டவர், ‘அன்சாரிகளே..!’ என்று பெரும் சப்தத்துடன் தமது மக்களை உதவிக்கு அழைத்தார். உடனே அடுத்தவரும், ‘முஹாஜிர்களே..!’ என்று அழைக்கத் துவங்கினார்.

    அன்சாரிகள் வேக வேகமாக அங்கு வந்தனர். முஹாஜிர்களும் ஆவேசத்துடன் அங்கு வந்தனர். இரு கூட்டத்தினரும் போரிலிருந்து திரும்பி வந்துகொண்டிருக்கும் சூழல். ஆயுதம் தரித்த நிலை. இரு கூட்டத்தினரும் மோதிக்கொள்ளும் ஆபத்து மெள்ள மெள்ள தலைகாட்டியது.

    நடந்த விஷயம் அறிந்து வேகமாக அங்கு வந்த பெருமானார் (ஸல்) அவர்கள் இரு கூட்டத்தினரையும் சமாதானம் செய்துவைத்தார்கள். அவர்களைச் சாந்திபெறச் செய்தார்கள். அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

    நயவஞ்சகர்களின் தலைவனான அப்துல்லாஹ் பின் உபைக்கு அந்த நிகழ்வு நெஞ்சில் வெறுப்புத் தீயை மூட்டியது. நடந்த நிகழ்வை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தமது கூட்டத்தினரான மதீனாவாசிகளிடம் வேகமாகவும் கோபமாகவும் வந்து கூறினான்:

    ‘இது உங்களுக்கு நீங்களே தேடிக்கொண்ட வினை. உங்கள் நாட்டை அவர் களுக்கு விட்டுக்கொடுத்தீர்கள். உங்கள் பொருட்களை அவர்களுக்கு பங்கு வைத்துக் கொடுத்தீர்கள். நான் அல்லாஹ் மீது ஆணையிட்டுக் கூறுகின்றேன்! இனிமேல் உங்கள் பொருட்களை அவர்களுக்கு நீங்கள் கொடுக்காமல் இருந்தால் வேறு நாட்டைத் தேடி அவர்கள் சென்றுவிடுவார்கள்’.

    அந்த மக்கள் கூட்டத்தில் ஸைத் பின் அர்கம் எனும் இளைஞர் ஒருவரும் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்தவற்றை ஒன்றுவிடாமல் அவர் கூறினார். அப்போது அங்கிருந்த உமர் (ரலி) அவர்கள் துள்ளி எழுந்தார்கள். அந்த நயவஞ்சகன் கொலை செய்யப்பட வேண்டும். அதுவும் அன்சாரிகளில் இருந்து ஒருவர் கொலை செய்வதே சிறப்பாக இருக்கும் என்று கருதிய உமர் (ரலி) அவர்கள், பெருமானார் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! அந்த நயவஞ்சகனைக் கொலை செய்யுமாறு உப்பாதா பின் பிஷ்ர் அவர்களுக்கு ஆணையிடுங்கள்!’ என்று கூறினார்.

    பெருமானார் (ஸல்) அவர்களோ ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டார்கள். பழிவாங்கும் நேரம் இதுவல்ல. அனைவரிடத்திலும் ஆயுதம் இருக்கிறது. போரிலிருந்து திரும்பி வரும் நேரம் வேறு. மக்களுக்கு மத்தியில் இந்த செய்தி பரவினால் பெரும் விஷமத் தீயும் குழப்பமும் பரவத் துவங்கும். இரு கூட்டரும் ஒருவருக்கொருவர் ஆயுதம் ஏந்தும் சூழல் ஏற்படும். என்ன செய்வது..?

    அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் இடையே இது சம்பந்தமாக பெரும் பிரச்சினை வெடிக்கப்போகிறது எனும் சமிக்ஞையை பெருமானார் (ஸல்) உணரத் துவங்கினார்கள். ஆகவே அவர்களுடைய கவனத்தை வேறுதிசையில் திருப்ப நாடினார்கள். நடந்த விஷயம் குறித்து பேசித்தீர்ப்பதற்காக தோழர்கள் ஓய்வை எதிர்பார்த்தனர். ஆனால், பெருமானாரோ ஓய்வின்றி நடந்துகொண்டே இருந்தார்கள்.

    நடை.. நடை.. தொடர் நடை.. அன்றைய தினத்தின் பகல் முழுவதும் விடாமல் நடந்துகொண்டே இருந்தனர். சூரியன் மறையத் துவங்கியது. தொழுகைக்காக ஓரிடத்தில் தங்குவோம், அப்போது கண்டிப்பாக ஓய்வு கிடைக்கும் என்று மக்கள் நம்பினர். ஆனால் விரல் விட்டும் எண்ணும் ஒருசில நிமிடங்கள் மட்டுமே தொழுகைக்கென நேரம் ஒதுக்கப்பட்டது. தொழுகை முடிந்ததும் உடனடியாக மீண்டும் நடை தொடர்ந்தது. இரவு முழுவதும் நடந்தனர். அதிகாலைத் தொழுகைக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. தொழுகை முடிந்ததும் மீண்டும் நடை தொடர்ந்தது. சூரியன் சுடத்துவங்கியது. ஆயினும் நடையை நிறுத்தவில்லை. ஒன்றரை நாள் தொடர் நடை. அனைவரும் களைப்படைந்தனர். வெயில் ஒருபக்கம் வாட்டி வதைத்தது. பிரச்சினையைப் பேசுவதற்கோ ஊதிப் பெருசு படுத்துவதற்கோ எவரிடமும் அப்போது சக்தியும் இருக்கவில்லை, மனமும் இருக்கவில்லை. தற்போது அனைவருக்கும் தேவை ஓய்வு.. ஓய்வு.. ஓய்வு மட்டுமே.

    இறுதியில் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்குமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வளவுதான்... முதுகு தரையில் பட்டதும் அனைவரும் தங்களை அறியாமலேயே உடனடியாகத் தூங்கிவிட்டனர். பேசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. கொஞ்ச நேரம் தூங்கியபின் மீண்டும் நடை தொடர்ந்தது. மதீனா வந்தடைந்தனர். மதீனாவுக்குள் வந்ததும் அனைவரும் தத்தமது வீடுகளுக்குப் பிரிந்து சென்றனர்.

    நடந்த நிகழ்வை மையமாக வைத்து இந்த சூழ்நிலையில்தான் ‘முனாஃபிகூன்’ என்ற அத்தியாயம் இறங்கியது. அதன் வசனங்களை நபி (ஸல்) அவர்கள் அனைவருக்கும் ஓதிக் காட்டினார்கள். உண்மை நிலையைப் புரிந்துகொண்ட நபித்தோழர்கள் அப்துல்லாஹ் பின் உபை என்ற அந்த நயவஞ்சகரை சபிக்கவும் திட்டவும் துவங்கினர். அந்தக் காட்சியை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.

    உமர் (ரலி) அவர்களை அழைத்து பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உமரே! அன்றுமட்டும் இவனை நீங்கள் கொலை செய்திருந்தால்.. இந்த மக்கள் ரோஷம் கொண்டு இவனுக்காகப் பழிக்குப்பழி வாங்குவதற்குத் தயாராக இருந்திருப்பார்கள். ஆனால் இன்றோ நிலைமையைப் பாருங்கள். அவனைக் கொலை செய்யுங்கள் என்று இந்த மக்களுக்கு இப்போது நான் ஆணையிட்டால் அனைவரும் சேர்ந்து அவனைக் கொலை செய்துவிடுவார்கள்’.

    அவ்வாறு அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. ‘பித்னா’ எனும் பெரும் குழப்பத் தீ பரவாமல் நபி (ஸல்) அவர்கள் மிகவும் சாதுர்யமாகத் தடுத்துவிட்டார்கள். இதுதான் ராஜதந்திரம்.

    மவுலவி நூஹ் மஹ்லரி, குளச்சல்.
    Next Story
    ×