search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறைவனின் அத்தாட்சி
    X

    இறைவனின் அத்தாட்சி

    நம் அறிவு எல்லைக்குள் அடங்காத அத்தனை தடுப்புகளையும் ஓர் அத்தாட்சியாக இறைவன் அமைத்து தந்திருக்கிறான். இவற்றையெல்லாம் அலட்சியம் செய்தால் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்ல போகிறோம்? சிந்திப்போமா?
    பெரு வெடிப்பில் பிறந்தது தான் இந்த உலகம். பிறந்தவை அத்தனையும் வளர்கின்ற வகையில் மாற்றங்களைப் பெறுகின்றன. அதுபோல் உலகமும் மண்ணாய், கல்லாய், மலையாய், அருவியாய், ஆறாய் பல மாற்றங்களோடு தன்னை உருவகித்துக் கொண்டது. இருந்தாலும், அல்லாஹ் அதில் பல நுட்பங்களை அமைத்து அதனை தன் அருள்மறையில் விளக்கமாகவும் குறிப்பிட்டுள்ளான்.

    அந்த நுட்பங்களில் ஒன்றுதான், ‘கடற்பரப்பில் அல்லாஹ் ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளான்’ என்று சொல்லும் திருமறை வசனம்.

    கடல்பரப்பு ஒன்று தான், நீர் ஒன்றுதான், இடையில் தடுப்பாய் ஒன்றையும் அமைத்துவிடவில்லை. இருந்தும் உணர முடியாத ஒரு தடுப்பு ஒன்று இருப்பதை மறுக்க முடியாது. தடுப்பு வரை ஓடிவரும் நீர்த்திவலைகள் அந்த எல்லையை இன்றுவரை தாண்டவில்லை.

    இதுதொடர்பாக ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டன. உப்பு கரைசல்கள், ரசாயன கலவைகளால் ஒன்றின் தன்மையை மற்றொன்டோடு ஒப்பிட்டு கலக்கச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அத்தனையும் தோல்வியில் முடிந்தன. அந்த அதிசயம் பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு சொல்கிறது:

    “இரு கடல்களையும் அவை சந்திக்குமாறு அவனே இணைத்தான், ஆயினும் அவை இரண்டிற்கும் மத்தியில் ஒரு தடுப்புண்டு. அத்தடுப்பை அவை இரண்டும் மீறாது. ஆகவே மனிதர்களே! உங்களுடைய அருட்கொடைகளில் எதனை பொய்யாக்குவீர்கள்”. (55:19-20)

    இது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆன் சொன்ன செய்தி. அன்று அது என்னவென்றே தெரிந்திருக்க முடியாத ஓர் அனுமானம். ஆனால் அது இன்று நிரூபணமான உண்மை.

    கடல்களில் பல இடங்களில் இது போன்ற பல தடுப்புகள் இருக்கின்றன. ஜிப்ரால்டர் ஜல சந்தியில் உவர் நீர், நன்னீர் என்ற இருவகையான, இரு சுவையான நீர் உள்ளது. இவை ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்டாலும் ஒன்றோடொன்று கலந்துவிட முடியாத ஓர் மெல்லிய திரையை அல்லாஹ் படைத்திருக்கின்றான்.

    புறக்கண்களால் பார்த்தோ, கரங்களால் தொட்டுணர்ந்தோ கண்டு கொள்ளமுடியாத ஒரு திரையை உருவாக்கிய அல்லாஹ்வின் ஆற்றலை இன்று உலகம் வியந்து நோக்கி கொண்டிருக் கிறது. இருந்தாலும் அது எப்படி முடிந்தது? அது என்னவாக இருக்கின்றது? ஏன் இந்த ஏற்பாடு? எப்படி அல்லாஹ்வின் கட்டளைக்கு இரு கடல்களும் இன்று வரை அடிபணிந்து நடக்கின்றன? கால மாற்றம், தட்ப வெப்பம், சீதோஷ்ண வேறுபாடுகள் இவைகள் எல்லாம் கூட இந்த நிலையை மாற்றி அமைக்க முடியவில்லையே?.

    இதற்கு காரணம் அது அல்லாஹ்வின் கட்டளை. அவன் ஒருவனால் மட்டுமே அதனை மாற்றி அமைக்க முடியும்.

    கடலில் கண்ணிற்கு தெரியாத தடுப்பை ஏற்படுத்தியவன், கரையிலும் இதுவரை கண்டறியா திரை ஒன்றை ஏற்படுத்தியுள்ளான். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    “துல்கர்னைன் அந்த மக்கள் கூட்டத்தை நெருங்கியபோது அவர்கள் ‘யாஜுஸ் மாஜுஸ் என்ற விஷமக்காரர்களின் ஆபத்திலிருந்து எங்களுக்கு ஒரு தடுப்பை ஏற்படுத்தி தாருங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர். அவரும் அதற்கு சம்மதித்து ‘நீங்கள் அதற்கு தேவையான இரும்பு பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று கூறி அவற்றைக் கொண்டு வந்து இரு மலைகளுக்கிடையில் இருந்த பள்ளத்தை நிறைத்து, இரு மலைகளின் உச்சிக்கு அவை சமமாக உயர்ந்த பின்னர் நெருப்பாக பழுக்கும் வரை அதை ஊதுங்கள்’ என்றார். அதன் பின்னர் செம்பையும் என்னிடம் கொண்டு வாருங்கள் நான் அதை உருக்கி அதன் மீது ஊற்றுவேன் என்றார்”. (திருக்குர்ஆன் : 18:96)

    இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த உறுதிமிக்க தடுப்பு சுவர் ஒன்றை அமைத்துக் கொடுத்து, இந்த தடுப்பு சுவர் தாண்டி யாஜுஸ் மாஜுஸ் மக்கள் ஊடுருவி வரவோ, துளையிட்டு நுழையவோ முடியாது என்று அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்.

    அதை தொடர்ந்து துல்கர்னைன் சொன்னார்: “இது என்னுடைய இறைவனுடைய அருள்தான். என் இறைவனின் வாக்குறுதியாகிய யுகமுடிவு வரும் போது இதையும் அல்லாஹ் தூள் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையாக இருக்கிறது என்று கூறினார்”. (18:98).

    அல்லாஹ் அவருக்கு அத்தனை சக்தியைக் கொடுத்திருந்த போதும், காரியங்களைச் செய்து முடித்துவிட்டு கர்வத்திலோ, தலைகனத்திலோ தன்னிலை தடுமாறாமல் ‘இது அத்தனையும் என் இறைவன் அருளால் மட்டுமே கை கூடியது’ என்று சொன்னது இறையடியாளர்களின் நற்குணங்களை எடுத்துச் சொல்கிறது என்பதை இந்த வசனம் நமக்கு உணர்த்துவதை புரிந்து கொள்ள வேண்டும்.

    அடுத்தாக அவர் சொல்லும் போது, ‘அல்லாஹ்வின் வாக்குப்படி யுகமுடிவின் அடையாளம் ஏற்படும் அந்த நாளில், அல்லாஹ்தான் இந்த தடுப்பை தூள் தூளாகச் சிதறச் செய்வான்’ என்ற செய்தியையும் கோடிட்டு காட்டுகிறார்.

    விஞ்ஞான ஆற்றலும், அறிவின் வளர்ச்சியும் உச்சத்தை அடைந்துவிட்ட இந்த காலக்கட்டத்தில் மனிதன் பல்வேறு விஞ்ஞான வசதிகளை பெற்றுள்ளான். மிக நுண்ணிய பாக்டீரியாக்களை நுட்பமான மைக்ராஸ்கோப்பால் கண்டு கொள்ளக் கூடிய வல்லமையை மனிதன் பெற்றுள்ளான். கடலின் ஆழத்தில் வசிக்கும் நுண்ணுயிர்களை கூட அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவன் மனிதன். மலை உச்சிகளில், பனிப் பிரதேசங்களில் கொடிகளை நாட்டிவிடும் சக்தி கொண்டவன் மனிதன். விண்வெளிகளில் உள்ள விவரங்களைக் கூட ஒரு சில வினாடிகளில் அறிந்துகொள்ளும் திறமை கொண்டவன் மனிதன். உயிர்கள் வாழவே முடியாத செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் தேடும் மனிதன், இன்னும் முழுமையாக கண்டுபிடிக்க முடியாத அண்டார்டிகா என்ற கண்டங்களில் கூட பயணம் செய்து பாடங்கள் கற்றுக்கொள்ள முயற்சி செய்பவன் மனிதன்.

    அப்படிப்பட்ட மனிதனால் அல்லாஹ் சொன்ன இந்த தடுப்பை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த இடத்தில், இன்னபொருளால் தான் அந்த தடுப்பை ஏற்படுத்தி இருக்கிறேன் என்று அருள் மறையில் அல்லாஹ் சொல்லி இருக்கிறான். இருப்பினும் மனிதனால் இன்று வரை அந்த தடுப்பை கண்டுகொள்ள முடிந்ததா?

    இப்படி நம் அறிவு எல்லைக்குள் அடங்காத அத்தனை தடுப்புகளையும் ஓர் அத்தாட்சியாக இறைவன் அமைத்து தந்திருக்கிறான். இவற்றையெல்லாம் அலட்சியம் செய்தால் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்ல போகிறோம்? சிந்திப்போமா?

    எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
    Next Story
    ×