search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விதவைப் பெண்ணுக்கு வாழ்வளித்த பெருமகனார்
    X

    விதவைப் பெண்ணுக்கு வாழ்வளித்த பெருமகனார்

    இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக தமது வீட்டையும் நாட்டையும்விட்டு அகதியாக தங்கியிருந்து திரும்பி வந்து சிரமப்படும் ஸவ்தாவைப் பற்றி அறிந்த நபி முஹம்மது (ஸல்) ஸவ்தாவைத் திருமணம் செய்ய முன் வந்தார்கள்.
    நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு முஸ்லிம்கள் இஸ்லாமிய எதிரிகளிடம் விவரிக்க முடியாத அளவிற்குத் துன்பங்களுக்கும் வசைமொழிகளுக்கும் ஆளானதால் இரண்டாவது முறையாக ஹபஷாவிற்கு அதாவது அபிசீனியாவிற்கு நாடு துறந்து மக்கள் ஹிஜ்ரா சென்றபோது, ஆரம்பக் காலத்திலேயே இஸ்லாமைத் தழுவிய ஸவ்தா (ரலி) மற்றும் அவரது கணவர் சக்ரான் இப்னு அம்ருவும், ஹபஷாவிற்கு (எத்தியோப்பியா) சென்றனர்.

    ஹபஷாவிலேயே உடல்நிலை சரியில்லாமல் அகதியாகச் சென்ற ஸவ்தாவின் கணவர் சக்ரான் இறந்துவிட்டார். அதற்குப் பின் ஸவ்தா (ரலி) மக்காவிற்குத் திரும்பி வந்து “இத்தா” (இடைக்காலக் காத்திருப்புக் காலம்) இருந்தார். அதன் பிறகு அவருடைய வயதான தந்தை ஜம்ஆ(ரலி)வுடன் தங்கியிருந்தார். ஸவ்தாவுக்குக் குழந்தைகளுமிருந்தார்கள்.

    இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக தமது வீட்டையும் நாட்டையும்விட்டு அகதியாக தங்கியிருந்து திரும்பி வந்து சிரமப்படும் ஸவ்தாவைப் பற்றி அறிந்த நபி முஹம்மது (ஸல்) ஏற்கெனவே கதீஜா (ரலி) அவர்கள் மறைந்து விட்ட நிலையில், தன்னைவிட வயதில் மூத்தவரான ஸவ்தாவைத் திருமணம் செய்ய முன் வந்தார்கள்.

    அந்தச் செய்தியை கவ்லா பின்த் ஹகீம் (ரலி) சென்று ஸவ்தா (ரலி) அவர்களிடம் சொல்ல. நபி முஹம்மது (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமில்ல, முழு மனித குலத்திற்கே மிக உயர்ந்த வழிகாட்டும் தலைவர், அழகிய குணங்களும், உயர்ந்த பண்புகளும், சிறந்த பழக்க வழக்கங்களும், பெருந்தன்மையும் கொண்டவர் என்று தெரிந்த ஸவ்தா முகம் மலர்ந்தவர்களாக சம்மதம் தெரிவித்து, தனது தந்தையிடம் கேட்கும்படி சொன்னார்கள்.

    தந்தை ஜம்ஆவிடம் கவ்லா இவ்விஷயத்தைப் பற்றித் தெரிவிக்க மகளின் சம்மதத்தை அறிந்து இசைவு தெரிவித்தார். நபி முஹம்மது (ஸல்) அவர்களும் ஸவ்தா (ரலி) மணமுடித்தனர்.

    ஸவ்தா (ரலி) உயரமான, கனத்த சரீரமுள்ளவராக இருந்தார்கள். பக்குவமான பொறுப்புள்ள மனைவியாக தனது குழந்தைகளோடு சேர்த்து நபி முஹம்மது (ஸல்) அவர்களின் குழந்தைகளையும் சிறப்பாகப் பராமரித்து வளர்த்தார்கள். நபிகளாரின் வாழ்க்கை முழுவதும் சேர்ந்திருந்து உற்ற துணைவியாக நபிகளாருக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துத் தொண்டு செய்து நபி முஹம்மது (ஸல்) அவர்களைத் திருப்திப்படுத்துவதில் அதிகக் கவனமும், விருப்பமும் கொண்டு செயல்பட்டார்.

    ஸஹீஹ் புகாரி 2:25:680, ஸஹீஹ் முஸ்லிம் 17:2900, இப்னு கதீர்

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×