search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாத்தைத் தழுவியதால் ஏற்பட்ட அவதிகளும் ஆனந்தமும்
    X

    இஸ்லாத்தைத் தழுவியதால் ஏற்பட்ட அவதிகளும் ஆனந்தமும்

    ஒவ்வொருவரும் இஸ்லாத்தை ஏற்கும்போது பல துன்பத்திற்கும் ஆளானார்கள். அந்தத் துன்பத்திலும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் இன்பம் கண்டவர்களாகவே இருந்தனர்.
    கிஃபார் என்ற குலத்தைச் சேர்ந்தவர் அபூதர் (ரலி) என்பவருக்கு நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாமிற்கு அழைப்பு விடுப்பது பற்றிய தகவல் வந்தது. அதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள அவருடைய சகோதரர் அனீஸை அனுப்பினார்கள். அனீஸ் மக்காவிற்கு வந்து நபிகளாரை பற்றித் தெரிந்து கொண்டு அவருடைய ஊருக்குத் திரும்பி அபூதரிடம் “நான் நபி முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அவர் தீமைகளிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் இருக்கிறார். நன்மைகளைச் செய்யும்படியும் கட்டளையிடுகிறார்” என்று சொன்னார். அபூதருக்கு அந்தத் தகவல் போதுமானதாக இல்லாததால், அவரே நேரடியாக நபிகளாரைப் பற்றித் தெரிந்து கொள்ள மக்காவிற்குச் சென்றார்.

    நபி முஹம்மது (ஸல்) அவர்களைத் தேடி வந்திருப்பதாகக் காட்டிக் கொள்ளாமல், யாரிடமும் நேரடியாக விசாரிக்காமல் நபிகளாரைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் ‘ஸம் ஸம்’ தண்ணீரைக் குடித்துக் கொண்டு கஅபாவில் தங்கினார்.

    அந்த இடத்தில் அபூதரைச் சந்தித்த அலீ (ரலி), ஊருக்குப் புதியவர் அபூதர் என்பதை இனம் கண்டு கொண்டு, தமது வீட்டிற்கு அபூதரை விருந்தினராக அழைத்தார். அபூதரும் அந்த இரவு அலீ (ரலி) அவர்களுடன் தங்கிவிட்டு, மறுநாள் காலை மறுபடியும் நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி மறைமுகமாக விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றார். யாரும் எதுவும் நபிகளாரைப் பற்றி அங்கு பேசவில்லை.

    மறுபடியும் அலீ (ரலி), அபூதரை அங்கே பார்த்தார். அபூதரிடம் சென்று நேரடியாக “இந்த ஊருக்கு நீங்கள் வந்த காரணத்தை நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார். நேரடியாகக் கேட்டவுடன் மறைக்க முடியாமல் அபூதர் “நான் இங்கே தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருப்பவரை பற்றித் தெரிந்து கொள்ள வந்தேன். இது குறித்து யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்” என்றும் கேட்டுக் கொண்டார்.

    அதற்கு அலீ (ரலி) “நீங்கள் சரியான பாதையைத்தான் அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம்தான். நீங்கள் விரும்பினால் என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்களும் நுழையுங்கள். வழியில் நமக்கு ஆபத்து விளைவிக்கும் யாரையும் நான் கண்டால், என் செருப்பைச் சரி செய்பவனைப் போல் நான் குனிந்து சுவரோரமாக நிற்பேன். நீங்கள் நடந்து கொண்டே இருங்கள்” என்று விளக்கிய பிறகு இருவரும் நடந்தனர்.

    அவர்கள் ஒருவழியாக நபி முஹம்மது (ஸல்) அவர்களை அடைந்தனர். நபிகளாரிடம் தனக்கு இஸ்லாத்தை எடுத்துரைக்கும்படி அபூதர் கேட்டுக் கொண்டார். நபிகளார் விவரிக்க, அதே இடத்தில், அதே நிமிடத்தில் அபூதர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

    நபிகள் நாயகம் (ஸல்) அபூதரிடம் “அபூதரே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட விஷயத்தை மறைத்து விடுங்கள். இங்கு நிலைமை மோசமாக உள்ளது. அதனால் நீங்கள் உங்கள் ஊருக்குச் செல்லுங்கள். இஸ்லாம் மேலோங்கிவிட்ட செய்தி உங்களை எட்டும்போது எங்களிடம் வாருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அபூதர் “உங்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இந்த ஏகத்துவக் கொள்கையை அவர்களுக்கிடையே உரக்கச் சொல்வேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறி, நேராக இறையில்லத்திற்கு வந்தார்.

    அந்த இடத்தில் குறைஷிகள் அங்கே நிறைந்து இருந்தனர். அபூதர், “குறைஷி குலத்தாரே! அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை' என்று நான் உறுதி கூறுகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்' என்றும் நான் உறுதி கூறுகிறேன்” என்று சொன்னார். உடனே, குறைஷியர் “மதம் மாறிய துரோகியை அடித்துக் கொல்லுங்கள்” என்று கூறினர்.

    சிலர் எழுந்து வந்து அபூதரை கடுமையாகத் தாக்கினர். அப்போது அப்பாஸ் (ரலி) அபூதரை அடையாளம் கண்டு கொண்டு, அபூதருக்கு அடிபடாமல் அவர் மீது கவிழ்ந்து அடிப்பவர்களைத் தடுத்தவராக, குறைஷிகளை நோக்கி, 'உங்களுக்கு என்னவாயிற்று? கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் வாணிபத்திற்காகக் கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது? அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்கள். உடனே, குறைஷியர் அபூதரை விட்டு விலகிவிட்டனர்.

    மறுநாள் காலை மறுபடியும் அபூதர் இறையில்லத்திற்குத் திரும்பிச் சென்று முன்தினம் சொன்னதைப் போன்றே சொன்னார். குறைஷியர் மறுபடியும் தாக்க, அப்பாஸ் (ரலி) மறுபடியும் குறைஷியருக்கு விளக்கி அவர்களைத் தடுத்தார். இப்படி ஒவ்வொருவரும் இஸ்லாத்தை ஏற்கும்போது பல துன்பத்திற்கும் ஆளானார்கள். அந்தத் துன்பத்திலும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்க் கொண்டதால் இன்பம் கண்டவர்களாகவே இருந்தனர்.

    ஸஹீஹ் புகாரி 4:61:3522

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×